Published : 13 Sep 2024 02:00 PM
Last Updated : 13 Sep 2024 02:00 PM
புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அரசு மருத்துவமனையில் பாம்பு கடிக்கு உரிய சிகிச்சையளிக்காததால் இளைஞர் உயிரிழந்ததாக கூறி, இளைஞரின் உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
அறந்தாங்கி அருகே பாண்டிக்குடியைச் சேர்ந்தவர் செல்லத்துரை. விவசாயியான இவரது மகன் அஜித் (23). கோவையில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். இரண்டு நாட்களுக்கு முன்பு அஜித் தனது வீட்டுக்கு வந்துள்ளார். நேற்றிரவு அஜித் தனது வீட்டின் முன் வாசலில் படுத்துத் தூங்கியுள்ளார். இந்த நிலையில் இன்று (செப்.13) அதிகாலையில் அஜித்தை பாம்பு கடித்துள்ளது. இதனையடுத்து அவரை அறந்தாங்கி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர். இந்நிலையில், இளைஞர் அஜித் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இதையடுத்து, பணியில் இருந்த மருத்துவர் பாம்பு கடிக்கு உடனடியாக சிகிச்சை அளிக்காததால் தான், இளைஞர் அஜித் உயிரிழந்ததாக குற்றம்சாட்டிய, இளைஞரின் உறவினர்கள், பணியில் இருந்த மருத்துவர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், அஜித் குடும்பத்தினருக்கு அரசு நிவாரணம் வழங்கக் கோரியும், இளைஞரின் குடும்பத்தினரும், உறவினர்களும் அறந்தாங்கி அரசு மருத்துவமனை அருகே சுட்டெரிக்கும் வெயிலையும் பொருட்படுத்தாமல் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இந்நிலையில் இச்சம்பவம் குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த அறந்தாங்கி கோட்டாட்சியர் சிவக்குமார், டிஎஸ்பி-யான சண்முக சுந்தரம், தலைமை மருத்துவ அலுவலர் சேகர் உள்ளிட்டோர் மறியலில் இருப்பவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை. சாலை மறியல் காரணமாக 3 மணி நேரத்துக்கும் மேலாக அறந்தாங்கி - பட்டுக்கோட்டை சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT