Last Updated : 13 Sep, 2024 07:55 PM

3  

Published : 13 Sep 2024 07:55 PM
Last Updated : 13 Sep 2024 07:55 PM

கட்சி ஒருங்கிணைப்பு, பாஜக கூட்டணி, விசிக அழைப்பு - அதிமுகவில் என்ன நடக்கிறது?

அண்ணாமலை லண்டன் பயணம் மேற்கொண்டிருக்கும் சூழலில் அதிமுக - பாஜக கூட்டணியை மீண்டும் உருவாக்கும் முயற்சி நடப்பதாக சொல்லப்படுகிறது. மற்றொரு பக்கம் அதிமுக ஒருங்கிணைப்பு விரைவில் நடக்கப்போவதாகப் பேச்சுகள் அடிபடுகிறது. இதில், மது ஒழிப்பு மாநாட்டில் அதிமுகவுக்கு விசிக அழைப்புவிடுத்திருப்பது அதிமுக - விசிக கூட்டணி உருவாக்கும் முயற்சியா என்ற சலசலப்பும் எழுந்துள்ளது. இப்படியாக அதிமுகவைச் சுற்றிப் பல நிகழ்வுகள் நடந்துவருகிறது. 2026-ம் ஆண்டு இந்த நிகழ்வுகளால் ஏற்படப்போகும் தாக்கம் என்ன? - சற்றே விரிவாகப் பார்க்கலாம்.

அதிமுக - பாஜக கூட்டணி முயற்சி: அண்ணாமலை லண்டன் பயணம் மேற்கொண்டிருக்கும் நிலையில், மீண்டும் அதிமுக - பாஜக கூட்டணி அமைக்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டிருப்பதாக தகவல் கசிந்தது. இதனை மேலும் உறுதி செய்யும் வகையில் ‘இனிமையான தலைவர் எடப்பாடி பழனிச்சாமி’ என எச்.ராஜா சொன்னதும் ’அதிமுக-பாஜக கூட்டணி அமைந்தால் மகிழ்ச்சிதான்’ என நயினார் நாகேந்திரன் கூறியிருப்பதும் கூட்டணி பேச்சுவார்த்தைத் தொடங்கியிருப்பதை உறுதி செய்வதாகப் பேச்சுக்கள் அடிபடுகின்றன. இது தொடர்பாகப் பேசவே அமித் ஷாவைச் சந்திக்க எச்.ராஜாவும் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சித் தலைவர் ஜி.கே.வாசனும் டெல்லிக்கு விசிட் அடித்தனர் என்கிறார்கள் விவரமறிந்தவர்கள்.

ஏன் இந்தக் கூட்டணி அவசியம்? - 2024 மக்களவைத் தேர்தலில் திமுகவின் வெற்றிக்கு முக்கிய காரணமாக அதிமுக - பாஜக கூட்டணி பிளவு பேசப்பட்டது. தேர்தலுக்குப் பின் அதிமுகவின் முக்கிய தலைவரான வேலுமணி, ”அதிமுக - பாஜக கூட்டணி அமைத்திருந்தால் பல இடங்களில் வெற்றி பெற்றிருக்கலாம்” எனப் பேசியதும் கவனிக்க வைத்தது. தமிழக பாஜக தலைவரான அண்ணாமலையைத் தவிர பிற பாஜக தலைவர்களுக்கும் இந்த எண்ணவோட்டம் இருந்தது. அதைச் செய்தியாளர் சந்திப்பில் போட்டுடைத்தார் முன்னாள் ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன்.

ஆனால், இந்தக் கூட்டணி முடிவுக்கு இரு கட்சிகளின் தலைவர்கள் ஒப்புக்கொள்ளவில்லை. பாஜகவின் மாநில தலைவர் அண்ணாமலை, அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி என இருவருமே தனித்துப் போட்டியிடவே தீவிரம் காட்டினர். அதன் விளைவாகத்தான் கூட்டணி அமையாமல் தேர்தலைச் சந்தித்து இரு கட்சிகளும் தோல்வியைச் சந்தித்தது. அண்ணாமலை லண்டனுக்குச் சென்றவுடன் எச்.ராஜா தலைமையில் குழு அமைக்கப்பட்டது. தற்போது அவர்களின் செயல்பாடுகளை உற்று நோக்கும்போது அதிமுகவைக் கூட்டணிக்குள் கொண்டுவருவதே அவர்கள் முதல் திட்டம் போல் தெரிகிறது.

