Published : 14 Sep 2024 01:44 PM
Last Updated : 14 Sep 2024 01:44 PM
தஞ்சாவூர்: “தமிழகத்தில் இந்த ஆண்டு 40 லட்சம் டன் நெல் கொள்முதல் செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது,” என உணவு மற்றும் கூட்டுறவு துறை முதன்மை செயலாளர் ஜெ.ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.
தஞ்சாவூர் அருகே மருங்குளத்தில் உள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை இன்று (செப்.14) நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்த ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: கடந்த செப்டம்பர் 1-ம் தேதி முதல் இந்த ஆண்டுக்கான கொள்முதல் பருவ காலம் தொடங்கியுள்ளது. புதிய விலையில் நெல் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது. இதுவரை தமிழக முழுவதும் 538 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளது. இவற்றின் மூலம் இதுவரை இந்த ஆண்டு 83,152 டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. விவசாயிகள் நெல்லை சாலைகளில் உலர்த்துவதை தவிர்த்து கொள்முதல் நிலையங்களில் உள்ள களத்தையும் பிற இடத்தையும் பயன்படுத்த முன்வர வேண்டும்.
தேவைப்படும் இடங்களில் களம் அமைத்து தர அந்தந்த மாவட்ட நிர்வாகம் தயாராக உள்ளது.விவசாயிகளிடம் கொள்முதல் செய்யப்படும் நெல்லை சேமித்து வைக்க போதுமான இடங்களில் குடோன்கள் தயார் நிலையில் உள்ளது. இந்த ஆண்டு கூட்டுறவு சங்கங்கள் மூலம் விவசாயிகளுக்கு ரூ.16,500 கோடி கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதில் தற்போது வரை ரூ. 4,405 கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது.
கடந்தாண்டு தமிழகம் முழுவதும் 34.96 லட்சம் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. இந்த ஆண்டு 40 லட்சம் டன் நெல் கொள்முதல் செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டு அதற்கான முன்னேற்பாட்டு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி வருகிறோம். தற்போது கொள்முதல் பருவ காலம் நடைபெறுவதால் அடுத்த மூன்று மாதத்திற்கு கொள்முதல் பணியை தீவிரப்படுத்த அதிகாரிகள் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
மாவட்டங்களில் தேவைப்படும் இடங்களில் நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்க அந்தந்த மாவட்ட ஆட்சியர்களுக்கு முழு அதிகாரம் அளிக்கப்பட்டு, விவசாயிகள் கொண்டு வரும் நெல்லை எக்காரணம் கொண்டும் காலதாமதம் செய்யாமல் கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.விவசாயிகள் எவ்வளவு நெல்லை கொண்டு வந்தாலும் கொள்முதல் செய்ய வேண்டும். அதிகாரிகள் புள்ளி விவரங்களுக்கு அடிமையாகாமல் களநிலவரங்களுக்கு ஏற்ற வகையில் ஒரு விவசாயிக்கு ஏக்கருக்கு 2,600 கிலோ என்ற சீலிங் இல்லாமல் கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கொள்முதல் நிலையங்களில் நடைபெறும் முறைகேடுகள் உள்ளிட்ட புகார்கள் உடனுக்குடன் சமூக வலைதளங்கள் உள்ளிட்ட செயலிகள் மூலம் வெளிப்படுத்தப்பட்டு வருகிறது. எனவே, இதையும் கண்காணித்து வருகிறோம். முறைகேடுகளை களைய நுகர்வோர் வாணிபக் கழகம் சார்பில் உள்ள விஜிலென்ஸ் துறை செயல்பட்டு வருகிறது.
அந்தத் துறையின் மூலமும் நடவடிக்கை எடுத்து வருகிறோம். விவசாயிகள் யாரேனும் புகார் அளிக்க முன்வந்தால் கொள்முதல் நிலையங்களில் உள்ள டோல் ஃப்ரீ எண்ணுக்கு அவசியம் தகவல் அளிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். இந்த ஆய்வின் போது தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் பிரியங்கா பங்கஜம் மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT