Published : 15 Sep 2024 08:14 AM
Last Updated : 15 Sep 2024 08:14 AM
சென்னை: கேரள மக்களின் திருவிழாவான ஓணம்பண்டிகை இன்று வெகு விமரிசையாக கொண்டாடப்படுகிறது. இதையொட்டி முதல்வர் மற்றும் அரசியல் கட்சி தலைவர்கள் வெளியிட்ட வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது:
முதல்வர் மு.க.ஸ்டாலின்: நல்லாட்சி புரிந்த மன்னனை நேருக்கு நேர் எதிர்கொள்ள முடியாமல் சூழ்ச்சியாலும் வஞ்சகத்தாலும் வீழ்த்தினாலும் அவனை மக்கள் மனங்களில் இருந்து அகற்ற முடியாது என்பதை உணர்த்தும் கொண்டாட்டமாகவே ஓணத்தைக் காணவேண்டும். பெருமழை விளைவித்த பாதிப்புகளில் இருந்து மலையாளிகளுக்கே உரிய போராட்ட குணத்துடன் மீண்டு வரும் கேரள மக்களுக்கு ஊக்கமும் உற்சாகமும் அளிப்பதாக இந்த ஓணம் அமையும் என்று நம்புகிறேன்.
அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி: அன்பு, அமைதி, சகோதரத்துவம் வளர்க்கப்பட வேண்டும். அகந்தையும், ஆணவமும் அகற்றப்பட வேண்டும் என்ற கருத்தை அறியும் வகையில் மலையாள மொழி பேசும்மக்களால் கொண்டாடப்படும் ஓணத்திருநாளில் அனைவருக்கும் ஓணம் நல்வாழ்த்துகள்.
தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை: உலகெங்கிலும் உள்ள மலையாள மக்கள் மொழி, மத, சாதி, இன வேறுபாடின்றி கொண்டாடும் ஓணம் பண்டிகை மிகவும்சிறப்பு வாய்ந்தது. சமூக நல்லிணக்கத்தோடு வாழ்ந்து வரும் மலையாளமக்கள் அனைவருக்கும் வாழ்த்துகள்.
பாமக நிறுவனர் ராமதாஸ்: உலகம் முழுவதும் உள்ள மலையாளம் பேசும் மக்களுக்கு ஓணம் நல்வாழ்த்துகள். வாழ்க்கையில் நாம் அனுபவித்து வரும் துன்பங்களை விலக்கி, இன்பங்களையும் வரவேற்பதற்கான நன்நாள் இது. அந்தவகையில் ஓணத்தை மகிழ்ச்சியாக வரவேற்போம்.
தமாகா தலைவர் ஜி.கே.வாசன்: மலையாள மொழி பேசும் மக்கள் வாழ்வில் துன்பம் விலகி, நன்மை பெருகவும், தடைகள் விலகி, வெற்றிகள் சேரவும் வாழ்த்துகிறேன்.
முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், வி.கே.சசிகலா உள்ளிட்டோரும் ஓணம் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT