Published : 13 Sep 2024 04:12 PM
Last Updated : 13 Sep 2024 04:12 PM

கோவை உணவக உரிமையாளர் மன்னிப்பு வீடியோ விவகாரம்: வானதி சீனிவாசன் விளக்கம்

வானதி சீனிவாசன் | கோப்புப்படம்

கோவை: “அரசியல் என்பது சவால் நிறைந்த பாதை. போராட்டங்கள் நிறைந்த பாதை. இன்றளவும் இங்கு பெண்களுக்கு சம வாய்ப்பு, சம மரியாதை இருக்கிறதா?, என்றால் ஒரு பெண் அரசியல்வாதியாக நான் இல்லை என்பேன். ஆனால், நான் பெண் அரசியல்வாதி எனக்கு இரக்கம், கருணை காட்டுங்கள் என்று எப்போதும் சலுகை கேட்கமாட்டேன். அதேநேரம், அந்த மேடையில், ஒரு ஆண் அமைச்சர், ஆண் எம்எல்ஏ இருந்திருந்தால், இதுபோன்ற பேச்சுக்கள் வருவதற்கு வாய்ப்பு இருக்கிறதா? என்பதை மட்டும் யோசித்துப் பாருங்கள்.” என்று கோவை தெற்கு தொகுதி எம்எல்ஏ வானதி சீனிவாசன் கூறியுள்ளார்.

கோவை கொடிசியா அரங்கில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் அன்னபூர்ணா ஓட்டல் உரிமையாளர் சீனிவாசன் உணவுப் பொருட்களுக்கான ஜிஎஸ்டி வரி விதிப்பு குறித்து பேசினார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது. இந்நிலையில், அன்னபூர்ணா ஹோட்டல் உரிமையாளர் சீனிவாசன், நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்து மன்னிப்பு கோரியுள்ளதாக வீடியோ ஒன்று வேகமாக பரவியது. இச்சம்பவம் குறித்து கோவையில் பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் இன்று (செப்.13) செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது அவர் கூறியதாவது: “கொங்கு மண்டலம் நன்றாக இருக்க வேண்டும், இங்கு இருக்கக்கூடிய தொழில்கள் சிறப்பாக இருக்க வேண்டும் என்ற எண்ணத்தில், மத்திய நிதி அமைச்சர் ஏற்பாட்டின் கீழ் மத்திய அரசின் 18 துறைகளைச் சேர்ந்த உயர் அலுவலர்கள் கலந்துகொண்ட குறைதீர்ப்பு நிகழ்ச்சி நேற்று முன்தினம் கோவையில் நடந்தது. அந்த நிகழ்ச்சிக்கு மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் வந்தார். அப்போது, அதிகாரிகள் எத்தனை மனுக்கள் பெறப்பட்டன. இதில், எதெல்லாம் இந்தப் பகுதியின் முக்கியமான பிரச்சினைகள் என்பது குறித்து அதிகாரிகள், அமைச்சரிடம் விளக்கினர்.

அதன்பிறகு, நிதி அமைச்சர், அனைத்து தொழில், வியாபார, விவசாய அமைப்புகள், நிறுவனங்கள் மற்றும் தனிநபர்கள் உள்ளிட்ட ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்ட அந்த மக்கள் மன்றத்தில், சிறுகுறு தொழில் வளர்ச்சிக்கு மத்திய அரசு எடுத்துவரும் முயற்சிகள் என்னென்ன? பட்ஜெட்டில் கூறப்பட்டுள்ள திட்டங்கள் என்னென்ன? மத்திய அரசின் பல்வேறு திட்டங்கள் பொதுமக்களைச் சென்றடையவில்லை. எனவே, அந்த திட்டங்கள் குறித்தெல்லாம் விளக்கி, நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் நேரடியாக உரையாடினார்.
பின்னர், கலந்துரையாடல் எல்லாம் நடந்தது.

அதன்பிறகு, கோவையைச் சேர்ந்த ஓட்டல் உரிமையாளர் சங்கத்தின் கவுரவத் தலைவர். மிக நீண்ட அனுபவம் கொண்டவர். அனைவராலும் மதிக்கப்படக்கூடிய ஒரு குடும்பத்தைச் சேர்ந்தவர். சமூகத்தில் உயர்ந்த நிலையில் இருக்கக்கூடியவர். எனக்கு சகோதரர் மாதிரி. காரணம் நாங்கள் இருவரும் ஒரே ஊர்பக்கம்தான். அவர் எழுந்து சில கருத்துக்களைத் தெரிவிக்கிறார். இனிப்பு, கார வகைகளுக்கு ஜிஎஸ்டியில் வித்தியாசம் இருக்கிறது என்று அவர் பேசினார்.

