Published : 13 Sep 2024 06:18 PM
Last Updated : 13 Sep 2024 06:18 PM

ஹோட்டல் உரிமையாளர் விவகாரம்: நிர்மலா சீதாராமனை கண்டித்து கோவையில் நாளை காங்கிரஸ் போராட்டம் 

சென்னை: கோவை அன்னபூர்ணா ஹோட்டல் உரிமையாளர் சீனிவாசன் எழுப்பிய கோரிக்கையை உதாசீனப்படுத்தி ஆணவத்துடன் நடந்து கொண்ட மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை கண்டித்து நாளை (செப்.14) கோவை ஆர்.எஸ்.புரம், காந்தி பூங்கா ரவுண்டானாவில் தமிழக காங்கிரஸ் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அக்கட்சியின் மாநிலத் தலைவர் செல்வப்பெருந்தகை அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஜிஎஸ்டி தொடர்பான கூட்டத்தில் கலந்து கொண்ட போது கோவை அன்னபூர்ணா ஹோட்டல் உரிமையாளர் சீனிவாசன் எழுப்பிய கோரிக்கையை உதாசீனப்படுத்தி ஆணவத்துடன் நடந்து கொண்ட மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை கண்டித்து நாளை (செப்.14) மாலை 3 மணியளவில் கோவை ஆர்.எஸ்.புரம், காந்தி பூங்கா ரவுண்டானாவில் கோவை வடக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் வி.எம்.சி. மனோகரன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும். இதில் நான் பங்கேற்று கண்டன உரை நிகழ்த்துகிறேன். தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி துணைத் தலைவர்கள் சொர்ணா சேதுராமன், எம்.என். கந்தசாமி, டாக்டர் அழகு ஜெயபாலன் மற்றும் மாநில , மாவட்ட காங்கிரஸ் நிர்வாகிகள், முன்னணி அமைப்புகள், துறைகள் மற்றும் பிரிவுகளின் தலைவர்கள் உள்ளிட்ட பெருந்திரளான காங்கிரஸ் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்பார்கள்.

சிறு, குறு, நடுத்தர தொழில் முனைவோர் பலமுனை ஜிஎஸ்டி வரியினால் ஏற்படுகிற பாதிப்புகள் குறித்து முறையிட்டதற்காக அச்சுறுத்தி, நிர்பந்தப்படுத்தி தொழிலதிபர் சீனிவாசனை மன்னிப்பு கேட்க வைத்தது பாஜகவின் அப்பட்டமான பாசிச போக்காகும். இத்தகைய ஜனநாயக விரோத போக்குக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் கோவையில் நடைபெறும் கண்டன ஆர்ப்பாட்டத்துக்கு பெருந்திரளானவர்கள் பங்கேற்று எதிர்ப்பை தெரிவிக்க வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன்,” என்று அவர் கூறியுள்ளார்.

முன்னதாக, தமிழகம் வருகை தந்துள்ள மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கடந்த சில நாட்களாக பல்வேறு தொழிலதிபர்களுடன் ஆலோசனைகளையும், கலந்துரையாடலையும் மேற்கொண்டு வருகிறார். அந்தவகையில், கோவை கொடிசியா அரங்கில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் அன்னபூர்ணா ஹோட்டல் உரிமையாளர் சீனிவாசன் உணவுப் பொருட்களுக்கான ஜிஎஸ்டி வரி விதிப்பு குறித்து பேசினார்.அப்போது, “உணவுப் பொருட்கள் ஒவ்வொன்றிருக்கும் ஒவ்வொரு மாதிரியான வரி விதிப்பு இருக்கிறது. ஒரே மாதிரி வரி விதிக்க ஆலோசனை செய்யுங்கள்” என்பது குறித்து சீனிவாசன் சில நிமிடங்கள் பேசினார். இதற்கு மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனும் விளக்கம் அளித்திருந்தார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது.

இந்நிலையில், அன்னபூர்ணா ஓட்டல் உரிமையாளர் சீனிவாசன், நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்து மன்னிப்பு கோரியுள்ளதாக வீடியோ ஒன்று வேகமாக பரவியது. இதற்கு காங்கிரஸ் முக்கியத் தலைவர் ராகுல் காந்தி, தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, காங். எம்.பி. ஜோதிமணி, திமுக, அதிமுக உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த விவகாரம் தற்போது விஸ்வரூபம் எடுத்துள்ளது. இதையடுத்து, ‘மத்திய நிதி அமைச்சருக்கும், அன்னபூர்ணா ஹோட்டல் உரிமையாளருக்கும் இடையேயான, ‘தனிப்பட்ட உரையாடலை பொதுவெளியில் பகிர்ந்து கொண்ட பாஜகவினரின் செயலுக்காக, நான் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்’ என அண்ணாமலை தனது எக்ஸ் தளத்தில் தெரிவித்தார்.

இதனிடையே,“அந்த ஹோட்டல் உரிமையாளரே தொலைபேசியில் அழைத்துக் கேட்டுக் கொண்டார். நான் பேசிய விஷயம் தவறுதான். உங்களுக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்திவிட்டேன். இதெல்லாம் சமூக ஊடகங்களில் வேறு மாதிரியாக சென்றுவிட்டது. மனது புண்பட்டிருந்தால் அதற்காக வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன், மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன்” என்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் மற்றும் தன்னிடம் அந்த உணவக உரிமையாளர் மன்னிப்பு கேட்டதாக பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x