Published : 13 Sep 2024 09:15 PM
Last Updated : 13 Sep 2024 09:15 PM
சேலம் : “அத்திக்கடவு அவிநாசி திட்டத்தில் குழாய்களில் உடைப்பு ஏற்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. தற்போது இது சோதனை ஓட்டம் தான் என்றும் சரி செய்யப்பட்டு விடும் என கூறுகின்றனர். எந்தெந்த இடங்களில் சரி செய்ய வேண்டுமோ அந்த இந்த இடங்களில் உடனடியாக சரி செய்ய வேண்டும்,” என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
சேலம் நெடுஞ்சாலை நகரில் உள்ள அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி இல்லத்தில் முன்னாள் அமைச்சர் கருப்பண்ணன், பெருந்துறை சட்டமன்ற உறுப்பினர் ஜெயக்குமார் மற்றும் அத்திக்கடவு அவினாசி குளம் காக்கும் இயக்கத்தினர் கலந்து கொண்டு, அத்திகடவு அவிநாசி திட்டம் நிறைவேற்றிட காரணமாக இருந்ததற்கு எடப்பாடி பழனிசாமிக்கு பாராட்டு தெரிவித்து சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர் .
அப்போது விவசாய சங்க தலைவர் பெரியசாமி பேசும்போது, “அத்திகடவு அவிநாசி திட்டம் கொண்டு வந்ததற்கு முழு காரணம் அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி தான். முதற்கட்டமாக ரூ. ஆயிரம் கோடி நிதி ஒதுக்கி திட்டம் வகுத்துக் கொடுத்தார். கரோனா காலத்தில் பணி தொய்வடைந்தது. பின்னர் தற்போது இந்த திட்டம் முடிவடைந்து இருக்கிறது. இதனால், விவசாயிகள் பயனடைந்துள்ளனர்,” என்றார்.
அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி செய்தியாளர்களிடம் கூறியது: “அத்திக்கடவு அவிநாசி திட்டம் கொண்டு வர வேண்டுமென விவசாயிகள் கோரிக்கை வைத்திருந்தனர். அவர்களின் கோரிக்கையை ஏற்று நானே அடிக்கல் நாட்டி வைத்தேன் .தேவையான நீர் குளம் குட்டைகளில் நிரப்ப அரசு முதற்கட்டமாக ரூ.ஆயிரம் கோடி நிதி ஒதுக்கி இருந்தது . கரோனா காலத்தில் ஒரு ஆண்டு இந்த பணி தொய்வு ஏற்பட்ட நிலையில், 85 சதவீதம் பணி நிறைவடைந்து இருந்தது.
மீதிப்பணி முடிந்து தற்போது திட்டம் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. இந்த திட்டம் வரலாற்று சாதனை திட்டம். ஏழை எளிய விவசாய மக்களுக்கு இந்த திட்டம் மகிழ்ச்சி அளித்துள்ளது. சேலம் மாவட்டத்தில் 100 ஏரி திட்டம் நடந்து வருகிறது. ஆனால் பல ஏரிகளுக்கு தண்ணீர் செல்லவில்லை. நாங்கள் குரல் கொடுத்தால் நான்கு ஏரிகளுக்கு தண்ணீர் விடுகிறார்கள். மற்ற ஏரிகளுக்கும் தண்ணீர் விட வேண்டும். வேகமாக இந்த பணி நடக்க தேவையான நிதி ஒதுக்க வேண்டும். அதிமுக கொண்டு வந்த திட்டம் என கருதாமல் நிதி ஒதுக்கி திட்டத்தை முடிக்க வேண்டும்.
அத்திக்கடவு அவிநாசி திட்டத்தில் குழாய்களில் உடைப்பு ஏற்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. தற்போது இது சோதனை ஓட்டம் தான் என்றும் சரி செய்யப்பட்டு விடும் என கூறுகின்றனர். எந்தெந்த இடங்களில் சரி செய்ய வேண்டுமோ அந்த இந்த இடங்களில் உடனடியாக சரி செய்ய வேண்டும்,” என்று அவர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT