Published : 13 Sep 2024 02:33 PM
Last Updated : 13 Sep 2024 02:33 PM
கரூர்: தாந்தோணி ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்திற்குள் விநாயகர் கோயில் எனக்கூறப்பட்ட கட்டிடம் பல்வேறு அமைப்புகளின் எதிர்ப்பு காரணமாக இரவோடிரவாக இடித்து அகற்றப்பட்டது.
கரூர் மாநகராட்சிக்குட்பட்ட தாந்தோணிமலையில் தாந்தோணி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் அமைந்துள்ளது. இந்த நிலையில் இந்த அலுவலகத்தின் நுழைவு வாயிலின் மேற்குப் பகுதியில் சிறியளவிலான கட்டிடம் ஒன்று 2 நாட்களுக்கு முன் கட்டப்பட்டது. இது விநாயகர் கோயில் எனக்கூறப்பட்ட நிலையில் சாமானிய மக்கள் நலக்கட்சி, திக, பெரியார் உணர்வாளர்கள் உள்ளிட்டோர் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து, விநாயகர் கோயில் எனக்கூறப்பட்ட அக்கட்டிடம் இரவோடிரவாக இடித்து அகற்றப்பட்டுள்ளது.
இது குறித்து சாமானிய மக்கள் நலக்கட்சி பொதுச்செயலாளர் ப.குணசேகரன் நம்மிடம் பேசுகையில், “தாந்தோணி ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு புதிய கட்டுமான வேலை நடைபெறுவதை பார்த்தேன். கட்டுமான பணியில் ஈடுபட்டவர்களிடம் விசாரித்தபோது, விநாயகர் கோயில் கட்டப்படுவதாக தெரிவித்தனர்.
உடனே இதுகுறித்து ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் சிவகாமி, வட்டார வளர்ச்சி அலுவலர் ஆகியோரிடம் அரசு அலுவலக வளாகத்திற்குள் கோயில் கட்டுமான பணிகளை மேற்கொள்ளக் கூடாது என எதிர்ப்பு தெரிவித்தேன். ஆனால், நேற்று அக்கட்டிடத்தில் மேற்கூரை அமைக்கப்பட்டிருந்தது. இதையடுத்து அரசு அலுவலக வளாகத்தில் கோயில் கட்டக்கூடாது இதுகுறித்து புகார் தெரிவித்த நிலையிலும் கட்டுமானப் பணிகள் நடைபெறுவதால் செப். 16 முற்றுகைப் போராட்டம் நடத்தப்படும் எனக்கூறி முகநூலில் காணொலி ஒன்றை வெளியிட்டேன்” என்றேன்.
இதனிடையே, தி.க. மற்றும் பகுத்தறிவாளர்கள் இதுகுறித்து ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திலும் ஆட்சியர் அலுவலகத்திலும் நேற்று புகார் அளித்தனர். அதற்கு, “இது கோயில் அல்ல. கார் ஷெட்” என ஊராட்சி ஒன்றியம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருந்தபோதும் பல்வேறு அமைப்புகளின் எதிர்ப்பு காரணமாக மாவட்ட நிர்வாகம் சார்பில் விநாயகர் கோயில் எனக்கூறப்பட்ட கட்டிடம் நேற்று இரவோடு இரவாக இடித்து அகற்றப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT