Published : 14 Sep 2024 05:59 AM
Last Updated : 14 Sep 2024 05:59 AM
சென்னை/கோவை: கோவை கலந்துரையாடல் நிகழ்ச்சியில் ஜிஎஸ்டி குறித்துகேள்வி எழுப்பிய ஹோட்டல் உரிமையாளர் சீனிவாசன், மத்திய நிதி அமைச்சரை சந்தித்து மன்னிப்பு கோரியதாக வெளியான வீடியோ சர்ச்சையைஏற்படுத்தியுள்ளது. இதுதொடர் பாக அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு எதிர்க்கட்சித் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து அவர்கள் வெளியிட்ட அறிக்கைகள் வருமாறு:
மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி: ஹோட்டல் உரிமையாளர், நமது அரசுஊழியர்களிடம் எளிமைப்படுத் தப்பட்ட ஜிஎஸ்டி முறையை கோரும்போது, அவரது கோரிக்கை ஆணவத்துடனும், அவமரியாதையுடனும் எதிர்கொள்ளப்படுகிறது. ஆனால், ஒரு கோடீஸ்வர நண்பர் விதிகளை வளைக்க, சட்டங்களை மாற்ற, தேசிய சொத்துகளை பெற முற்படும்போது, அவர்களுக்கு சிவப்பு கம்பளம் விரிக்கிறார் பிரதமர் மோடி. மக்கள் சொல்வதைக் கேட்டு, ஒரே வரி விகிதத்துடன் கூடியஎளிமைப்படுத்தப்பட்ட ஜிஎஸ்டியை இந்த அரசு செயல்படுத்தினால், லட்சக்கணக்கான வணிகர்களின் பிரச்சினைகள் தீரும்.
திமுக துணை பொதுச் செயலாளர் கனிமொழி: மத்திய அரசும், மத்திய அமைச்சர்களும் தமிழர்களின் சுயமரியாதையை சீண்டாமல் இருக்க வேண்டும்.
தமிழக காங்கிரஸ் தலைவர்செல்வபெருந்தகை: ஜிஎஸ்டிகுறித்த நியாயமான கோரிக் கையை முன்வைத்ததற்காக ஹோட்டல் உரிமையாளர் சீனிவாசனை அச்சுறுத்தி அடக்குமுறையை ஏவுவதை ஏற்க முடியாது. தவிர, பாஜக எம்எல்ஏ மூலமாக நிர்ப்பந்தப்படுத்தி நிதி அமைச்சரிடம் அவரை மன்னிப்பு கேட்க வைத்துள்ளனர். கேள்வி கேட்பவரை அச்சுறுத்துவதும், மிரட்டுவதும் பாஜகவின் பாசிச போக்கை வெளிப்படுத்துகிறது.
அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்: கலந்துரை யாடலில் ஹோட்டல் உரிமையாளர் தவறாக எதுவும் பேசவில்லை. தங்கள் தொழிலில் சந்திக்கும் சில பிரச்சினைகளை கோரிக்கையாக முன்வைத்தார். அதற்காகஅவரை அழைத்து மிரட்டி மன்னிப்பு கேட்க வைத்திருப்பது தமிழக மக்களைக் கேவலப்படுத்தும் செயல். அதை வீடியோவாக பதிவுசெய்து வெளியிட்டது பாசிசத்தின் உச்சம். பாசத்தில் மட்டுமல்ல, ரோசத்திலும் அதிகமானவர்கள் கோவை மக்கள். இனி எந்த காலத்திலும் தமிழகத்திலும், கோவையிலும் பாஜகவை மக்கள் ஏற்கமாட்டார்கள். இந்த செயலால் இன்னுமொரு நூறாண்டு ஆனாலும் பாஜக வருந்தும்.
இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசன்: தவறான வரி விதிப்பை திருத்த முன்வராமல், முறையிட்டவரை தனியாக அழைத்து மன்னிப்பு கேட்க வைத்தது அதிகார ஆணவத்தின் உச்சம். சாதாரண உணவக உரிமையாளரை மிரட்டி மன்னிப்பு கேட்க வைத்ததை வன்மையாகக் கண்டிக்கிறோம். ஒட்டுமொத்த தமிழகமக்களையும் அவமானப்படுத் திய மத்திய நிதி அமைச்சர் பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன்: கேள்வி கேட்பவரை மிரட்டுவது, வாயடைப் பது, மன்னிப்பு கேட்க செய்வது என்பது எதேச்சதிகாரம். மேலிருந்து கீழ்வரை தொடரும் இந்த ஆணவம் வன்மையாக கண்டிக்கத்தக்கது.
நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்: ஜிஎஸ்டியால் ஏராளமான வர்த்தகர்கள், மக்கள் தொடர்ந்து பாதிக்கப்படுகின்றனர். இதைத்தான் மத்திய அமைச்சரிடம் ஹோட்டல் உரிமையாளர் கேட்டுள்ளார். அவரது கேள்வி நியாயமானது என்பது நாடெங்கும் பரவி விட்டது. ஆனால், அதிகாரம் அவரை பணிய வைத்துள்ளது.