அப்படி அவர் பேசும்போது, “இந்த எம்எல்ஏ அம்மா என் கடைக்கு வருவார்கள். ஜிலேபி சாப்பிடுவார். காபி குடிப்பார், பிறகு சண்டையும் போடுவார்” என்று என்னைக் குறிப்பிட்டு கூறினார். இதை அனைவரும் பார்த்திருப்பீர்கள். நாங்கள் உடனடியாக அந்த இடத்தில் எதிர்வினை ஆற்றவில்லை. ஆனால், என்னால் கேட்டிருக்க முடியும், உங்களது கடைக்கு நான் இதுவரை எத்தனை முறை வந்திருக்கிறேன்?, எப்போதாவது வந்து உங்களுடன் சண்டையிட்டுள்ளேனா?, என்றாவது வந்து ஜிலேபி சாப்பிட்டிருக்கேனா?, நான் இதுவரை அந்த ஜிலேபியை சாப்பிட்டதே இல்லை. இதையெல்லாம் நான் மேடையிலேயே சொல்லியிருக்க முடியும். நான் அதை விரும்பவில்லை. காரணம் அது ஒரு பொதுமேடை.

நேற்று காலை 7 மணியில் இருந்து அந்த ஓட்டல் அதிபர் எனக்கு தொடர்ச்சியாக போன் செய்கிறார். “நான் தவறாக பேசிவிட்டேன். என்னை மன்னித்துவிடுங்கள். நான் மத்திய அமைச்சரிடம் மன்னிப்புக் கேட்க வேண்டும். நான் உடனடியாக வருகிறேன். நான் மன்னிப்புக் கோருவதற்கு நேரத்தைச் சொல்லுங்கள்.” என்று கேட்டார். அதன்படி, நேற்று மதியம் 2.30 மணிக்கு வந்தார். “நான் பேசிய விஷயம் தவறுதான். உங்களுக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்திவிட்டேன். இதெல்லாம் சமூக ஊடகங்களில் வேறு மாதிரியாக சென்றுவிட்டது. மனது புண்பட்டிருந்தால் அதற்காக வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன், மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன். நான் ஆர்எஸ்எஸ் அமைப்பைச் சேர்ந்தவன்.” என்று மத்திய நிதி அமைச்சரிடம் தெரிவித்தார்.

அப்போதும் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், “ஜிஎஸ்டி குறித்து நீங்கள் என்ன வேண்டுமானாலும் கூறுங்கள். ஜிஎஸ்டி குறித்து நீங்கள் என்ன மாதிரியான கருத்துச் சொல்வதற்கும் உங்களுக்கு உரிமை இருக்கிறது. அதைக்கேட்டு அதற்கு பதில் சொல்வதற்கு எனக்கும் கடமை இருக்கிறது. ஆனால், உங்கள் தொகுதியைச் சேர்ந்த எம்எல்ஏ. அதுவும் ஒரு பெண் எம்எல்ஏ. அவர் உங்களது கடையில் வந்து என்ன சாப்பிடுகிறார் என்று கூறலாமா?, ஒரு வாடிக்கையாளர் என்னவெல்லாம் சாப்பிடுகிறார் என்று கூறலாமா?, அது முறையா?, உங்க ஓட்டலுக்கு அடுத்தமுறை 10 பேருடன் சாப்பிட வந்தால், அதை நீங்கள் பார்த்துக் கொண்டிருப்பீர்கள், என்று தோன்றாதா?” என்று கேட்டார்.

உடனடியாக, அந்த ஓட்டல் அதிபர், என்னிடம் மன்னிப்புக் கேட்டார். “நீங்கள் என் சகோதரி மாதிரிதான். நான் ஏதோ அந்த நேரத்தில் அப்படி பேசிவிட்டேன்.” என்று கூறினார். அவ்வளவுதான், அந்த வீடியோவில் இருப்பது. ஆனால், இந்த வீடியோவை கட்சியினர் சமூக ஊடகப் பக்கங்களில் பகிர்ந்துள்ளனர். காரணம், பொது மேடையில் வைத்து நம்ம கட்சி எம்எல்ஏவை இப்படிக் கூறிவிட்டார்களே? என்ற வருத்தம் எங்களது கட்சிக்காரர்களுக்கும் இருக்கிறது.

அரசியல் என்பது சவால் நிறைந்த பாதை. போராட்டங்கள் நிறைந்த பாதை. இன்றளவும் இங்கு பெண்களுக்கு சம வாய்ப்பு, சம மரியாதை இருக்கிறதா?, என்றால் ஒரு பெண் அரசியல்வாதியாக நான் இல்லை என்பேன். ஆனால், நான் ஒரு பெண் அரசியல்வாதி எனக்கு இரக்கம், கருணை காட்டுங்கள் என்று எப்போதும் சலுகை கேட்கமாட்டேன். அதேநேரம், அந்த மேடையில், ஒரு ஆண் அமைச்சர், ஆண் எம்எல்ஏ இருந்திருந்தால், இதுபோன்ற பேச்சுக்கள் வருவதற்கு வாய்ப்பு இருக்கிறதா? என்பதை மட்டும் யோசித்துப் பாருங்கள்.” என்று அவர் கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x