Published : 13 Sep 2024 12:40 PM
Last Updated : 13 Sep 2024 12:40 PM
மதுரை: மதுரையில் தீ விபத்தில் சிக்கிய மகளிர் விடுதிக்கு தொடர்புடைய மருத்துவமனையில் போலி மருத்துவர் கைது செய்யப்பட்டார்.
மதுரை பெரியார் பேருந்து நிலையம் அருகிலுள்ள கட்ராப்பாளையம் தெரு பகுதியில் 'விசாகா பெண்கள் தங்கும் விடுதி' என்ற பெயரில் தனியார் விடுதி ஒன்று கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக இயங்கிவந்தது. இங்கு மதுரை, தேனி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த மாணவியர், தனியார் மற்றும் அரசுத்துறையில் பணிபுரியும் பெண்கள் என 45-க்கும் மேற்பட்டோர் தங்கி இருந்தனர்.
இந்நிலையில் நேற்று (செப்.12) அதிகாலை இந்த விடுதியில் இருந்த ஃபிரிட்ஜில் ஏற்பட்ட மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டது. இதில், மதுரை மாவட்டம் இரும்பாடி ஊராட்சி ஒன்றிய நடு நிலைப்பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்த தூத்துக்குடி மாவட்டம் ஏரலைச் சேர்ந்த பரிமளா சௌத்ரி, எட்டயபுரம் பேரிலோவன்பட்டியைச் சேர்ந்த அன்னம்மாள் டெக்னிக்கல் இன்ஸ்டிடியூட்டில் ஆசிரியராக பணிபுரிந்த சரண்யா (27) ஆகிய இருவரும் மூச்சுத் திணறல் ஏற்பட்டு உயரிழந்தனர்.
இச்சம்பவத்தில் காயமடைந்த மதுரை பழங்காநத்தம் பகுதியைச் சேர்ந்த வார்டன், மேலளாராக பணிபுரிந்த புஷ்பா (56), மேலூர் அட்டப்பட்டி பகுதியைச் சேர்ந்த ஜனனி என்ற செவிலியர் மாணவி, விடுதியின் சமையலரான கனி ஆகியோர் மதுரை கென்னட் மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளனர். விபத்து நடந்த விடுதியை ஆட்சியர் சங்கீதா நேரில் ஆய்வு செய்தார். அவரது உத்தரவின் பேரில், விடுதியில் செயல்பட்ட விசாகா மருத்துவமனையில் சுகாதாரத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.
விடுதியின் கீழ் தரைதளத்திலுள்ள விசாகா மருத்துவமனை பற்றி ஆய்வு மேற்கொண்டதில், தமிழ்நாடு மருத்துவ ஸ்தாபன சட்டம் 1997-ன் படி முறையான பதிவுச் சான்றிதழ் பெறாமல், மருத்துவமனை உரிமையாளர் இன்பா மற்றும் மேலாளர் புஷ்பா ஆகியோர் எலெக்ட்ரோபதி மருத்துவம் படித்த தினகரன் என்பவரை அலோபதி மருத்துவர் எனச் சொல்லி அங்கு வந்த மக்களுக்கு மோசடியாக சிகிச்சையளிக்க வைத்தது தெரியவந்தது.
இதைத்தொடர்ந்து மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் துறையில் துணை இயக்குநர் செல்வராஜ் திடீர்நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் வழக்கு பதிவு செய்த போலீஸார், விசாகா மருத்துவமனையில் மருத்துவர் என கூறி பணிபுரிந்த தினகரனை இன்று (வெள்ளிக்கிழமை) கைது செய்தனர். இது தொடர்பாக மருத்துவமனை உரிமையாளரான இன்பா, மேலாளர் புஷ்பா ஆகியோர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT