Published : 12 Sep 2024 11:41 PM
Last Updated : 12 Sep 2024 11:41 PM
மதுரை: சென்னையில் உள்ள அனைத்து தீர்ப்பாயங்களின் கிளையும் மதுரையில் தொடங்க வேண்டும் என உச்ச நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி மார்க்கண்டேயே கட்ஜூ பேசினார்.
உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் எம்எம்பிஏ வழக்கறிஞர்கள் சங்கத்தின் நிறுவனர்கள் தின விழா நடைபெற்றது. உயர்நீதிமன்ற மதுரை அமர்வு நிர்வாக நீதிபதி ஆர்.சுப்பிரமணியன் தலைமை வகித்தார். எம்எம்பிஏ தலைவர் ஐசக்மோகன்லால் வரவேற்றார். உச்ச நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி மார்க்கண்டேயே கட்ஜு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.
அவர் பேசியதாவது: “உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் திறமையான வழக்கறிஞர்கள் உள்ளனர். மதுரை அமர்வால் தென் மாவட்ட மக்கள் அதிகளவில் பயனடைந்து வருகின்றனர். தற்போது பெரும் தொகை சம்பந்தப்பட்ட உரிமையியல் அசல் வழக்குகள் தற்போது வரை சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படுகிறது. இந்த அசல் உரிமையியல் மேல் முறையீட்டு மனுக்களை விசாரிக்கும் அதிகாரத்தையும் மதுரை அமர்வுக்கு வழங்க வேண்டும்.
சென்னையில் என்னென்ன தீர்ப்பாயங்கள் உள்ளதோ, அந்த தீர்ப்பாயங்களின் கிளைகளை மதுரையில் தொடங்க வேண்டும். அப்போது தான் தென் மாவட்ட மக்கள் பயனடைவர். சென்னை உயர் நீதிமன்றத்தில் தற்போது அனுமதிக்கப்பட்ட நீதிபதிகள் எண்ணிக்கை 75. அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் பல ஆண்டுக்கு முன்பே நீதிபதிகளின் எண்ணிக்கை நூறை தாண்டிவிட்டது. அதே போல் சென்னை உயர் நீதிமன்றத்திலும் நீதிபதிகளின் எண்ணிக்கையை நூறாக உயர்த்த வேண்டும்” இவ்வாறு அவர் பேசினார்.
உயர்நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி ஜோதிமணி பேசுகையில், “புவி வெப்பமயமாதல் அதிகரித்துள்ளது. கடலின் வெப்பநிலை, தற்போதைய வெப்ப நிலையில் இருந்து சற்று உயர்ந்தாலும் சுனாமி வந்துவிடும். புயல் அடிக்கலாம், மழை பெய்யலாம். ஆனால் மேக வெடிப்பு கூடாது. எனவே, இளைய தலைமுறையினர் சுற்றுச்சூழல் பாதுகாப்பில் அதிக கவனம் செலுத்த வேண்டும்” என்றார். உயர்நீதிமன்ற மதுரை அமர்வு நீதிபதிகள், மூத்த வழக்கறிஞர்கள் பங்கேற்றனர். எம்எம்பிஏ செயலாளர் சரவணகுமார் நன்றி கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT