Published : 14 Sep 2024 05:17 PM
Last Updated : 14 Sep 2024 05:17 PM

தமிழகத்தில் குருப்-2 முதல்நிலைத் தேர்வை 5.81 லட்சம் பேர் எழுதினர் - ஆப்சென்ட் 2.12 லட்சம்!

திண்டுக்கல் எம்.வி.எம் அரசு கலைக்கல்லூரியில் அமைக்கப்பட்டிருந்த டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வு மையத்தில் தேர்வு எழுதிய தேர்வர்கள் | படம் : நா. தங்கரத்தினம்.

சென்னை: தமிழகத்தில் குருப்-2 மற்றும் குருப்-2ஏ முதல்நிலைத் தேர்வை 5 லட்சத்து 81 ஆயிரம் பேர் எழுதினர். தேர்வுக்கு விண்ணப்பித்தவர்களில் 2 லட்சத்து 12 ஆயிரம் பேர் ஆப்சென்ட் ஆனார்கள். பொது அறிவு பகுதி மற்றும் பொதுத் தமிழ் பகுதியில் கேள்விகள் சற்று கடினமாக இருந்ததாக பல தேர்வர்கள் கருத்து தெரிவித்தனர்.

குருப்-2 பதவிகளில் 507 காலியிடங்கள், குருப்-2ஏ பதவிகளில் 1,820 காலியிடங்கள் என மொத்தம் 2,327 காலியிடங்களை நிரப்புவதற்கான ஒருங்கிணைந்த முதல்நிலைத் தேர்வு தமிழகம் முழுவதும் 2,763 மையங்களில் சனிக்கிழமை நடந்தது. தேர்வெழுத 7 லட்சத்து 93 ஆயிரத்து 966 பேர் அனுமதிக்கப்பட்ட போதிலும், அவர்களில் 5 லட்சத்து 81 ஆயிரத்து 305 பேர் மட்டுமே தேர்வெழுதினர். எஞ்சிய 2 லட்சத்து 12 ஆயிரத்து 661 பேர் ஆப்சென்ட் ஆனார்கள். தேர்வு காலை 9.30 மணிக்கு தொடங்கி மதியம் 12.30 மணிக்கு முடிவடைந்தது.

சென்னையில் 251 மையங்களில் ஏறத்தாழ 70 ஆயிரம் பேர் தேர்வெழுதினர். எழும்பூர் மாநில பெண்கள் மேல்நிலைப் பள்ளி மையத்தில் டிஎன்பிஎஸ்சி தலைவர் எஸ்.கே.பிரபாகர் ஆய்வு செய்தார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியது: “குருப்-2 முதல்நிலைத் தேர்வுக்கான உத்தேச விடைகள் (கீ ஆன்ஸர்) ஒரு வாரத்தில் தேர்வாணையத்தின் இணையதளத்தில் வெளியிடப்படும். உத்தேச விடைகளில் ஏதேனும் ஆட்சேபனை இருந்தால் தேவையான ஆதாரங்களுடன் ஆன்லைனில் முறையிடலாம். விடைத்தாள் மதிப்பீட்டு பணி 2 அல்லது 3 மாதங்கள் நடைபெறும். முதல்நிலைத் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு அடுத்தகட்டமாக மெயின் தேர்வு நடத்தப்படும்.

நாங்கள் வெளியிட்ட வருடாந்திர தேர்வு கால அட்டவணையின்படி, இந்த ஆண்டு 10 தேர்வுகள் நடத்தப்பட வேண்டும். அதன்படி, 8 தேர்வுகளுக்கான அறிவிப்புகள் வெளியிடப்பட்டு தேர்வுகளும் நடத்தப்பட்டு வருகின்றன. இன்னும் 2 தேர்வுகளுக்கான அறிவிப்பு வெளியிடப்படும். இந்த ஆண்டு இதுவரை வெவ்வேறு துறைகளுக்கு 10,215 பேர் தேர்வுசெய்யப்பட்டு பணிவாய்ப்பு பெற்றுள்ளனர். இன்னும் 10 ஆயிரம் பேரை தேர்வு செய்வதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. ஏற்கெனவே நடந்த குருப்-4 தேர்வுக்கான விடைத்தாள்களை திருத்தும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது. தேர்வு முடிவுகள் வெகுவிரைவில் வெளியிடப்படும்,” என்று அவர் கூறினார்.

