Published : 13 Sep 2024 11:21 AM
Last Updated : 13 Sep 2024 11:21 AM
சென்னை: தாம்பரத்தில் புதிய வழித்தடத்தில் சிற்றுந்து இயக்கப்படுவதாக மாநகர போக்குவரத்துக் கழகம் அறிவித்துள்ளது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மாநகர போக்குவரத்துக் கழகம் சார்பில் 600-க்கும் மேற்பட்ட வழித்தடங்களில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பேருந்துகள் இயக்கப்படுகின்றன. ஒவ்வொரு பேருந்தும் நாள்தோறும் 265 முதல் 270 கி.மீ பயணிக்கிறது. இவற்றில் நாள்தோறும் சுமார் 30 லட்சத்துக்கும் அதிகமானோர் பயணித்து வருகின்றனர்.
இவ்வாறு பயணிப்போரின் வசதிக்காக புதிய வழித்தடம் உருவாக்குதல், வழித்தடத்தை நீட்டித்தல் போன்றவற்றில் மாநகர போக்குவரத்துக் கழகம் தீவிர கவனம் செலுத்தி வருகிறது. இதற்கேற்ப புதிய பேருந்துகளும் கொள்முதல் செய்யப்பட்டு வருகின்றன. இந்நிலையில் புதிய வழித்தடம் குறித்த அறிவிப்பு மாநகர போக்குவரத்துக் கழகத்தின் அதிகாரபூர்வ எக்ஸ் வலைதள பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
அதில் கூறியிருப்பதாவது: மேற்கு தாம்பரத்தில் இருந்து எஸ்55டபிள்யு என்னும் வழித்தடத்தில் இயக்கப்படும் சிற்றுந்து பெருங்களத்தூர், எஸ்எஸ்எம் நகர், கேம்ப் ரோடு, கிழக்கு தாம்பரம் வழியாக பயணித்து, மீண்டும் மேற்கு தாம்பரத்தை வந்தடைகிறது. இந்த பேருந்து காலை 5.15, 7.40, 10.25, பிற்பகல் 1.10, 3.45, மாலை 6.25 ஆகிய நேரங்களில் புறப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT