Published : 13 Sep 2024 08:59 PM
Last Updated : 13 Sep 2024 08:59 PM
சென்னை: வக்பு வாரியத்தின் தலைவராக இருந்த அப்துல் ரகுமானின் ராஜினாமா ஏற்கப்பட்ட நிலையில், அடுத்த தலைவர் யார் என்பதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழக வக்பு வாரியத்தின் தலைவராக இருந்தவர் எம்.அப்துல் ரகுமான். திமுக கூட்டணி கட்சிகளில் ஒன்றான இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கை சேர்ந்த இவர், கடந்த 2021-ம் ஆண்டு ஜூலை மாதம் வக்பு வாரிய தலைவராக நியமிக்கப்பட்டார். கடந்த 2021-ம் ஆண்டு திமுக கூட்டணியில் ஒதுக்கப்பட்ட 3 தொகுதிகளிலும் வெற்றி வாய்ப்பை இழந்த ஐயுஎம்எல் கட்சிக்கு வக்பு வாரிய தலைவர் பதவி வழங்கப்பட்டது.
இந்த நிலையில், மத்திய அரசின், வக்பு வாரிய சட்டத்திருத்தம் தொடர்பான விவகாரம், வக்பு சொத்துகள் தொடர்பான விவகாரம் ஆகியவை சிக்கலை ஏற்படுத்தியது. இதையடுத்து, வக்பு வாரிய தலைவர் பதவியில் இருந்து அப்துல் ரகுமான் ராஜினாமா செய்வதாக கடந்த ஆகஸ்ட் 19-ம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு கடிதம் அனுப்பினார். அக்கடிதம் மீதான நடவடிக்கை நிலுவையில் இருந்தது.
இந்நிலையில், அப்துல் ரகுமானின் வக்பு வாரிய உறுப்பினர் மற்றும் தலைவர் பதவி ராஜினாமா ஏற்கப்பட்டதாக தமிழக பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை செயலர் சி.விஜயராஜ்குமார் இன்று (செப்.13) அறிவித்துள்ளார். இந்நிலையில், வக்பு வாரியத்தின் அடுத்த தலைவர் யார் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. தங்கள் கட்சியில் இருந்தவர் பதவியை ராஜினாமா செய்ததால் தங்களுக்கே தலைவர் பதவியை மீண்டும் வழங்க வேண்டும் என்று ஐயுஎம்எல் தரப்பில் முதல்வருக்கு மீண்டும் வலியுறுத்தல் கடிதம் சென்றுள்ளதாக கூறப்படுகிறது.
இது தவிர, திமுகவின் மற்றொரு கூட்டணிக் கட்சியான மனித நேய மக்கள் கட்சியும் இப்பதவியை பெற விரும்புகிறது. அதேசமயம், திமுகவில் அமைச்சர் மஸ்தான், முன்னாள் அமைச்சர் நாசர் உள்ளிட்டோர் திமுகவிடமே வக்பு வாரிய தலைவர் பதவி இருக்க வேண்டும் என்று வலியுறுத்துவதாக கூறப்படுகிறது. இந்நிலையில், முதல்வர் அமெரிக்க பயணம் முடிந்து நாளை சென்னை திரும்பும் நிலையில், விரைவில் வக்பு வாரிய தலைவர் அறிவிக்கப்படுவார் எனக் கூறப்படுகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT