Published : 13 Sep 2024 06:36 AM
Last Updated : 13 Sep 2024 06:36 AM
சென்னை: ஒருங்கிணைந்த குரூப்-2 மற்றும் குரூப்-2ஏ முதல்நிலைத்தேர்வு நாளை (செப்.14 சனிக்கிழமை) நடைபெறுகிறது. மொத்தம் 2,327 காலியிடங்களுக்காக நடத்தப்படும் இத்தேர்வை சுமார் 8 லட்சம் பேர் எழுதுகிறார்கள்.
தொழிலாளர் உதவி ஆய்வாளர், துணை வணிகவரி அலுவலர், இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர், சார்-பதிவாளர், தலைமைச்செயலக உதவி பிரிவு அலுவலர்,ஃபாரஸ்டர் உள்ளிட்ட குரூப்-2பதவிகளில் 507 காலியிடங்களையும், அதேபோல், கூட்டுறவு சங்கங்களின் முதுநிலை ஆய்வாளர், இந்துசமய அறநிலைய ஆட்சித் துறை தணிக்கை ஆய்வாளர், உள்ளாட்சி தணிக்கை உதவி ஆய்வாளர், கைத்தறி ஆய்வாளர், வருவாய் ஆய்வாளர் உள்ளிட்ட குரூப்-2ஏ பதவிகளில் 1,820 காலியிடங்களையும் (மொத்தம் 2,327) நிரப்புவதற்கான ஒருங்கிணைந்த குரூப்-2, குரூப்-2 ஏதேர்வுக்கான அறிவிப்பை டிஎன்பிஎஸ்சி கடந்த ஜுன் மாதம் வெளியிட்டது. முதல்கட்ட தேர்வான முதல்நிலைத்தேர்வு செப்.14-ம்தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. இதற்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு ஜுன் 20-ம் தேதி தொடங்கி ஜூலை 19-ம் தேதி முடிவடைந்தது.
பட்டப்படிப்பை அடிப்படை கல்வித்தகுதியாக கொண்ட குரூப்-2 தேர்வுக்கு 8 லட்சத்துக்கும் மேற்பட்ட பட்டதாரிகளும், முதுகலை பட்டதாரிகளும் விண்ணப்பித்தனர். இந்நிலையில், விண்ணப்பதாரர்களில் 7 லட்சத்து 93ஆயிரத்து 947 பேரின் விண்ணப்பங்கள் ஏற்கப்பட்டு அவர்களுக்கு ஆக.31-ம் தேதி ஆன்லைனில் ஹால்டிக்கெட் வழங்கப்பட்டது. இதைத் தொடர்ந்து கடந்த 6-ம் தேதி தேர்வுக்கான முன்னேற்பாடுகள் தொடர்பாக டிஎன்பிஎஸ்சி தலைவர் எஸ்.கே.பிரபாகர் அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் வீடியோ கான்பரன்சிங் வாயிலாக ஆலோசனை நடத்தினார்.
இந்நிலையில் ஏற்கெனவே அறிவிக்கப்பட்டவாறு முதல்நிலைத்தேர்வு நாளை (சனிக்கிழமை) நடைபெறுகிறது. தமிழகம்முழுவதும் 2,763 தேர்வு மையங்களில் 7 லட்சத்து 93 ஆயிரத்து 947 பேர் தேர்வெழுதுகின்றனர். தேர்வு காலை 9.30 மணி முதல் மதியம் 12.30 மணி வரை நடைபெறுகிறது. தேர்வு தொடங்குவதற்கு ஒருமணி நேரத்துக்கு முன்பாக தேர்வுக்கூடத்துக்கு செல்லுமாறுதேர்வர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். மேலும் தேர்வுக்கூடத்தில் பல்வேறு கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளன.
ஓர் இடத்துக்கு 10 பேர்: முதல்நிலைத்தேர்வில் இருந்து "ஒரு காலியிடத்துக்கு 10 பேர்" என்ற விகிதாச்சார அடிப்படையில் முதன்மைத்தேர்வுக்கு தேர்வர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். அந்தவகையில் தற்போது காலியிடங்களின் எண்ணிக்கை 2,327 ஆக இருப்பதால் சுமார் 24 ஆயிரம் பேர் முதன்மைத்தேர்வெழுத தேர்வு செய்யப்படுவர். முதன்மைத்தேர்வு குரூப்-2 பணிகளுக்கு விரிவாகவிடையளிக்கும் வகையிலும், குரூப்-2-ஏ பணிகளுக்கு அப்ஜெக்டிவ் முறையில் விடையளிக்கும் வகையிலும் அமைந்திருக்கும். இருவகை பணிகளுக்குமே நேர்முகத்தேர்வு கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment