Published : 13 Sep 2024 08:54 AM
Last Updated : 13 Sep 2024 08:54 AM

சென்னையில் நள்ளிரவில் மின் தடை ஏற்பட்டது ஏன்? - மின்சார வாரியம் விளக்கம்

நள்ளிரவில் மேற்கொள்ளப்பட்ட சீரமைப்புப் பணிகள்.

சென்னை: சென்னை மாநகர் முழுவதும் நேற்று (செப்.12) இரவு பெரும்பாலான பகுதிகளில் மின்வெட்டு ஏற்பட்டது. சென்னை திருவல்லிக்கேணி, சேப்பாக்கம், கோட்டூர்புரம் மயிலாப்பூர், தேனாம்பேட்டை, நந்தனம், அடையாறு, மந்தைவெளி, சூளைமேடு, மாதவரம் மற்றும் வடசென்னையின் பெரும்பாலான பகுதிகளில் மின்சாரம் தடைபட்டது. இதனால் பொதுமக்கள் தூக்கமின்றி பாதிக்கப்பட்டனர். இந்நிலையில் மின் தடைக்கான காரணத்தை தமிழ்நாடு மின்சார வாரியம் விளக்கியுள்ளது.

மணலி துணை மின்நிலையத்தில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தால் சென்னை முழுவதும் மின்வெட்டு ஏற்பட்டதாக தமிழ்நாடு மின்சார வாரியம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், “சென்னையின் முக்கியமான மின்சார மையமாக மணலி துணை மின் நிலையம் (400/230 கிலோவோல்ட்) விளங்குகிறது. இது நகரின் முக்கிய பகுதிகளுக்கு மின்சாரம் வழங்குகிறது. வழக்கமாக, இத்துணை மின் நிலையத்திற்கு மின்சாரம் வழங்குவதற்கு பிரத்தியேகமாக அலமாதி மற்றும் NCTPS II என இரண்டு மின்னூட்டி ஆதாரங்கள் உள்ளன.

இவற்றில், ஏதேனும் ஒரு மின் பாதையில் பழுது ஏற்பட்டாலும், அடுத்துள்ள மின்னூட்டி ஆதாரம் வழியாக இத்துணை மின் நிலையத்திற்கு 100% மின்சாரம் பெறும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் வழியாக மின்சாரத்தை பெற்று சுமார் 800 முதல் 900 மெகாவாட் அளவிலான மின்சாரத்தினை சென்னையின் முக்கிய துணை மின் நிலையங்களான புளியந்தோப்பு, மணலி, தண்டையார்பேட்டை, மயிலாப்பூர் (பழைய & புதிய), ஆர்.ஏ. புரம், பேசின் பிரிட்ஜ், வியாசர்பாடி, மற்றும் செம்பியம் ஆகியவற்றின் வாயிலாக, சென்னையின் முக்கிய பகுதிகளான மயிலாப்பூர், லூஸ், சாந்தோம், நுங்கம்பாக்கம், ராயபுரம், தண்டையார்பேட்டை, டோல்கேட், சைதாப்பேட்டை, வியாசர்பாடி, செம்பியம், கொளத்தூர், பெரியார் நகர், மாதவரம், புழல், ரெட்ஹில்ஸ், கொடுங்கையூர், அண்ணாசாலை, பாரிமுனை, மேற்கு ஜார்ஜ் டவுன், எழும்பூர், மற்றும் சிந்தாதிரிப்பேட்டை ஆகிய பகுதிகளுக்கான மின்சாரத்தை விநியோகித்து வருகிறது.

செப்டம்பர் 12, 2024 அன்று, இரவு சுமார் 09:58 மணி அளவில், மேற்கண்ட 400/230 கி. வோ. மணலி துணை மின் நிலையத்தின் மின்சாரம் வழங்கும் இரண்டு மின்னூட்டி ஆதாரங்களும் இயக்கத்தில் இருந்த போதும், எதிர்பாராத விதமாக 400/230 கி. வோ. அலமாதி துணை மின்நிலையத்தில் ஒரு மிகப்பெரிய தீ விபத்து ஏற்பட்டது. இதன் காரணமாக, மணலி துணை மின்நிலையத்திற்கு மின்சாரம் வழங்கும் இரண்டு 400 கிலோ வோல்ட் மின் ஆதாரங்களின் (அலமாதி மற்றும் NCTPS II) அடுத்தடுத்த மின்தடைக்கு வழிவகுத்தது.

