Last Updated : 12 Sep, 2024 04:43 PM

 

Published : 12 Sep 2024 04:43 PM
Last Updated : 12 Sep 2024 04:43 PM

தமிழக அரசு ஊழியர்கள் பணிக்கொடை ரூ.25 லட்சமாக உயர்வு: மத்திய அரசைத் தொடர்ந்து நடவடிக்கை

சென்னை: மத்திய அரசு உயர்த்தியதைத் தொடர்ந்து, தமிழக அரசு ஊழியர்களுக்கான பணிக்கொடை ரூ.20 லட்சத்தில் இருந்து ரூ.25 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.

தமிழக அரசு ஊழியர்களில் 2003-ம் ஆண்டு ஏப்.1-ம் தேதிக்குப் பின் பணியில் சேர்ந்தவர்களுக்கு பங்களிப்பு ஓய்வூதிய திட்டம் செயல்படுத்தப்படுகிறது. அதற்கு முன் பணியில் சேர்ந்தவர்கள் பழைய ஓய்வூதிய திட்டத்தின் கீழ் வருகின்றனர். பழைய ஓய்வூதிய திட்டத்தில் பணியாற்றுவோர் ஓய்வு பெற்றால், அவர்களுக்கு பணிக்கொடை வழங்கப்படுகிறது. அந்த வகையில், தற்போது வரை ரூ.20 லட்சம் பணிக்கொடையாக வழங்கப்படுகிறது. இந்த தொகையை மத்திய அரசு தனது ஊழியர்களுக்கு ரூ.25 லட்சமாக உயர்த்தியுள்ள நிலையில், தமிழக அரசும் தற்போது உயர்த்தியுள்ளது.

இது குறித்து, தமிழக நிதித்துறை செயலர் த.உதயச்சந்திரன் இன்று வெளியிட்ட உத்தரவு: தமிழக அரசு கடந்த 2017ம் ஆண்டு வெளியிட்ட அரசாணையின் படி, ஓய்வுக் கால பணிக்கொடை மற்றும் இறப்பு பணிக்கொடை ஆகியவை, 2016ம் ஆண்டு ஜனவரி 1ம் தேதி கணக்கிட்டு, ரூ.10 லட்சத்தில் இருந்து ரூ.20 லட்சமாக உயர்த்தப்பட்டது. மேலும், அதிகபட்ச பணிக்கொடை தொகையில் இருந்து 25 சதவீதம் அதாவது ரூ.20 லட்சத்துக்கு, ரூ.5 லட்சம் என்ற அளவில், அகவிலைப்படியின் அளவு 50 சதவீதத்தை தாண்டும் போது பணிக்கொடை உயர்த்தப்பட வேண்டும் என்பதும் குறிப்பிடப்பட்டது.

இதையடுத்து, கடந்த ஜனவரி மாதம் 1-ம் தேதி நிலவரப்படி, அரசு ஊழியர்கள், ஒய்வூதியர்களுக்கு வழங்கப்படும் அகவிலைப் படியானது, 46 சதவீதத்தில் இருந்து 50 சதவீதமாக உயர்ந்துள்ளது. இந்நிலையில், மத்திய அரசு அனுப்பிய கடிதத்தில், இந்தாண்டு ஜனவரி 1ம் தேதி முதல், 7வது ஊதிய கமிஷனின் பரிந்துரைப்படி, ஓய்வுக் கால பணிக்கொடை மற்றும் இறப்புக் கால பணிக்கொடையானது ரூ.25 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளதாக தெரிவித்தது. இதன் அடிப்படையில், தமிழக அரசும் பணிக்கொடை உச்சவரம்பை ரூ.20 லட்சத்தில் இருந்து ரூ.25 லட்சமாக உயர்த்த முடிவெடுத்தது.

இந்த உயர்வு கடந்த ஜனவரி 1ம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளது. இதன் மூலம் கடந்த ஜனவரி 1ம் தேதி முதல் ஒய்வு பெற்ற அரசு ஊழியர்கள் இதில் பயன்பெறுவார்கள். இது தொடர்பாக கருவூலம் மற்றும் கணக்குத் துறை ஆணையர் தகுந்த உத்தரவுகளை கருவூல அதிகாரிகள், சார் கருவூல அதிகாரிகள், ஒய்வூதிய வழங்கல் அதிகாரிகள், ஒய்வு பெறும் ஊழியர்களுக்கான பணிக்கொடையை கணக்கிட்டு வழங்க வேண்டும் என்று நிதித்துறை செயலர் உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x