Last Updated : 13 Sep, 2024 02:08 PM

7  

Published : 13 Sep 2024 02:08 PM
Last Updated : 13 Sep 2024 02:08 PM

“மதுவிலக்கை அமல்படுத்தியவர் கருணாநிதி; அரசு நிறுவனமாக்கியவர் ஜெயலலிதா” - அமைச்சர் சிவசங்கர்

அரியலூர்: “தமிழகத்தில் மதுவிலக்கை அமல்படுத்தியவர் கருணாநிதி. மீண்டும் மதுக்கடைகளை திறந்தவர் எம்ஜிஆர். அதனை அரசு நிறுவனமாக்கியவர் ஜெயலலிதா'' என்று தெரிவித்துள்ள அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர், “மது ஒழிப்பு மாநாட்டில் அதிமுக பங்கேற்பது குறித்து அவர்கள் தான் சிந்தித்து முடிவு எடுக்க வேண்டும்”' என தெரிவித்தார்.

திமுகவின் பவள விழாவையொட்டி, திமுகவினர் இல்லம் தோறும் கட்சி கொடி ஏற்றும் நிகழ்ச்சியின் தொடக்க நிகழ்ச்சி அரியலூர் ராஜாஜி நகரில் உள்ள போக்குவரத்துத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் வீட்டின் முன்பு இன்று (செப்.13) நடைபெற்றது.

நிகழ்ச்சியில், அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் முன்னிலையில், கட்சியின் மூத்த உறுப்பினரும், நகர பொருளாளருமான ராஜேந்திரன் கட்சிக்கொடியை ஏற்றிவைத்தார். நிகழ்ச்சியில் திமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் கூறியதாவது: ''மின்சார பேருந்துகளைப் பொறுத்தவரை டெண்டர் விடப்பட்டுள்ளது. டெண்டரில் பல்வேறு நிறுவனங்கள் கலந்து கொண்டுள்ளன. டெண்டரின் அடிப்படையில் எந்த நிறுவனத்துக்கு வழங்க வேண்டுமோ அந்த நிறுவனத்துக்கு வழங்கப்பட்டு, மின்சார பேருந்துகள் தயாரிக்கப்பட்டு இயக்கப்படும்.

மினி பேருந்துகள், திமுக ஆட்சி காலத்தில் தொடங்கப்பட்டது. அதைத்தொடர்ந்து, அதிமுக ஆட்சியில் அவற்றிற்கான சலுகைகளை சரியாக வழங்காததால் மினி பேருந்து சேவை பாதிக்கப்பட்டது. குறைந்த மக்கள் தொகை கொண்ட கிராமங்களிலும் பேருந்து சேவை தேவை என்ற கோரிக்கை பொதுமக்களால் வைக்கப்பட்டு வருகிறது. இதற்கான கொள்கை வரைவு திட்டம் முதலமைச்சர் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது. முதலமைச்சர் ஒப்புதல் கொடுத்த பிறகு ஒவ்வொரு மாவட்டத்திலும் எந்தெந்த வழித்தடங்களில் மினி பேருந்துகளை இயக்க தேவை உள்ளதோ அந்த வழித்தடங்களில் மினி பேருந்துகளை இயக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

விசிக மது ஒழிப்பு மாநாட்டை பொறுத்தவரை அதன் தலைவர் திருமாவளவன், எல்லா கட்சிகளையும் அழைக்கிறார். திமுக உள்ளிட்ட மதுஒழிப்புக் கொள்கையில் ஒருமித்த கருத்துடைய அனைத்துக் கட்சிகளும் கலந்து கொள்ளலாம் என அவர் கூறியுள்ளார். தமிழகத்தில் மதுவிலக்கை அமல்படுத்தியவர் கருணாநிதி. மீண்டும் மதுக்கடைகளை திறந்தவர் எம்ஜிஆர். அதனை அரசு நிறுவனமாக்கியவர் ஜெயலலிதா. எனவே, விசிக மாநாட்டில் அதிமுக பங்கேற்பது குறித்து அவர்கள் தான் சிந்தித்து முடிவு எடுக்க வேண்டும்.

தொடர்ந்து தமிழ்நாடு முதலமைச்சர் தமிழகத்துக்கு புதிய முதலீடுகளை கொண்டு வரும் முயற்சிகளில் இறங்கியுள்ளார். அதன் ஒரு பகுதியாக பல்வேறு வெளிநாட்டு பயணங்களை மேற்கொண்டு, தற்பொழுது அமெரிக்காவில் பயணம் மேற்கொண்டுள்ளார்.

ஒவ்வொரு நாளும் பல்வேறு புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி உள்ளன. ஆயிரக்கணக்கான கோடிகளுக்கு புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. இது தமிழ்நாட்டை புதிய முன்னேற்றப் பாதைக்கு கொண்டு செல்லும் என்பதில் எந்தவித ஐயமும் இல்லை. இதன் ஒரு பகுதியாகவே பெரம்பலூர் மாவட்டத்தில் சிப்காட் தொழிற்சாலை அமைக்கப்பட்டு செயல்பாட்டில் உள்ளது.

அதேபோல் குன்னம் தொகுதியிலும், அரியலூர் மாவட்டத்தில் உள்ள மகிமைபுரம் பகுதியிலும் புதிய சிப்காட் தொழிற்சாலைகளை அமைக்க முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார். இதன் மூலம் தொழில் வளர்ச்சி பெருகுவதோடு வேலைவாய்ப்பும் பெருகும்.'' இவ்வாறு அவர் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x