வினாத்தாள் கடினம்: குருப்-2 முதல்நிலைத் தேர்வில் பொது அறிவு மற்றும் கணிதத்திறன் தொடர்பான 100 கேள்விகளும், பொதுத் தமிழ் அல்லது பொது ஆங்கிலம் தொடர்பான 100 கேள்விகளும் கேட்கப்பட்டன. பொது அறிவு பகுதி மற்றும் பொது தமிழ் பகுதியில் வினாக்கள் சற்று கடினமாக இருந்ததாக பல தேர்வர்கள் கருத்துத் தெரிவித்தனர். அண்மைக்கால நிகழ்வுகள் தொடர்பான கேள்விகள் பெரிதாக இடம்பெறவில்லை என்றும் அவர்கள் ஆதங்கப்பட்டனர். அதேசமயம், பொது ஆங்கிலம் பகுதி வினாக்கள் எளிதாக இருந்ததாக அப்பகுதியை தேர்வு செய்தவர்கள் கூறினர்.

கட் ஆப் மார்க் குறைய வாய்ப்பு: முதல்நிலைத் தேர்வில் மெயின் தேர்வுக்கு ‘ஒரு காலியிடத்துக்கு 10 பேர்’ என்ற விகிதாச்சார அடிப்படையில் தேர்வர்கள் தேர்வு செய்யப்படுவர். அந்த வகையில், தற்போது 2,327 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டிருப்பதால் ஏறத்தாழ 24 ஆயிரம் பேர் மெயின் தேர்வெழுத தகுதிபெறுவர். ஒருவேளை, காலியிடங்களின் எண்ணிக்கை அதிகரித்தால் இன்னும் அதிகமானோருக்கு மெயின் தேர்வெழுத வாய்ப்புக் கிடைக்கும்.

முதல்நிலைத் தேர்வு சற்று கடினமாக இருப்பதாக தேர்வர்கள் மத்தியில் கருத்து நிலவுவதால் கட் ஆப் மதிப்பெண் குறைய வாய்ப்புள்ளது. சாதாரணமாக 200 கேள்விகளுக்கு 150 அல்லது 160 கேள்விகளுக்கு சரியாக விடையளித்தால் மெயின் தேர்வெழுதலாம். வினாக்கள் கடினமாக இருந்ததாக தேர்வர்கள் கூறியிருப்பதால் சுமார் 140 கேள்விகளுக்கு சரியாக விடையளித்திருந்தால் மெயின் தேர்வெழுத வாய்ப்புக் கிடைக்கலாம்.

கூட்டாட்சிக்கு எதிரானது ஆளுநர் அலுவலகம் - ஆளுநர் பதவி தொடர்பாக சர்ச்சைக்குரிய வினா - பதில்: குருப்-2 முதல்நிலைத்தேர்வின் பொது அறிவு பகுதியில் ஆளுநர் பதவி தொடர்பாக சர்ச்சைக்குரிய வினா - பதில் இடம்பெற்றிருந்தது. ‘கூற்று - காரணம்’ வடிவிலான அந்த கேள்வியில், கூற்று பகுதியில், ‘இந்திய கூட்டாட்சியில் மாநில அரசின் தலைவர் மற்றும் மத்திய அரசின் பிரதிநிதி என இரு வகையான பணிகளைச் செய்கிறார்’ என்று கொடுக்கப்பட்டு, காரணம் பகுதியில், ‘ஆளுநர் அலுவலகம் கூட்டாட்சி முறைக்கு எதிரானது’ என்று கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த கேள்விக்கு பின்வரும் என 5 பதில்கள் தரப்பட்டிருந்தன. (A) கூற்று சரி. ஆனால் காரணம் தவறு, (B) கூற்று மற்றும் காரணம் சரி. மேலும் கூற்றுக்கான சரியான விளக்கமாக காரணம் உள்ளது, (C) கூற்று தவறு . காரணம் சரி, (D) கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி. ஆனால், கூற்றுக்கான சரியான விளக்கமாக காரணம் இல்லை. (E) விடை தெரியவில்லை.

மேற்கண்ட விடைகளில் சரியான விடையை தேர்வர்கள் தேர்வுசெய்ய வேண்டும். தமிழக ஆளுநர் கூட்டாட்சி தத்துவத்துக்கு எதிராக செயல்பட்டு வருவதாக அரசியல் கட்சிகள் தொடர்ந்து குற்றம்சாட்டி வரும் நிலையில், ஆளுநர் பதவி தொடர்பாக டிஎன்பிஎஸ்சி தேர்வில் சர்ச்சைக்குரிய வினா கேட்கப்பட்டிருப்பது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x