Published : 12 Sep 2024 08:34 PM
Last Updated : 12 Sep 2024 08:34 PM
சென்னை: “சிறப்பாக செயல்படும் மாநிலங்களை கட்டுப்படுத்தும் அணுகுமுறையை நிதிக்குழுக்கள் மாற்றிக் கொண்டு, அனைத்து மாநிலங்களையும் பாதுகாக்கும் வழிமுறைகளை உருவாக்க வேண்டும்,” என்று நிதியமைச்சர்கள் மாநாட்டில் தமிழக நிதியமைச்சர் தங்கம் தென்னரசு வலியுறுத்தினார்.
கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில், 16-வது நிதிக்குழு தொடர்பான மாநில நிதியமைச்சர்கள் கூட்டம் இன்று (செப்.12) நடைபெற்றது. இக்கூட்டத்தில், தமிழக அரசு சார்பில் அமைச்சர் தங்கம் தென்னரசு, நிதித்துறை செயலர் த.உதயச்சந்திரன் ஆகியோர் பங்கேற்றனர். கூட்டத்தில், அமைச்சர் தங்கம் தென்னரசு பேசியதாவது: “இந்த கூட்டத்தில் பங்கேற்கும் அனைத்து மாநிலங்களும் தங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்வதற்கான சிறப்பான வாய்ப்பாக அமைந்துள்ளது.மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் இடையிலான அதிகாரங்கள், பொறுப்புகளை பகிர்ந்து அளிப்பதில் இந்திய அரசியலில் உள்ளார்ந்த அரசியல் ஏற்றத்தாழ்வு இருக்கிறது.
சமுதாய மேம்பாடு, கல்வி, சுகாதாரம், விவசாயம், சமூக நலன் உள்ளிட்ட பொதுமக்கள் சேவைகள் போன்ற பெரும்பாலான பொறுப்புகள் மாநில அரசுகளுக்கு வழங்கப்பட்டாலும், வருவாய் உருவாக்கம் சார்ந்த பெரும்பான்மை அதிகாரங்களை மத்திய அரசே வைத்துள்ளது. இந்த சூழலில்தான், அடுத்தடுத்து அமைக்கப்பட்ட நிதிக்குழுக்கள் வருவாய் பங்கீட்டை மத்திய, மாநில அரசுகளிடையே அதிகரிக்க முயற்சி செய்தன. அந்த வகையில், கடந்த 15-வது நிதிக்குழுவானது 41 சதவீத பகிர்வை பரிந்துரைத்தது. ஆனால், முதல் நான்கு ஆண்டுகளில் மொத்த வரி வருவாயில் 31.42 சதவீதம் மட்டுமே பகிரப்பட்டது.
ஒருபுறம், செஸ் மற்றும் மேல் வரி ஆகியவற்றால் நிதிப்பகிர்வு குறைந்துள்ளது. மறுபுறம், நிதிப்பகிர்வு முறை மாற்றத்தின் காரணமாக மத்திய அரசின் திட்டங்களில் மாநில அரசுகளின் பங்கு அதிகரித்து வருகிறது. இது மாநிலங்களுக்கு இருபுறமும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. அத்துடன், அரசியலமைப்பின் கீழ் கட்டாயப்படுத்தப்பட்ட துறைகளுக்கான ஏற்கெனவே செயல்படுத்தப்படும் மற்றும் புதிய திட்டங்களுக்கான நிதி வளத்தை குறைத்துள்ளது. மத்திய வரிப்பகிர்வில் 50 சதவீதம் வேண்டும் என்று மாநிலங்கள் இணைந்து கோருவது முக்கியமான தேவையாகிறது. மேலும், விருப்ப மானியங்களின் மீதான நம்பகத்தன்மையை குறைப்பது, கணிக்கக்கூடிய மற்றும் புற நிதி ஆதார பரிமாற்றங்களை அதிகரிப்பதையும் உறுதி செய்ய நிதிக்குழுவை நாம் வலியுறுத்த வேண்டும்.