கோவை திமுக மக்களவை உறுப்பினர் கணபதி ப.ராஜ்குமார்: ஜிஎஸ்டியில் இருக்கும்பிரச்சினைகளை அனைத்து ஹோட்டல்களின் சார்பாக சீனிவாசன் பேசினார். குறைதீர்க்கும் கூட்டம் என நடத்தி விட்டு, குறைகளை கேட்டால் மிரட்டப்படுகின் ர். சீனிவாசனின் பேச்சின் மூலம், ஜிஎஸ்டி பிரச்சினைகள் எளிமையாக மக்களிடம் போய்விட்டன. வீடியோ வெளியிட்டது தவறு என்றுதான் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை சொல்லி இருக்கிறார். மற்றதை பற்றி பேசவில்லை. இவ்வாறு அவர்கள் தெரி வித்துள்ளனர்.
பாஜக குற்றச்சாட்டு: இந்த விவகாரம் குறித்துதமிழக பாஜக சார்பில் கூறியிருப்பதாவது: தமிழக பாஜக முன்னாள் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன்: நிர்மலா சீதாராமன் ஆரோக்கியமான கலந்துரையாடலைத்தான் நடத்தினார். இந்தநிகழ்வு சிலரால் அரசியலாக்கப் பட்டுள்ளது. ராகுல் காந்தி, கனிமொழியின் பதிவுகளை பார்த் தால் சிரிப்பாக இருக்கிறது.
தமிழக பாஜக செய்தி தொடர்பாளர் ஏஎன்எஸ்.பிரசாத்: ராகுல் காந்தி, ஸ்டாலினின் வஞ்சகக் கூட்டணி நிதி மைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு எதிராக பொய் பிரச்சாரம் செய்கிறது. அவர்களது பொய்யானகுற்றச்சாட்டு கண்டனத்துக் குரியது. நாட்டின் ஜனநாயக கட்டமைப்பின் மதிப்பை குறைக்க, பொய் தகவல்களை ராகுல் காந்தி போன்றவர்கள் பரப்புகின்றனர். எதிர்க்கட்சிகள் என்னதான் பொய் பிரச்சாரம் செய்தாலும், ஜிஎஸ்டி குறித்த உண்மையை பாஜக அரசு விளக்கிக் கொண்டே இருக்கும். இவ்வாறு அவர்கள் கூறி உள்ளனர்.
வானதி விளக்கம்: கோவை மாவட்ட பாஜக அலுவலகத்தில் பாஜக தேசிய மகளிரணி தலைவரும் கோவை தெற்கு எம்எல்ஏவுமான வானதி சீனிவாசன் நேற்று செய்தியாளர்களிடம் கூறியது: அந்த நிகழ்ச்சியில் ஹோட்டல் உரிமையாளர் சீனிவாசன் ஒரு கருத்தை பதிவு செய்தார். நான் அவர் ஹோட்டலுக்கு தினமும் செல்வேன், சண்டையிடுவேன் என கூறினார். நான் ஜிலேபி சாப்பிட்டதும் இல்லை, அவருடன் சண்டையிட்டதும் இல்லை. நான் நினைத்திருந்தால் அப்போதே பதில் கூறியிருக்கலாம். ஆனால் நாகரிகம் கருதி அமைதி காத்தேன்.
நேற்று முன்தினம் காலை, என்னை போனில் அழைத்து, “அமைச்சரிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்” என சீனிவாசன் கேட்டார். ஹோட்டலில் மதிய உணவு முடித்த பின் 2.30 மணியளவில் நிதி அமைச்சரை சந்தித்து, “நிகழ்ச்சியில் தர்மசங்கடத்தை ஏற்படுத்திவிட்டேன். வேறு விதமாக சமூக ஊடகங்களில் சித்தரிக்கப்பட்டு வைரலாகி வருகிறது. எந்த உள்நோக்கமும் இல்லை. எனவே எனது செயலுக்கு வருத்தம் தெரிவித்து கொள்கிறேன்” என கூறினார்.
அவரிடம் அமைச்சர் நிர்மலா சீதாராமன், “ஜிஎஸ்டி குறித்து என்ன கருத்து வேண்டுமானாலும் கூறுங்கள், உங்கள் எம்எல்ஏ மற்றும் எந்த ஒரு வாடிக்கையாளர் என்ன உணவு உட்கொண்டார் என்பதை பொது இடத்தில் கூறலாமா? இந்நிகழ்வால் எங்கள் கட்சியினருக்கு வருத்தம் ஏற்பட்டுள்ளது” என்றார். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
அண்ணாமலை வருத்தம்: பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை, தனது எக்ஸ் வலைதளப் பதிவில் ‘கோவை ஹோட்டல் உரிமையாளர் சீனிவாசன், மத்திய நிதி அமைச்சரை ஹோட்டலில் சந்தித்தபோது நடந்த கலந்துரையாடல் நிகழ்வு வெளியானது குறித்து வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன். தமிழக வணிகத்தில் தூண் போன்றவர் சீனிவாசன். மாநில - தேசிய பொருளாதார வளர்ச்சியில் முக்கியப் பங்கு வகிக்கிறார். அவருக்கு மரியாதை அளிக்கும் விதமாக இந்த நிகழ்வை இத்தோடு முடித்துகொள்ள அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன்’ என்று தெரிவித்துள்ளார்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Loading comments...