Published : 12 Sep 2024 08:47 PM
Last Updated : 12 Sep 2024 08:47 PM
மதுரை: அரசு போக்குவரத்துக் கழக ஊழியர்களின் இபிஎப் பணம் எங்கே என உயர் நீதிமன்ற மதுரைக் கிளை கேள்வி எழுப்பியுள்ளது.
மதுரை கோட்ட அரசு போக்குவரத்துக் கழகத்தில் பணிபுரிந்த சுப்புராஜ் ஜூன் 30ம் தேதி 2023ல் ஓய்வு பெற்றார். அவர் ஓய்வூதியப் பணப் பலன்கள், விடுமுறை நாள் ஊழியம், பணிக்கொடை, வருங்கால வைப்பு நிதி கேட்டு உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் மனு தாக்கல் செய்தார். இதனை விசாரித்த தனி நீதிபதி, "மனுதாரருக்கு ஓய்வு பெற்ற நாளிலிருந்து 6 சதவீத வட்டியுடன் அனைத்து பணப் பலன்களையும் வழங்க வேண்டும் என டிசம்பர் 21ம் தேதி 2023ல் உத்தரவிட்டார். இந்த உத்தரவை நிறைவேற்றாததால் மதுரை அரசு போக்குவரத்துக் கழக மேலாண்மை இயக்குனர் ஆறுமுகம், பொதுமேலாளர் சிவலிங்கம், நெல்லை மண்டல அரசு போக்குவரத்துக் கழக நிர்வாகி பாமா ஆகியோர் மீது நீதிமன்ற அவமதிப்பு மனு தாக்கல் செய்யப்பட்டன.
இந்த மனுவை விசாரித்து நீதிபதி ஆர்.விஜயகுமார் பிறப்பித்த உத்தரவில்: "மனுதாரருக்கு மார்ச் 31ம் தேதி 2024-க்குள் பணிக் கொடையை பணத்தையும், ஜூன் 30ம் தேதி 2024-க்குள் மற்ற பணப் பலன்களையும் வழங்க வேண்டும் என டிசம்பர் 21-ம் தேதி 2023ல் உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த உத்தரவு நிறைவேற்றப்படாததால் நீதிமன்ற அவமதிப்பு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
அரசு போக்குவரத்துக் கழக பொது மேலாளர் தாக்கல் செய்த பதில் மனுவில், ”மனுதாரருக்கு வழங்க வேண்டிய பணப்பலன் ரூ.27,58,356, அரசிடம் நிதி உதவி பெற்று விரைவில் வழங்கப்படும் எனக் கூறப்பட்டுள்ளது. இதிலிருந்து அரசு போக்குவரத்துக் கழகம் அரசின் நிதி உதவி பெறாமல் மனுதாரருக்கு வழங்க வேண்டிய பணப்பலன்களை வழங்க வாய்ப்பில்லை என்பது தெரிகிறது. பணிக்கொடை, விடுமுறை ஊதியத்தை பொறுத்தவரை அரசிடன் நிதியுதவி எதிர்ப்பார்ப்பதில் நியாயம் உள்ளது.
வருங்கால வைப்பு நிதியை பொறுத்தவரை அரசு போக்குவரத்து கழகம் தனி இபிஎப் அறக்கட்டளை நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதன்படி அரசு போக்குவரத்துக் கழகம் தனியாக இபிஎப் அறக்கட்டளை நடத்தி ஊழியர்களிடம் வருங்கால வைப்பு நிதி பிடித்தம் செய்து வருகிறது. அப்பணத்தை ஊழியர்களுக்கு வழங்க அரசிடம் நிதியுதவி பெற வேண்டும் என்ற கேள்வி எழவில்லை.
அப்படியிருக்கும் போது அரசு போக்குவரத்துக் கழகம் உருவாக்கிய வருங்கால வைப்பு நிதி அறக்கட்டளையில் வரவு வைக்கப்பட்ட பணம் எங்கே போனது என்பது தெரியவில்லை. இது குறித்து விசாரிக்க மதுரை எஸ்எஸ் கலானி காவல் நிலை ஆய்வாளர் எதிர்மனுதாரராக சேர்க்க உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை செப்டம்பர் 30ம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுகிறது" என்று நீதிபதி விஜயகுமார் கூறியுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT