Last Updated : 14 Sep, 2024 11:29 AM

4  

Published : 14 Sep 2024 11:29 AM
Last Updated : 14 Sep 2024 11:29 AM

“இபிஎஸ் வெளிநாட்டுப் பயணத்தில் 10% ஒப்பந்தம் கூட நிறைவேறவில்லை” - முதல்வர் குற்றச்சாட்டு

முதல்வர் ஸ்டாலின்

சென்னை: பழனிசாமி முதல்வராக இருந்த போது மேற்கொண்ட வெளிநாட்டு பயணத்தில் 10 சதவீதம் ஒப்பந்தம் கூட நிறைவேறவில்லை என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். தமிழகத்துக்கு முதலீடுகளை ஈர்க்க அமெரிக்காவுக்கு அரசுமுறை பயணம் சென்ற முதல்வர் மு.க.ஸ்டாலின் 14 நாள் பயணத்தை முடித்துக் கொண்டு இன்று (சனிக்கிழமை) காலை சென்னை திரும்பினார். விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், கேள்விகளுக்கு அளித்த பதில்கள்:

முதலீடுகள் தொடர்பாகவும், அமெரிக்க பயணம் தொடர்பாகவும் வெள்ளை அறிக்கை வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் தொடர்ந்து கோரிக்கை வைக்கின்றனரே?

அமெரிக்க பயணத்துக்கு முன்னதாகவே, தமிழகத்தில் கடந்த 3 ஆண்டுகளில் வந்த முதலீடுகள் குறித்து நான் விளக்கமாக கூறியுள்ளேன். அதுமட்டுமின்றி தொழில்துறை அமைச்சர் புள்ளிவிவரங்களுடன் விளக்கியுள்ளார். சட்டப்பேரவையிலும் தெளிவாக கூறியுள்ளார். அதை குறிப்பாக எதிர்க்கட்சிகள் மட்டுமல்ல, எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமியும் படித்துப் பார்த்து தெரிந்து கொள்ள வேண்டும்.

பழனிசாமி முதல்வராக இருந்தபோது முதலீடுகளை ஈர்க்க வெளிநாடு செல்வதாகக் கூறினர். அதில் 10 சதவீத ஒப்பந்தம் கூட நிறைவேறவில்லை. அதற்கான ஆதாரம் என்னிடம் உள்ளது. அதை கூறினால் அவருக்கு மிகப்பெரிய அவமானமாக இருக்கும் என்பதால் அதை தவிர்த்துள்ளேன்.

தமிழகத்துக்கு கிடைக்க வேண்டிய நிதி வேண்டும் என்றால் புதிய கல்விக் கொள்கையை ஏற்க வேண்டும் என்று மத்திய அமைச்சர் உங்களுக்கு பதிலளித்துள்ளார். அதே போல் மெட்ரோ ரயில் திட்டம் 2-க்கு நாங்கள் கடனுதவி பெற்றுத்தந்துள்ளோம் என்று மத்திய நிதியமைச்சர் கூறியுள்ளார். இந்த இரண்டு பெரும் நிதித்தேவையை பிரதமரை சந்தித்து வலியுறுத்துவீர்களா?

நிச்சயமாக, உறுதியாக மெட்ரோ தொடர்பாக சந்திப்பேன். பள்ளிக் கல்வியில் புதிய கல்விக் கொள்கையை ஏற்பது குறித்து அமைச்சர்களை அதிகாரிகள் சந்தித்து வருகின்றனர். இதுகுறித்து பிரதமரிடத்தில் நேரம் கேட்டு, அவரை சந்தித்து வலியுறுத்த உள்ளேன் என்பதை உறுதியுடன் கூறிக் கொள்கிறேன்.

அமெரிக்க பயணத்தின் போது, எதிர்பார்த்த அளவுக்கு முதலீடுகள் கிடைத்துள்ளதா? குறைந்த அளவு முதலீடுகள் தான் ஈர்க்கப்பட்டதாக பாமக நிறுவனர் ராமதாஸ் குற்றம் சாட்டியுள்ளாரே?

இது அரசியல் நோக்கத்துடன் கூறப்படுவது. இதில் நாங்கள் எதிர்பார்த்தைது விட அதிக முதலீடுகள் வந்துள்ளது. உறுதியான முதலீடுகளாகவும் வந்துள்ளது. அதில் சந்தேகம் கொள்ள வேண்டிய அவசியம் இல்லை. இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x