2026 தேர்தல் களம் எப்படி இருக்கப் போகிறது? - 2026-ம் ஆண்டு தேர்தல் எளிமையான தேர்தலாக இருக்காது என திமுக மூத்த அமைச்சர் கே.என்.நேரு சமீபத்தில் கூறியிருந்தார். இதை எளிமையாகக் கடந்து விட முடியாது. காரணம், 2026-ல் தன் முதல் தேர்தலை விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் சந்திக்கவிருக்கிறது. அதேபோல் ஒவ்வொரு தேர்தலில் தனித்த வாக்கு வங்கியை அதிகரித்து மாநிலக் கட்சி என்னும் அந்தஸ்தைப் பெற்ற நாம் தமிழர் தனித்துத் தேர்தலைச் சந்திக்க அதிக வாய்ப்புள்ளது. பிற கட்சிகள் பெரும்பாலும் கூட்டணி அமைத்துத் தேர்தலைச் சந்திக்கும். கடந்த மக்களவைத் தேர்தலில் தனித்துத் தேர்தலைச் சந்தித்ததால் அதிமுக, பாஜக என இரு கட்சிகளும் தோல்வியைச் சந்தித்தன. ஆகவே, இவர்கள் இணைந்து போட்டியிட்டால் மட்டுமே வெற்றி சாத்தியம் என நினைக்கின்றனர் இரு கட்சி நிர்வாகிகள். ஆனால், தலைவர்கள் அதற்கு ஒப்புக்கொள்ளாமல் இருப்பது தான் சிக்கலாகவுள்ளது.

இது குறித்து நம்மிடம் பேசிய மூத்த பத்திரிக்கையாளர் பிரியன், “அண்ணாமலை அதிமுகவின் தலைவர்கள் குறித்துப் பேசியதுதான் பிரச்சினையாக வெடித்தது. ஆனால், அண்ணாமலை இல்லாத சூழலில் அதிமுக-பாஜக ஒருங்கிணைப்பு சாத்தியமாகலாம். அதற்கான முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஆனால், அதிமுக அதற்கு ஒப்புக்கொள்ளுமா என்பது சந்தேகம்தான். ஆனால், 2026-ல் தேர்தல் களத்தில் பல முனைகளில் போட்டி நடக்கும். கடந்த தேர்தலில் தனித்து நின்று வாக்குகள் சிதறியதால் தான் வெற்றி திமுக வசம் சென்றது. அதனால், கூட்டணி அமைத்துத் தேர்தலைச் சந்திப்பதுதான் அதிமுகவுக்குப் பலமாக அமையும்” என்றார்.

அதிமுக ஒருங்கிணைப்பு! - மறுபக்கம் அதிமுக ஒன்றிணைவதற்கும் ஏற்பாடுகள் நடந்து வருகிறது. அதை உறுதி செய்யும் விதமாக ஓபிஎஸ் ஆதரவாளர் வைத்திலிங்கம், “ அதிமுக ஒருங்கிணைப்பு டிசம்பரில் நடக்கும் . அப்போது தலைமை யார் என்பது அறிவிக்கப்படும் எனக் கூறியிருக்கிறார். அதற்கான பேச்சுவார்த்தையும் பல மாதங்களாக தொடர்கிறது. ஆனால், இதற்கும் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி இசைவு தெரிவிக்கவில்லை. கட்சிக் கூட்டத்தில் கூட இது குறித்துப் பேசக் கூடாது என முட்டுக்கட்டைப் போடுகிறார். மூத்த நிர்வாகிகள் சொல்வதையும் ஏற்க தயாராக இல்லை.

விசிக அழைப்பு: அதேபோல், விசிக மது ஒழிப்பு மாநாட்டுக்கு அதிமுகவும் பங்கேற்கலாம் எனச் சொல்லியிருப்பதும் சலசலப்பை ஏற்படுத்தியது. இதனால், விசிக - திமுக கூட்டணியில் விரிசல் போன்ற வாதங்கள் வைக்கப்படுகிறது. ஆனால், திமுக தொடர்ந்து விசிகவுக்கு ஆதரவாகத்தான் பேசி வருகிறது. ஆனால், கட்சிக்குள் விசிகவின் இந்த அணுகுமுறையை திமுக ரசிக்காது என அரசியல் விமர்சகர்கள் கூறிவருகின்றனர். கடந்த மக்களவைத் தேர்தலின்போதும் அதிமுக கூட்டணிக்குள் விசிக கொண்டுவர முயற்சிகள் நடந்தன. ஆனால், இண்டியா கூட்டணி உறுதியாக இருந்ததால் புதிய கூட்டணி உருவாகவில்லை. ஆனால், விசிகவின் இந்த அணுகுமுறை இம்முறை புதிய கூட்டணியை உருவாக்கலாம் என்றும் சொல்லப்பட்டது. ஆனால், தேர்தல் கூட்டணி வேறு, சமூக நலன் வேறு என விளக்கமளித்தது விசிக.

இப்படியாக, அதிமுகவைச் சுற்றி புதிய கூட்டணி, ஒருங்கிணைப்பு, அழைப்பு என அடுத்தடுத்த அரசியல் நிகழ்வு நடந்துவருகிறது. இதனால், 2026-ம் ஆண்டுக்குள் அதிமுக கூட்டணியில் ஏதேனும் மாற்றம் நிகழுமா, ஒருங்கிணைப்பு சாத்தியமாகுமா என்பதை பார்க்கலாம் பொறுத்திருந்து.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x