Last Updated : 14 Sep, 2024 09:28 PM

3  

Published : 14 Sep 2024 09:28 PM
Last Updated : 14 Sep 2024 09:28 PM

மீனவர்களை மொட்டையடித்து அனுப்பிய இலங்கை அரசை கண்டித்து தமிழக மீனவர்கள் ஆர்ப்பாட்டம்

இலங்கை அரசையும், மத்திய அரசையும் கண்டித்து தங்கச்சிமடத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மீனவர்கள்.

ராமேசுவரம்: விடுதலை செய்யப்பட்ட மீனவர்களை மொட்டையடித்து அனுப்பியதால், இலங்கை அரசைக் கண்டித்து தங்கச்சிமடத்தில் மீனவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ராமேசுவரத்தில் இருந்து கடந்த மாதம் 27-ம் தேதி மீன்பிடிக்கச் சென்ற ஒரு விசைப்படகையும், அதிலிருந்த 8 மீனவர்களையும் இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டியதாக கைது செய்து, யாழ்ப்பாணம் சிறையில் அடைத்தனர். சிறை தண்டனைக்குப்பின் இவர்களின் வழக்கு கடந்த 5-ம் தேதி மன்னார் நீதிமன்றத்திற்கு விசாரணைக்கு வந்தபோது வழக்கை விசாரித்த நீதிபதி ரஃபீக் இன்னாசி, ராஜா, சசிக்குமார், மாரி கிங்ஸ்டன், மெக்கான்ஷ் ஆகிய 5 மீனவர்களை விடுதலை செய்ததுடன், தலா ரூ.50 ஆயிரம் அபதாரம் செலுத்தவும் உத்தரவிட்டார். மேலும் கணேசன, சேசு, அடைக்கலம் ஆகிய 3 மீனவர்கள் இரண்டாவது முறையாக எல்லைதாண்டி வந்ததாக கூறி ஆறு மாதங்கள் கடுங்காவல் தண்டனையும், அவர்களுக்கும் தலா ரூ.50 ஆயிரம் அபதாரமும் கட்ட உத்தரவிட்டார்.

இதனையடுத்து 3 மீனவர்களும் மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டனர். விடுவிக்கப்பட்ட 5 மீனவர்களுக்கு உறவினர்கள் கடன் வாங்கி 7-ம் தேதி பணத்தை செலுத்தியுள்ளனர். ஆனால் 6-ம் தேதி அபதாரத் தொகை செலுத்த வில்லை என சிறைத் துறையினர் அவர்களை கைவிலங்கிட்டு மொட்டை அடித்தும், இலங்கை கைதிகள் அடைக்கப்பட்டுள்ள சிறைச்சாலை கழிவறைகளை சுத்தம் செய்ய வைத்து, வளாகத்திலுள்ள கழிவுநீர் கால்வாய்களையும் சுத்தம் செய்ய வைத்து கொடுமைப் படுத்தியதாகவும், சொந்த ஊர் திரும்பிய மீனவர்கள் வேதனையுடன் தெரிவித்தனர்.

பின்னர் 5 மீனவர்களும் நேற்று (செப்.13) காலை மெர்ஹானா முகாமில் இருந்து விமான மூலம் இரவு சென்னை வந்தடைந்ததாக கூறினர். மீனவர்கள் இன்று (செப்.14) பகல் 1 மணியளவில் சொந்த ஊரான தங்கச்சிமடத்துக்கு வந்து சேர்ந்தனர். மீனவர்கள் மொட்டை அடிக்கப்பட்டு வந்ததை கண்ட அவர்களின் குடும்பத்தினர் கதறி அழுதனர். இதற்கு மீனவர்கள் தரப்பில் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.

அதனையடுத்து இலங்கை அரசாங்கத்தின் தொடர் அத்துமீறல் மற்றும் மனித நேயமற்ற செயலை கண்டித்தும், மத்திய அரசு மீனவர்கள் பிரச்சனையில் எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் மவுனம் காப்பதற்கு கண்டனம் தெரிவித்தும், ராமேசுவரம் - மதுரை தேசிய நெடுஞ்சாலையில் தங்கச்சிமடம் பேருந்து நிறுத்தம் அருகே மீனவர்கள் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் மீனவ சங்க நிர்வாகிகள் ஜேசுராஜா, எமரிட் மற்றும் மீனவர்கள், அவர்களின் குடும்பத்தினர் கலந்து கொண்டனர்.

மீனவர் சங்க தலைவர் எமரிட் கூறும்போது, “மொட்டை அடிக்கப்பட்டவர்கள் தமிழக மீனவர்கள் தான் என எண்ண வேண்டாம், எங்களுடைய வரிப்பணத்தில் வாழும் இலங்கை அரசு எங்கள் மீனவர்களை மொட்டை அடித்து மனித நேயமற்ற அரக்கர்களாக கொடுமைப்படுத்தி உள்ளனர். மத்திய அரசு இதையும் வேடிக்கை பார்ப்பது நல்லதல்ல. இது இந்தியாவை அவமானப்படுத்தியதாகத் தான் நாங்கள் கருதுகிறோம்.

ஆகவே, இதுவரை இலங்கை கடற்படை எங்களை அடித்து கொடுமைப்படுத்தியது, படகுகளை சிறை பிடித்தது, அதையெல்லாம் பொறுத்துக் கொண்டிருந்தோம். ஆனால் இனிமேலும் இவ்வாறான மனிதநேயமற்ற செயலை பொறுத்துக் கொள்ள மாட்டோம். ஆகவே மத்திய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்காவிட்டால் தமிழகம் தழுவிய மாபெரும் போராட்டங்களை தொடர்ச்சியாக மத்திய அரசுக்கு எதிராகவும், இலங்கை அரசுக்கும் எதிராகவும் நடத்துவோம்” என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x