Last Updated : 12 Sep, 2024 06:39 PM

 

Published : 12 Sep 2024 06:39 PM
Last Updated : 12 Sep 2024 06:39 PM

த.வெள்ளையன் உடல் சொந்த ஊரில் அடக்கம்: மக்கள் இறுதி அஞ்சலி; தூத்துக்குடியில் கடைகள் அடைப்பு

திருச்செந்தூர் அருகே உள்ள பிச்சிவிளையில் த.வெள்ளையன் உடலுக்கு அமைச்சர் பெ.கீதாஜீவன் அஞ்சலி செலுத்தினார்.

தூத்துக்குடி: உடல்நலக் குறைவால் காலமான தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை தலைவர் த.வெள்ளையன் உடல் இன்று அவரது சொந்த ஊரான திருச்செந்தூர் அருகேயுள்ள பிச்சிவிளை கிராமத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது. அமைச்சர்கள் கீதாஜீவன், அனிதா ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் வெள்ளையன் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.

தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை தலைவர் த.வெள்ளையன் (76). நுரையீரல் தொற்று உள்ளிட்ட பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், கடந்த 10-ம் தேதி காலமானார். இரண்டு நாட்கள் சென்னையில் அஞ்சலிக்கு பிறகு அவரது உடல் இன்று காலை 7.30 மணியளவில் அவரது சொந்த ஊரான தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகேயுள்ள பிச்சிவிளை கிராமத்துக்கு கொண்டுவரப்பட்டது.

திருச்செந்தூர் அருகே உள்ள பிச்சிவிளையில் த.வெள்ளையன் உடலுக்கு அமைச்சர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் அஞ்சலி செலுத்தினார்.

தொடர்ந்து பொதுமக்கள் அஞ்சலிக்காக அவரது உடல் பிச்சிவிளையில் உள்ள திருமண மண்டபத்தில் வைக்கப்பட்டிருந்தது. அங்கு தமிழக சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சர் பெ.கீதாஜீவன், மீன்வளம், மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன், திருநெல்வேலி மக்களவை தொகுதி உறுப்பினர் ராபர்ட் புரூஸ், ஸ்ரீவைகுண்டம் சட்டப்பேரவை உறுப்பினர் ஊர்வசி எஸ்.அமிர்தராஜ், அதிமுக தெற்கு மாவட்ட செயலாளர் எஸ்.பி.சண்முகநாதன், மாநில வர்த்தக அணி செயலாளர் சி.த.செல்லப்பாண்டியன், தெற்கு மாவட்ட பாஜக தலைவர் ஆர்.சித்ராங்கதன், மாநில வர்த்தக அணி தலைவர் ராஜகண்ணன் உள்ளிட்ட பல்வேறு கட்சிகள், அமைப்புகளை சேர்ந்தவர்கள், வியாபாரிகள் சங்க நிர்வாகிகள், வியாபாரிகள், பொதுமக்கள் வெள்ளையன் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.

பொதுமக்கள் அஞ்சலிக்கு பிறகு மாலை 4 மணியளவில் வெள்ளையன் உடல் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு, அருகே உள்ள அவரது தோட்டத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது. இறுதி சடங்கில் அவரது குடும்பத்தினர், உறவினர்கள், கிராம மக்கள் மற்றும் தமிழகம் முழுவதிலும் இருந்து வந்திருந்த வியாபாரிகள் சங்க நிர்வாகிகள், வியாபாரிகள் திரளாக கலந்து கொண்டனர்.

தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை தலைவர் த.வெள்ளையன் உடல் இறுதிச் சடங்கை முன்னிட்டு தூத்துக்குடியில் இன்று அடைக்கப்பட்டிருந்த கடைகள். | படம்: என்.ராஜேஷ்

திடீர் போராட்டம்: பிச்சுவிளை திருமண மண்டபத்தில் வெள்ளையன் உடல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்த நிலையில், அவருக்கு முழு அரசு மரியாதை வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி அவரது ஆதரவாளர்கள் மண்டபம் முன்பு திடீரென சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை பாதுகாப்புப் பணியில் இருந்த போலீசார், வெள்ளையன் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் சமாதானப்படுத்தினர். இதனால் சிறிது நேரத்தில் போராட்டத்தை வியாபாரிகள் கைவிட்டனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

கடைகள் அடைப்பு: வெள்ளையன் உடல் இறுதிச் சடங்கை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டத்தில் கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. தூத்துக்குடி, திருச்செந்தூர், ஏரல், ஆறுமுகநேரி, ஆத்தூர், சாத்தான்குளம், உடன்குடி, ஸ்ரீவைகுண்டம் உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. இதனால் அனைத்து சாலைகளும் வெறிச்சோடி காணப்பட்டன.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x