மேலும், இத்துணை மின் நிலையத்தில், ஒரு ஜம்பர் துண்டிப்பும் கண்டறியப்பட்டது. தீ உடனடியாக அணைக்கப்பட்டது. இருப்பினும், இந்த இரட்டை மின் ஆதாரங்களின் செயலிழப்பு காரணமாக மயிலாப்பூர், லஸ், சாந்தோம், நுங்கம்பாக்கம், ராயபுரம், தண்டையார்பேட்டை, டோல்கேட், சைதாப்பேட்டை, வியாசர்பாடி, செம்பியம், கொளத்தூர், பெரியார்நகர், மாதவரம், புழல், ரெட்ஹில்ஸ், கொடுங்கையூர், அண்ணாசாலை, பாரிமுனை, மேற்கு ஜார்ஜ் டவுன், எழும்பூர், மற்றும் சிந்தாதிரிப்பேட்டை உள்ளிட்ட பகுதிகளுக்கு மின்தடை ஏற்பட்டது.

மின் தடை காரணமாக, பொது மக்களுக்கு ஏற்பட்டுள்ள சிரமங்களை நீக்கி, மாற்று வழியில் மின்சாரம் விநியோகம் வழங்கிட அனைத்து நடவடிக்கைகளும் தமிழ்நாடு மின்சார வாரியத்தால் துரிதமாக மேற்கொள்ளப்பட்டது. சீரமைப்பு பணிகளை மேற்கொண்ட போது, கீழ்க்கண்ட மின்னூட்டிகளில் அதிக மின் பளு காரணமாக பாதிப்புகள் ஏற்பட்டது.

1. 230 கி.வோ. வட சென்னை – தண்டையார்பேட்டை 1 & 2 ஆகிய மின்னூட்டிகளில் ஜம்பர் துண்டிப்பு.

2. 230 கி.வோ. கலிவேந்தம்பட்டு – தரமணி மின்னூட்டியில் ஜம்பர் துண்டிப்பு.

3. 230 கி. வோ. ஸ்ரீபெரும்புதூர் – தரமணி மின்னூட்டியில் ஜம்பர் துண்டிப்பு.

இதனால், மின்சாரம் சீரமைப்பு பணிகளில் தொய்வு ஏற்பட்டாலும், போர்க்கால அடிப்படையில் பணிகள் முடுக்கி விட்டு, மாற்று வழியில் மின்சாரத்தை மீட்டு எடுக்கும் பணிகள் இரவு 11.00 மணி அளவில் தொடங்கப்பட்டு, நள்ளிரவு 12.00 மணி அளவில் அண்ணாசாலை, சிந்தாதிரிப்பேட்டை, நுங்கம்பாக்கம், செம்பியம், பெரியார் நகர் பகுதிகளுக்கு உட்பட்ட துணை மின் நிலையங்களுக்கும், 13.09.2024 காலை 01.00 மணி அளவில் புளியந்தோப்பு, கொளத்தூர் பகுதிகளுக்கு உட்பட்ட துணை மின் நிலையங்களுக்கும், 02.00 மணி அளவில் மணலி, மயிலாப்பூர், வியாசர்பாடி, அடையாறு மற்றும் எண்ணூர் பகுதிகளுக்கும் என சென்னை மாநகரம் முழுவதும் 100% மின்சாரம் சீரமைக்கப்பட்டது.

அதிகாலை 02.30 மணிக்குள் சென்னையில் மின் தடை ஏற்பட்ட அனைத்து பகுதிகளுக்கும் மின்விநியோகம் சரிசெய்யப்பட்டு, தற்போது வரையில் தங்குதடையின்றி சீரான மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது,

மேற்கண்ட மின்தடை காரணமாக, சென்னை மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ள அனைத்து மருத்துவமனைகள் மற்றும் அனைத்து அத்தியாவசிய சேவைகளுக்கும் எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை.

தியாவசியத் தேவைகள் ஏதும் பாதிக்கப்படவில்லை. தற்போது மின் சேவை 100 சதவீதம் சீர் செய்யப்பட்டுள்ளது” எனத் தெரிவிகப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x