Published : 15 Sep 2024 08:45 AM
Last Updated : 15 Sep 2024 08:45 AM

ஓணம் பண்டிகையை முன்னிட்டு தோவாளை சந்தையில் 150 டன் பூக்கள் விற்பனை

கோப்புப்படம்

நாகர்கோவில்: ஓணம் பண்டிகையை முன்னிட்டு கன்னியாகுமரி மாவட்டம் தோவாளை மலர்ச் சந்தையில் 150 டன் பூக்கள் விற்பனையாகின.

நாடு முழுவதும் இன்று (செப். 15) ஓணம் பண்டிகை கொண்டாடப்படுகிறது. கேரள எல்லையை ஒட்டியுள்ள கன்னியாகுமரியில், மலையாள மொழி பேசும் மக்கள் வசிக்கும் பகுதிகளில் ஓணம் நிகழ்ச்சிகள் ஏற்கெனவே களைகட்டியுள்ளன. களியக்காவிளை, மார்த்தாண்டம், குலசேகரம், தக்கலை, பத்மநாபபுரம், திற்பரப்பு, நாகர்கோவில் உள்ளிட்ட பகுதிகளில் ஓணம் ஊஞ்சல் ஆடியும், அத்தப்பூ கோலமிட்டும் மக்கள் ஓணத்தை வரவேற்று வருகின்றனர்.

ஓணம் கொண்டாட்டத்துக்காக கன்னியாகுமரி மாவட்டம் தோவாளை மலர் சந்தையில் இருந்து டன் கணக்கில் கேரளாவுக்கு வியாபாரிகள் பூக்களை வாங்கிச் செல்வர். ஆனால், இந்த ஆண்டு வயநாடு நிலச் சரிவால் கேரள மாநிலத்தில் ஓணம் கொண்டாட்டம் ஆடம்பரமின்றி நடைபெறுகிறது.

ஆனாலும், கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த உள்ளூர் வியாபாரிகள், கேரள வியாபாரிகள், பொதுமக்கள் தோவாளைக்கு வந்து, அத்தப்பூ கோலத்துக்கான கிரேந்தி, வாடாமல்லி, கோழிக்கொண்டை, சம்பங்கி, தாமரை போன்ற வண்ண மலர்களை ஆர்வமுடன் வாங்கிச் சென்றனர்.

ஓணத்துக்கான சிறப்பு சந்தை நேற்று முன்தினம் மாலை தொடங்கி இரவு முழுவதும் தோவாளையில் நடைபெற்றது. மதுரை, பெங்களூரு, ஓசூர், உதகை, திண்டுக்கல், மானாமதுரை, ராஜபாளையம், சத்தியமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து பூக்கள் அதிக அளவில் கொண்டு வரப்பட்டிருந்தன. வழக்கத்தைவிட 20-க்கும் மேற்பட்ட லாரிகளில் பூக்கள் குவிந்தன. நேற்று காலை வரை நடந்த ஓணம் சிறப்பு சந்தையில் 150 டன் பூக்கள் விற்பனையாகின. எனினும், முந்தைய ஆண்டுகளைவிட இந்த ஆண்டு விற்பனை குறைவு என்று வியாபாரிகள் தெரிவித்தனர்.

மல்லிகைப்பூ கிலோ ரூ.1.700-க்கும், பிச்சிப்பூ ரூ.1,350-க்கும் விற்பனையானது. வாடாமல்லி ரூ.180, கோழிக்கொண்டை ரூ.60, கிரேந்தி ரூ.60, ரோஜா ரூ.230, கொழுந்து ரூ.150, சம்பங்கி ரூ.250, தாமரை ஒன்று ரூ.10 என்ற விலையில் விற்பனை செய்யப்பட்டன.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x