Published : 14 Sep 2024 08:10 PM
Last Updated : 14 Sep 2024 08:10 PM

‘அன்னபூர்ணா’ விவகாரம் மூலம் திமுக செய்வது பிரிவினை அரசியல்: தமிழக பாஜக விமர்சனம்

சென்னை: “கோவை தொழில்துறையினரின் கோரிக்கைகளை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் நேரில் கேட்டது தவறா?, தொழில்துறையினர் மீது முதல்வர் ஸ்டாலினுக்கு அக்கறை இருந்தால் மின் கட்டணம், சொத்து வரியை குறைக்க வேண்டும். அதைவிடுத்து அரசியலுக்காக நல்லது செய்ய வந்த நிதி அமைச்சரை விமர்சித்து திசை திருப்ப வேண்டாம்,” என்று தமிழக பாஜக செய்தி தொடர்பாளர் ஏ.என்.எஸ்.பிரசாத் சாடியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “அமெரிக்கப் பயணத்தை முடித்துக் கொண்டு சென்னை திரும்பிய முதல்வர் மு.க.ஸ்டாலின் விமான நிலையத்தில் செய்தியார்களிடம் பேசும்போது, ‘ஜிஎஸ்டி குறித்த தொழிமுனைவோரின் நியாயமான கோரிக்கைகளை முன்வைத்தவரை, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கையாண்ட விதம் வெட்கப்பட வேண்டிய ஒன்று என்று கூறியிருக்கிறார்.

இந்தியாவிலேயே தமிழகம் முன்னேறிய மாநிலமாக இருப்பதற்கு கோவை, திருப்பூர், ஈரோடு, கரூர், நாமக்கல், திருச்செங்கோடு உள்ளிட்ட கொங்குமண்டலத்தின் தொழில் வளர்ச்சிதான் என்பது மறுக்க முடியாத உண்மை. இதற்கு அரசின் பங்களிப்பு தனிப்பட்ட நபர்களின் தொழில் ஆர்வமும், சமூதாயமாக இணைந்து தொழிலில் ஈடுபட்டதும் மிக முக்கியமான காரணம். இப்போது தொழில் துறையில் மற்ற மாநிலங்களும் வேகமாக முன்னேறி வருகின்றன. திமுக அரசு மின் கட்டணம், சொத்து வரியை கடுமையாக உயர்த்தியுள்ளது. இதனால் கோவையில் தொழில்துறை பெரும் நெருக்கடியை சந்தித்து வருகிறது.

இந்தச் சூழலில்தான் தொழில் துறையினரின் கோரிக்கைகளை நேரில் கேட்பதற்காக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நேரில் வருகை தந்தார். அப்போது ஹோட்டல் உரிமையாளர் ஒருவர் (அன்னபூர்ணா உணவக உரிமையாளர் சீனிவாசன்) பேசியது விவகாரத்தை பெரிதாக்கி மீண்டும் பிரிவினை அரசியலை திமுக கையிலெடுத்துள்ளது. நிர்மலா சீதாராமன் கோவைக்கு நேரில் வந்து தொழில் துறையினரின் குறைகளை கேட்டது தவறு என்கிறாரா முதல்வர் ஸ்டாலின்? ஜிஎஸ்டி வரி என்பது மத்திய அரசு விதிக்கும் வரி அல்ல. மாநிலங்களும் அடங்கிய ஜிஎஸ்டி கவுன்சில்தான் விவாதம் நடத்தி ஒவ்வொரு பொருளுக்குமான வரி விகிதத்தை தீர்மானிக்கிறது.

பெரும்பான்மை மாநிலங்களின் ஆதரவு இல்லாமல் எந்தப் பொருளுக்கும் ஜிஎஸ்டி வரி விதிக்க முடியாது. இது தெரிந்தும் முதல்வர் ஸ்டாலின், நிர்மலா சீதாராமனை ஏன் விமர்சிக்க வேண்டும். டெல்லியில் இருந்து வந்து நிர்மலா சீதாராமன் தொழில் துறையினர் கூட்டத்தை கூட்டி கேள்வி கேளுங்கள். பதில் சொல்கிறேன் என்கிறார். அதுபோன்றதொரு கோரிக்கை, குறை கேட்பு கூட்டத்தை முதல்வர் ஸ்டாலின் கூட்டியிருக்கிறாரா? அப்படியே கூட்டம் நடத்தினாலும் முதல்வர் ஸ்டாலினை நோக்கி நக்கலாக கேள்வி கேட்க முடியுமா?

சிறு பிரச்சினையை ஊதி பெரிதாக்கி ஆதாயம் தேடும் முயற்சி வெற்றி பெறாது என்பதை முதல்வர் ஸ்டாலினுக்கு வலியுறுத்த விரும்புகிறேன். தொழில் துறையினர் மீது முதல்வர் ஸ்டாலினுக்கு உண்மையான அக்கறை இருந்தால் மின் கட்டணம், சொத்து வரியை குறைக்க வேண்டும். அதைவிடுத்து அரசியலுக்காக நல்லது செய்ய வந்த நிர்மலா சீதாராமனை விமர்சித்து திசை திருப்ப வேண்டாம் என கேட்டுக் கொள்கிறேன்,” என்று அவர் கூறியுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Loading comments...

 
x