Published : 13 Sep 2024 06:09 PM
Last Updated : 13 Sep 2024 06:09 PM
சென்னை: தமிழகத்தில் பிஎச்.டி முடிப்பவர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. ஆனால், அதன் தரம் திருப்திகரமாக இல்லை என்று ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்தார். தேசிய தரவரிசையில் சிறந்த இடங்களை பிடித்த கல்வி மையங்களை கவுரவிக்கும் விதமாக 'தமிழகத்தின் உயர் கல்விச் சிறப்பு' என்ற தலைப்பிலான கருத்தரங்கம் சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் இன்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்துகொண்டார்.
கருத்தரங்கில் என்ஐஆர்எஃப் தரவரிசையில் பல்வேறு பிரிவுகளில் முன்னிலை இடங்களைப் பெற்ற சென்னை ஐஐடி, அண்ணா பல்கலைக்கழகம் உட்பட 11 கல்வி நிறுவனங்களுக்கு சான்றிதழ்கள் வழங்கி கவுரவிக்கப்பட்டன. நிகழ்ச்சியில் ஆளுநர் ஆர்.என்.ரவி பேசியது: ''தேசியளவிலான என்ஐஆர்எஃப் தரவரிசையில் முதல் 10 இடங்களுக்குள் வருவது மிகப் பெரிய சாதனையாகும். அதை செய்துள்ள அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் வாழ்த்துகள். குறிப்பாக, நாட்டின் சிறந்த கல்லூரிகளில் முதல் 20 இடங்களை தமிழகத்தைச் சேர்ந்த 28 கல்வி நிறுவனங்கள் தொடர்ச்சியாக பெற்று வருவது பெருமைக்குரியது.
இந்த நிகழ்ச்சியின் நோக்கம் மாநிலத்தில் இருக்கும் கல்லூரிகள் மற்ற உயர் கல்வி நிறுவனங்களுடன் இணைந்து செயல்படுவதற்கு வழிசெய்வதாகும். தமிழகத்தில் பிஎச்.டி படிப்புக்கான கல்வியின் தரத்தை உயர்த்த வேண்டும். இங்கு பிஎச்.டி முடிப்பவர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. ஆனால், அதன் தரம் திருப்திகரமாக இல்லை. ஒரு சில கல்வி நிறுவனங்களில் மட்டுமே பிஎச்.டி-க்கான கல்வி தரம் சிறப்பாக உள்ளது. எனவே, அனைத்துக் கல்வி நிறுவனங்களிலும் பிஎச்.டி கல்வியின் தரம் உயர்த்தப்பட வேண்டும். முதுநிலை படிக்கும் போதே நெட் போன்ற தேர்வுகளுக்கு மாணவர்களை தயார்படுத்த வேண்டும்.
ஒரு நாடு வளர வேண்டுமெனில் அதன் அறிவுசார் சொத்துகள் முன்னேற வேண்டும். உலகின் அறிவுசார் சொத்துக்களில் சீனா 46 சதவீதம் பெற்றுள்ளது. அதை மனதில் கொண்டு நம்நாட்டின் அறிவுசார் சொத்துகளை உயர்த்துவதற்கு அதிக தரம் கொண்ட பிஎச்.டி படிப்புகளை கொண்டு வர வேண்டும். கடந்த 2 ஆண்டுகளில் கல்வி நிறுவனங்களின் செயல்பாடுகள் உயர்ந்துள்ளது, மேலும், அறிவுசார் சொத்துக்களையும் உருவாக்கி உள்ளது'' என்று அவர் பேசினார்.
இந்த நிகழ்ச்சியில் சென்னை ஐஐடி இயக்குநர் வீ.காமகோடி , அண்ணா பல்கலைக்கழக பதிவாளர் ஏ.பிரகாஷ் மற்றும் பல்வேறு கல்வி நிறுவனங்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். முன்னதாக என்ஐஆர்எஃப் தரவரிசையில் இடம்பெற மேற்கொண்ட வழிமுறைகள் மற்றும் உத்திகள் குறித்து தரவரிசையில் முன்னிலை பெற்ற பல்கலைக்கழகங்கள், உயர்கல்வி நிறுவனங்கள் விளக்கம் அளித்தன என்பது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Loading comments...