Published : 14 Sep 2024 04:40 PM
Last Updated : 14 Sep 2024 04:40 PM
காங்கயம்: காங்கயம் அருகே நாய்கள் துரத்தியதில் கிணற்றுக்குள் விழுந்து 16 ஆடுகள் உயிரிழந்த பரிதாப சம்பவம் நிகழ்ந்துள்ளது. தெரு நாய்களை கட்டுப்படுத்துவதில் உள்ளாட்சி அமைப்புகள் அலட்சியம் காட்டி வருவதால் திருப்பூர் மாவட்டத்தில் கால்நடை விவசாயிகள் பெரும் அச்சம் அடைந்துள்ளனர்.
திருப்பூர் மாவட்டம் காங்கயம் பகுதியில் தெரு நாய்கள் தொல்லை அதிகரித்து வருவதாக பொதுமக்கள் தரப்பில் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகிறது. இந்த நிலையில், காங்கயம் அடுத்த மறவம்பாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட செம்மண்குழி கிராமத்தில் பொன்னுசாமி என்பவர் சுமார் 35 செம்மறி ஆடுகளை வளர்த்து வந்தார். இவருக்கு விவசாயமும் ஆடு வளர்ப்பும்தான் பிரதான தொழில். வழக்கம்போல் பொன்னுசாமி வெள்ளிக்கிழமையும் ஆடுகளை தனது தோட்டத்தில் உள்ள பட்டியில் அடைத்துவிட்டு இரவு வீட்டுக்குச் சென்றுள்ளார். சனிக்கிழமை அதிகாலை அந்தப் பகுதியில் சுற்றித் திரிந்த தெரு நாய்கள் பட்டிக்குள் நுழைந்து ஆடுகளை கடிக்க முயன்றுள்ளன. இதில் நாய்களிடமிருந்து தப்பிய செம்மறி ஆடுகள் அங்கிருந்து தெறித்து ஓடியபோது, அருகில் இருந்த 40 அடி ஆழமுள்ள கிணற்றுக்குள் தவறி விழுந்துள்ளன.
இதை அறியாத பொன்னுசாமி, காலையில் ஆடுகளை மேய்ச்சலுக்கு ஓட்டுவதற்காக தோட்டத்துக்கு வந்து பட்டியில் பார்த்துள்ளார். அங்கு ஆடுகளைக் காணவில்லை. இதனால், அதிர்ச்சி அடைந்த அவர் அக்கம் பக்கத்தில் தேடியுள்ளார். அப்போது, கிணற்று பக்கத்திலிருந்து ஆடுகளின் சத்தம் கேட்டு அங்கு சென்று பார்த்துள்ளார். அப்போது 35 ஆடுகளும், கிணற்றுக்குள் இருப்பதை பார்த்து அதிர்ந்துள்ளார். உடனே அக்கம் பக்கத்தினருக்கு பொன்னுசாமி தகவல் தெரிவித்துள்ளார் .தகவலறிந்து காங்கயம் தீயணைப்பு துறையினரும் அங்கு வந்து கயிறுகளை கட்டி ஆடுகளை கிணற்றுக்குள் இருந்து மீட்டனர்.
இதில் கிணற்றுக்குள் விழுந்து தண்ணீரை அதிகமாக குடித்ததால் 16 ஆடுகள் இறந்துவிட்டன. ஆடுகள் பலியானதைப் பார்த்து பொன்னுசாமி குடும்பத்தினர் கதறி அழுதக் காட்சி அனைவரையும் கலங்கடித்தது. கடந்த 2 நாட்களுக்கு முன்பு இதே பகுதியைச் சேர்ந்த அப்புக்குட்டி என்பவரது தோட்டத்தில் வளர்த்த 3 ஆடுகளை தெரு நாய்கள் கடித்துக் கொன்றன. இப்பகுதியில் தொடர்ச்சியாக இதுபோன்ற சம்பவங்கள் நடப்பதால் தெரு நாய்களை கட்டுப்படுத்த உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இது குறித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் திருப்பூர் மாவட்டச் செயலாளர் ஆர்.குமார் நம்மிடம் பேசுகையில், “சமீப காலமாக திருப்பூர் மாவட்டத்தில் தெரு நாய்கள் கூட்டமாக சேர்ந்து கொண்டு விவசாயிகளின் வாழ்வாதாரமாக இருக்கக்கூடிய செம்மறி ஆடுகள், வெள்ளாடுகள், கன்றுக் குட்டிகள் ஆகியவற்றைக் கடித்துக் கொன்று வருகின்றன. அப்படித்தான் பொன்னுச்சாமியின் விவசாய பூமியில் உறங்கிக் கொண்டிருந்த ஆடுகளை கூட்டமாக சென்ற தெரு நாய்கள் கடித்துக் குதறி 5 ஆடுகளை கொன்றுள்ளன. மற்ற ஆடுகளும் நாய் கூட்டங்களால் விரட்டப்பட்டு அங்கிருந்த கிணற்றில் விழுந்துள்ளன. இந்தச் சம்பவத்தில் 16 ஆடுகள் மொத்தமாக உயிரிழந்துள்ளன. லட்சக்கணக்கான மதிப்புள்ள தனது ஆடுகளை இழந்து பாதிக்கப்பட்ட விவசாயி தவித்து வருகிறார்.
திருப்பூர் மாவட்டத்தில் நாய் தொல்லைகள் இருப்பது குறித்து மாவட்ட ஆட்சியரின் குறைதீர் கூட்டங்களில் விவசாய சங்கங்களின் தலைவர்கள் பலமுறை எடுத்துரைத்தும், மாவட்ட நிர்வாகமும், அரசும் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. இங்குமட்டுமல்லாது அருகில் உள்ள ஈரோடு மாவட்டத்திலும் பல சம்பவங்கள் இதுபோன்று நடந்துள்ளன. இதனால் விவசாயிகள் தங்களுக்கு ஏற்படும் இழப்பை ஈடுசெய்ய முடியாமல் தவித்து வருகின்றனர். கால்நடைகள் வைத்துள்ள விவசாயிகளும் இனிமேல் எப்படி கால்நடைகளை பாதுகாப்பது என்ற அச்சத்தில் உள்ளனர்.
நாய்கள் பிரச்சினையில் எங்களுக்குப் பொறுப்பு இல்லை என்று கால்நடை துறை தெரிவித்துவிட்டது. அவற்றைக் கட்டுப்படுத்த வேண்டிய உள்ளாட்சி நிர்வாகங்கள் இதைப் பற்றி கவலைப்படுவதில்லை. இனியும் இந்த விஷயத்தில் அலட்சியம் காட்டாமல், நாய்கள் கடித்து ஆடுகளை இழந்து பொருளாதார இழப்பைச் சந்தித்திருக்கும் விவசாயிகளுக்கு உரிய நஷ்ட ஈடு வழங்க வேண்டும். இதுபோன்ற சம்பவங்களை எதிர்காலத்தில் நடக்காமல் தடுப்பதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT