Last Updated : 13 Sep, 2024 04:02 PM

 

Published : 13 Sep 2024 04:02 PM
Last Updated : 13 Sep 2024 04:02 PM

பாண்டி மெரினாவுக்கு எதிர்ப்பு: புதுவை ரயில் நிலையம் அருகே மீனவர்கள் 3 மணி நேரம் மறியல்

புதுச்சேரி: பாண்டி மெரினாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து புதுச்சேரி ரயில் நிலையம் அருகே வம்பாகீரப்பாளையம் மீனவர்கள் 3 மணி நேரம் தொடர் மறியலில் இன்று (வெள்ளிக்கிழமை) ஈடுபட்டனர். அப்போது அவ்வழியே வந்த மற்றொரு பகுதி மீனவர்களுக்கு வழிவிடாததால் கைகலப்பு ஏற்பட்டது.

புதுவை அரசின் சுற்றுலாத்துறை சார்பில் வம்பாகீரப்பாளையத்தில் பாண்டி மெரினா என்ற பெயரில் கடற்கரை உருவாக்கப்பட்டு, பொழுது போக்கு அம்சங்களுடன் வணிகவளாகம் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு வார விடுமுறை நாட்களில் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் குவிகின்றனர். அங்குள்ள துறைமுக முகத்துவார பகுதியிலிருந்து படகு மூலம் கடலுக்குள் சவாரி செய்யவும் வகையில் பாண்டி மெரினா நிர்வாகம் சார்பில் படகு நிறுத்தும் தளம் ( ஜெட்டி) அமைக்கப்பட்டு வருகிறது.

பாண்டி மெரினாவுக்குப் பின்புறம் அங்குள்ள மீனவர்களும் சுற்றுலாப் பயணிகளை கடலுக்குள் படகில் அழைத்துச் சென்று வருகின்றனர். இந்த நிலையில் இந்த ஜெட்டி அமைப்பதால் தங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக அப்பகுதியைச் சேர்ந்த மீனவர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். அதோடு, கடற்கரையில் தங்களுக்கு சிறு கடைகள் அமைக்க அனுமதியளிக்க வேண்டும் எனவும் மீனவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

இந்நிலையில், இன்று ரயில் நிலையம் அருகே உள்ள வாட்டர் டேங்க் சோனாம்பாளையம் சந்திப்பில் மீனவர்கள் பாண்டி மெரினாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து மறியலில் ஈடுபட்டனர். சாலையில் அமர்ந்து மீனவர்களும், மீனவப் பெண்களும் மறியலில் ஈடுபட்டதால் அப்பகுதியில் வாகனங்கள் செல்ல முடியவில்லை. அதனால் போலீஸார் வாகனங்களை மாற்று பாதையில் திருப்பி அனுப்பினர். போராட்டத்தில் அதிமுக மாநிலச் செயலாளரும் முன்னாள் எம்எல்ஏ-வுமான அன்பழகன் கலந்துகொண்டார்.

போராட்டத்தில் ஈடுபட்ட மீனவர்களோடு, போலீஸ் எஸ்பி-யான லட்சுமி சவுஜன்யா, இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனாலும் அவர்கள் போராட்டத்தை கைவிடாமல் தொடர்ந்து கோஷம் எழுப்பியபடி மறியலில் ஈடுபட்டனர். பாண்டி மெரினா ஒப்பந்தத்தை ரத்து செய்ய வேண்டும். அனுமதியின்றி பாண்டி மெரினா வளாகத்தில் கட்டப்பட்டுள்ள கடைகளை அப்புறப்படுத்த வேண்டும். பாண்டி மெரினாவுக்கு வழங்கியுள்ள இடத்தை அளக்க வேண்டும்.

சட்டவிரோத செயல்களை தடுக்க வேண்டும் என வலியுறுத்தி மறியலில் ஈடுபட்டவர்கள் கோஷம் எழுப்பினர். இதனிடையே வீராம்பட்டினத்தைச் சேர்ந்த மீனவர்கள் அந்த வழியாக வந்தனர். அவர்கள் தங்களுக்கு வழிவிடும்படி மறியலில் ஈடுபட்டவர்களிடம் கோரியதாக தெரிகிறது. இதனால் இரு தரப்பு மீனவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. ஒரு கட்டத்தில் அது கைகலப்பாக மாறியது.

இதனால் அங்கு பதற்றமான சூழல் ஏற்பட்டது. இதனிடையே ஒரு தரப்பினர் அந்த பகுதியில் இருந்து விலகி ஒடினர். அதையடுத்து மறியல் தொடர்ந்தது. இந்நிலையில் அப்பகுதியிலுள்ள தனியார் பள்ளி பிள்ளைகளுக்கு பெற்றோர் மதிய உணவை எடுத்து வந்தனர். அவர்களும் அந்த வழியை கடக்க முடியாததால் வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் வெயில் அதிகரித்ததால் தார்பாய் போடப்பட்டு மறியல் போராட்டம் தொடர்ந்தது.

இதையடுத்து அதிகாரிகள் நேரடியாக வந்து மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது ஆட்சியர் அலுவலகத்தில் இன்று மாலை சுற்றுலாத் துறை, துறைமுகத் துறை இயக்குநர்கள் ஆகியோருடன் மீனவர் தரப்பு பேச்சுவார்த்தை நடத்தலாம் என முடிவெடுக்கப்பட்டது. இதையடுத்து, மூன்று மணி நேரத்துக்கும் மேலாக நடந்த மறியல் போராட்டம் முடிவுக்கு வந்தது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x