அதே நேரம், செஸ் மற்றும் மேல் வரியின் பயன்பாட்டை கட்டுப்படுத்துவது மற்றும் மாநிலங்களின் நலன்களை பாதுகாக்க சரியான நடவடிக்கைகளை பரிந்துரைக்கவும், ஒரு வழிமுறையை நிதிக்குழுக்கள் கட்டாயம் உருவாக்க வேண்டும்.தமிழகத்தின் அனுபவத்தில், மாநிலத்தின் சிறப்பான செயல்பாடுகள் காரணமாக, நிதிக்குழுக்களால் தொடர்ந்து தண்டிக்கப்பட்டு வருகிறது. கடந்த 9-வது நிதிக்குழுவின் போது, 7.931 சதவீதமாக இருந்த அதிகாரப்பகிர்வில் தமிழகத்தின் பங்கு, 15-வது நிதிக்குழுவில் 4.079 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. இவ்வாறாக தொடர் குறைப்பின் காரணமாக, தமிழகத்துக்கு ரூ.3.57 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது.
இது தமிழகத்தின் நிலுவைக்கடனில் 43 சதவீதமாகும். இந்த நிதிக்குறைப்பு மாநில நிதியத்தின் மீது மிகப்பெரும் சுமையை ஏற்படுத்தியுள்ளதுடன், மாநிலம் தனது முழுமையான திறனையும் அடைவதற்கான வாய்ப்பை இழந்துவிட்டதையும் பிரதிபலிக்கிறது. மாநிலங்களுக்கு இடையிலான பங்கை தீர்மானிக்கும் போது, அனைத்து நிதிக்குழுக்களும், சமபங்கு மற்றும் செயல்திறனுக்கு இடையில் சமநிலையை உருவாக்க வேண்டும். ஆனால், மறு பகிர்வுக்கு அதிக முக்கியத்துவம் அளிப்பது என்பது, சிறப்பாக செயல்படாத மாநிலங்களுக்கு ஆதரவாக ஊக்க நிதிகளை திசைதிருப்புவது மட்டுமின்றி, வேகமாக வளர்ந்து வரும் பகுதிகளின் முக்கியமான வளர்ச்சி வளங்களை இழக்கச்செய்கின்றன.
போதிய வளங்கள் இன்றி, வேகமாக வளர்ச்சி பெறும் பகுதிகளின் வளர்ச்சியை குறைக்கும் பட்சத்தில், மறு பங்கீட்டு பயனாளிகளை உள்ளடக்கிய ஒட்டுமொத்த நாடும் பாதிக்கப்படும். குறிப்பாக, ஏழை மாநிலங்ககளுக்கு மறுபகிர்வு செய்யும் வகையிலான அணுகுமுறையை ஒவ்வொரு நிதிக்குழுவும் பின்பற்றப்படுகிறது. ஆனால், இந்த அணுகுமுறையாலும், ஏழை மாநிலங்களால் தாங்கள் விரும்பிய அளவுக்கு வளர்ச்சியை அடைய முடியவில்லை.
எனவே, நிதிக்குழுக்கள் தங்கள் அணுகுமுறையை மறு பரிசீலனை செய்வது அவசியம். இதுதவிர, மாநிலங்களின் செயல்திறனுக்கு ஊக்கமளிக்கும் ஒரு கட்டமைப்பை ஏற்றுக் கொள்வதுடன், வளரும் மாநிலங்களை கட்டுப்படுத்துவதற்கு பதில் அனைத்து மாநிலங்களும் முன்னேறும் சூழலை உருவாக்க வேண்டும். மேலும் சமபங்கு மற்றும் வளர்ச்சி ஆகிய இரண்டையும் ஆதரிக்கும் மிகவும் சமநிலையான அணுகுமுறைக்காக நாம் அனைவரும் உழைக்க முடியும் என நம்புகிறேன்" என்று அவர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT