Published : 12 Sep 2024 06:48 PM
Last Updated : 12 Sep 2024 06:48 PM
ஈரோடு: தமிழகத்தில் டாஸ்மாக் மதுபானக் கடையை நடத்துவதில் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு எள்ளளவு கூட விருப்பமில்லை என அமைச்சர் முத்துசாமி கூறியுள்ளார்.
ஈரோடு அரசு பேருந்து நிலையத்தில் 5 புதிய பேருந்துகள் இயக்கத்தைத் தொடங்கி வைத்த பின்னர் நிகழ்ச்சியில் பேசிய வீட்டு வசதி மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் சு.முத்துசாமி கூறியது: "விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் மதுவிலக்கு கொள்கையை மக்களிடம் கொண்டு செல்வதற்காக ஒரு மாநாட்டை நடத்துகின்றனர். அவர்கள் நடத்தும் மதுவிலக்கு மாநாட்டை நாம் தவறு என்று சொல்ல முடியாது. அவர்கள் அரசை எதிர்த்தோ, முதல்வர் ஸ்டாலினை எதிர்த்தோ மாநாடு நடத்தவில்லை.
முதல்வர் ஸ்டாலினுக்கு டாஸ்மாக் கடையை தொடர்ந்து நடத்துவதில் எள் அளவுக்கும் விருப்பம் இல்லை. டாஸ்மாக் கடைகள் என்றைக்காவது ஒரு நாள் மூடப்படவேண்டும் என்பது தான் அவரின் எண்ணம். ஆனால், உடனடியாக இதனைச் செய்தால் எந்த நிலைமை ஏற்படும் என்று அனைவருக்கும் தெரியும். எனவே அப்படிப்பட்ட கடுமையாக சூழ்நிலையை நிதானமாக அணுக வேண்டும் என்பது தான் அரசின் நோக்கமாக உள்ளது.
எனவே, மக்களை மது பழக்கத்தில் இருந்து மீட்டு கொண்டுவர தொடர் நடவடிக்கை எடுக்கப்படும். ஒரு திருமணம் நடந்தால் எதிரி உட்பட அனைவருக்கும் அழைப்பு கொடுக்கிறோம். அதுபோல, மதுவிலக்கு மாநாட்டுக்கு விசிக அழைப்பு விடுத்துள்ளனர். அதற்கே அதிமுகவினர் இவ்வளவு மகிழ்ச்சி அடைகின்றனர். விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாநாட்டை அரசியலாக்க முயற்சிக்கின்றனர்" என்று அமைச்சர் முத்துசாமி கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Loading comments...