Published : 13 Sep 2024 09:10 PM
Last Updated : 13 Sep 2024 09:10 PM

அன்னபூர்ணா ஹோட்டல் உரிமையாளர் மன்னிப்புக் கோரியதில் பாஜகவுக்கு ‘பங்கு’ இல்லை: ஹெச்.ராஜா

திருச்சி: “கோவையில் நடந்த ஜிஎஸ்டி வரி தொடர்பான கூட்டத்தில் பேசியது தொடர்பாக அன்னபூர்ணா ஹோட்டல் உரிமையாளர் தானாகவே வந்து மன்னிப்புக் கோரி உள்ளார். இதில் பாஜகவுக்கோ, அமைச்சர் தரப்புக்கோ எந்த ஒரு பங்கும் இல்லை” என்று தமிழக பாஜக ஒருங்கிணைப்புக் குழு அமைப்பாளர் ஹெச்.ராஜா கூறியுள்ளார்.

தமிழக பாஜக மாநில ஒருங்கிணைப்புக் குழு மற்றும் மையக்குழுவின் கூட்டம் திருச்சி பாஜக கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. தமிழக பாஜக ஒருங்கிணைப்புக் குழு அமைப்பாளர் எச்.ராஜா தலைமை வகித்தார். இக்கூட்டத்தில், பாஜக உறுப்பினர்கள் புதுப்பித்தல், புதிய உறுப்பினர்கள் சேர்க்கும் பணி குறித்து விவாதிக்கப்பட்டது. பின்னர் எச்.ராஜா செய்தியாளர்களிடம் கூறியது: “மத்திய அரசு தமிழகத்தில் நடக்கும் தேசிய நெடுஞ்சாலை பணிகளை துரிதப்படுத்துவதற்காக தீவிர முயற்சி மேற்கொண்டு வருகிறது என்பதின் அடையாளமாக மத்திய அமைச்சர் நிதின் கட்கரியின் வருகை அமைந்துள்ளது.

தமிழக அரசு தாமதமின்றி நிலங்களை கையகப்படுத்திக் கொடுத்தால் தேசிய நெடுஞ்சாலைப் பணிகள் துரிதப்படும். மத்திய, மாநில அரசுகள் இணைந்து செயல்பட்டால் தான் எந்த திட்டமாக இருந்தாலும் நிறைவேற்ற முடியும். மத்திய அரசு திட்டங்கள், நிதி தருகிறது. அதை அமல்படுத்த வேண்டிய முகமை மாநில அரசு தான். மத்திய அரசு அறிவித்துள்ள விஸ்வகர்மா தொழிலாளர்களுக்கு நிதி உதவித் திட்டங்களை, செப்.17-ம் தேதி விஸ்வகர்மா தினத்துக்குள் தமிழக அரசு அறிவிக்க வேண்டும்.

கோவையில் நடந்த ஜிஎஸ்டி வரி தொடர்பான கூட்டத்தில் பேசியது தொடர்பாக அன்னபூர்ணா ஹோட்டல் உரிமையாளர் தானாகவே வந்து மன்னிப்புக் கோரி உள்ளார். இதில் பாஜகவுக்கோ, அமைச்சர் தரப்புக்கோ எந்த ஒரு பங்கும் இல்லை. அப்பத்தாவுக்கு வரி இருக்கு; அம்பானிக்கு வரி இல்லை என்ற முட்டாள்தனமான கருத்து, ஜிஎஸ்டி வரி தொடர்பாக மத்திய அரசுக்கு எதிரான கதையை கட்டிவிட பரப்பப்படுகிறது. நாட்டுக்கு விரோதமாக பேசக்கூடிய எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி ஒரு ஆன்டி இந்தியன். அமெரிக்கா சென்றுள்ள ராகுல் காந்தி, இலாஸ் உமர் உள்ளிட்ட இந்திய விரோத சக்திகளுடன் அலவளாவி வருகிறார்.

சாதிக் கட்சி வைத்திருக்கும் திருமாவளவன், இன்னொருக் கட்சியை சாதிக் கட்சி, மதக் கட்சி என்று கூறுவது எந்த வகையில் பொருந்தும்? மாநிலப் பட்டியலில் உள்ள மனிதர்கள் அருந்தும் மதுவை மத்திய அரசின் பொது அதிகாரப் பட்டியலுக்கு கொண்டு வரவேண்டும். அப்போது தான் பூரண மதுவிலக்கு கொண்டு வர மத்திய அரசு சட்டம் இயற்ற முடியும். அதற்கு விசிகவின் கூட்டணி கட்சியான திமுக ஒத்துக்கொள்ளுமா? விசிக மது ஒழிப்பு மாநாடுக்கு அனைவருக்கும் அழைப்பு விடுத்துள்ளனர். இந்த மதுஒழிப்பு மாநாடு, ‘அனைவரும் எனக்காக கதவு திறந்து வைத்துள்ளனர்’ என திமுகவுக்கு அழுத்தம் கொடுக்கும் தந்திரமாக இருக்கலாம்.

திமுக ஆட்சிக்கு வந்து 3 ஆண்டில் ஒரு மதுக்கடையைக் கூட குறைக்கவில்லை. 3 நாள் முன்பு ஒரே நாளில் 6 கொலைகள் நடந்துள்ளது. அனைத்துக்கும் போதை தான் காரணம். தமிழகம் போதையில் அளவை கடந்துவிட்டது. திராவிடியன் ஸ்டாக் போதையை வைத்து தமிழ் சமுதாயத்தை சீரழித்து வருகிறது. ஓராண்டில் ரூ.3 லட்சம் கோடிக்கு தமிழன் மது அருந்துகிறான். பீகாரில் நிதிஷ் குமார் ஆட்சி மதுவிலக்கு அமல்படுத்தியது போல திமுக அரசு முடிவெடுத்தால், நாளைய தமிழ் சமுதாயத்தின் மீது அக்கறை இருக்கும் அரசாக திமுக இருக்கும். தேசிய நெடுஞ்சாலையில் காலாவதியான சுங்கச்சாவடி மூடுவதற்கான பணிகள் நடக்கும். வர்ணாசிரமம் பற்றி கீதையில் கண்ணன் சொன்னதை திருக்குறளில் வள்ளுவர் கூறியுள்ளார். வள்ளுவர் சொன்னதும்; கண்ணன் சொன்னதும் ஒன்று தான்” என்றார். பேட்டியின்போது, மாநில பொதுச்செயலாளர் கருப்பு முருகானந்தம், மாநகர் மாவட்டத் தலைவர் ராஜசேகரன், புறநகர் மாவட்டத் தலைவர் அஞ்சாநெஞ்சன் ஆகியோர் உடனிருந்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Loading comments...

 
x