Published : 14 Sep 2024 09:22 AM
Last Updated : 14 Sep 2024 09:22 AM

அமெரிக்கப் பயணம் முதல் அமைச்சரவை மாற்றம் வரை - தமிழகம் திரும்பிய முதல்வர் ஸ்டாலின் பேட்டி

சென்னை விமான நிலையத்தில் முதல்வர் ஸ்டாலின் பேட்டி

சென்னை: அமெரிக்க பயணத்தை முடித்துக்கொண்டு முதல்வர் ஸ்டாலின் இன்று (சனிக்கிழமை) காலை சென்னை திரும்பினார். தமிழகத்துக்கு தொழில் முதலீடுகளை ஈர்க்கும் நோக்கில், முதல்வர் ஸ்டாலின் கடந்த ஆகஸ்ட் 27-ம் தேதி இரவு அரசுமுறை பயணமாக அமெரிக்கா புறப்பட்டு சென்றார். சான் பிரான்சிஸ்கோவில் 29-ம் தேதி நடந்த தொழில் முதலீட்டாளர்கள் மாநாட்டில் பங்கேற்றார். கூகுள் உள்ளிட்ட நிறுவனங்களின் உயர் அலுவலர்களை சந்தித்து, தமிழகத்தில் முதலீடு செய்யுமாறு அழைப்பு விடுத்தார். செப்டம்பர் 2-ம் தேதி சிகாகோ சென்றார். அங்கும் தொழில் முதலீட்டாளர்களை சந்தித்து, தமிழகத்தில் முதலீடு செய்ய வருமாறு அழைப்பு விடுத்தார். இரு இடங்களிலும் பல்வேறு தமிழ் சங்கங்கள், தமிழ் அமைப்புகளின் நிர்வாகிகள், அமெரிக்காவாழ் தமிழர்களை சந்தித்தார்.

இந்நிலையில் அமெரிக்கப் பயணத்தை முடித்துக் கொண்டு சென்னை திரும்பிய முதல்வர் ஸ்டாலினுக்கு விமான நிலையத்தில் அமைச்சர்கள், அதிகாரிகள் பூங்கொத்து, புத்தகங்கள் கொடுத்து உற்சாக வரவேற்பு அளித்தனர். பின்னர் விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த முதல்வர் ஸ்டாலின் பல்வேறு தகவல்களையும் பகிர்ந்து கொண்டார்.

11,516 பேருக்கு வேலை வாய்ப்பு: அமெரிக்காவில் 17 நாட்களில் 25 நிறுவனங்களுடன் மேற்கொண்ட சந்திப்பில் ரூ.7,618 கோடி மதிப்பிலான 19 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின என்றார். மேலும், இதன் மூலம் 11,516 பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும். அரசின் வேண்டுகோளை ஏற்று ஃபோர்டு நிறுவனம் மீண்டும் தமிழகத்தில் செயல்பட முன்வந்துள்ளது. அமெரிக்கப் பயணம் தமிழ்நாட்டு மக்களுக்கான சாதனைப் பயணமாக அமைந்தது என்றும் முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார்.

பின்னர் செய்தியாளர்கள் தமிழக முதல்வரிடம் பல்வேறு கேள்விகளை முன்வைத்தனர். அவற்றின் விவரம் வருமாறு: > “கோவையில் ஹோட்டல் உரிமையாளர் ஒருவர் ஜிஎஸ்டி குறித்து கேள்வி கேட்ட விவகாரத்தில் நிதி அமைச்சர் நடந்த விதம் வெட்கப்பட வேண்டிய ஒன்று.” என்று கோவை அன்னபூர்ணா ஹோட்டல் உரிமையாளர் மன்னிப்பு வீடியோ விவகாரம் குறித்து முதல்வர் ஸ்டாலின் கருத்து தெரிவித்தார்.

> ” திருமாவளவன் நடத்தும் மது ஒழிப்பு மாநாடு அரசியல் மாநாடு அல்ல. அதை அவரே தெரிவித்துள்ளார்.” என்று விசிக மாநாட்டுக்கு அதிமுக உள்ளிட்ட அனைத்துக் கட்சிகளுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டது குறித்து கேள்விக்கு முதல்வர் பதிலளித்தார்.

> “வெளிநாட்டுப் பயணங்கள் மூலமாக ஈர்க்கப்படும் தொழில் முதலீடுகள் குறித்து நானும் தொழில்துறை அமைச்சரும் விளக்கம் அளித்துள்ளோம். இபிஎஸ் முதல்வராக இருந்தபோது மேற்கொண்ட வெளிநாட்டுப் பயணங்கள் மூலம் 10 %கூட முதலீடு பெறப்படவிலை. வெளிநாட்டு முதலீடு தொடர்பாக எதிர்க்கட்சிகள் வெள்ளை அறிக்கை கோருவது வெறும் அரசியலே.” என்று வெளிநாட்டுப் பயணம் தொடர்பாக இபிஎஸ், ராமதாஸ், அன்புமணி, சீமான் உள்ளிட்டோரின் விமர்சனம் குறித்த கேள்விக்கு முதல்வர் பதிலளித்தார்.

> அமைச்சரவை மாற்றம் தொடர்பான கேள்விக்கு, “சொன்னதைத் தான் செய்வோம். செய்வதைத்தான் சொல்வோம். திமுக பவளவிழா நடைபெறவிருக்கும் நிலையில் நீங்கள் எதிர்பர்த்தது நடக்கும்.” என்று முதல்வர் ஸ்டாலின் கூறினார். இதனால், உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வராக்கப்படுவாரா என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Be the first person to comment

 
x