Last Updated : 12 Sep, 2024 02:29 PM

 

Published : 12 Sep 2024 02:29 PM
Last Updated : 12 Sep 2024 02:29 PM

போலி மதுபான வலையமைப்பு முறியடிப்பு: டிஜிபி சங்கர் ஜிவால் தகவல்

சங்கர் ஜிவால் | கோப்புப் படம்

சென்னை: தமிழகத்தில் போலி மதுபானபாட்டில்கள் விற்பனை புழக்கத்தை கட்டுப் படுத்த தமிழ்நாடு அமலாக்கப் பணியகம் குற்றப் புலனாய்வு துறை அனைத்து முயற்சிகளையும் எடுத்து வருகிறது. மாநிலத்தில் நடத்திய முக்கிய சோதனையில் கர்நாடக மாநிலத்தில் செயல்பட்டு வந்த போலி மதுபான வலையமைப்பு முறியடிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக தமிழக சட்டம் - ஒழுங்கு டிஜிபி சங்கர் ஜிவால் இன்று (வியாழக்கிழமை) வெளியிட்ட செய்திக் குறிப்பில், “கடந்த 3ம் தேதி திருச்சியைச் சேர்ந்த முருகவேல் என்ற சரித்திர பதிவேடு குற்றவாளி, போலி மதுபாட்டில்களை பதுக்கிவைத்து விற்பனை செய்வதாக தகவல் கிடைத்துள்ளது. அதன் பேரில், மத்திய நுண்ணறிவுப் பிரிவு திருச்சி மண்டல ஆய்வாளரான ராமன் தலைமையிலான குழுவினர், திருச்சி எடமலைபட்டி புதூர் சென்று முருகவேலை கைது செய்தனர். மேலும், அவர் பதுக்கி வைத்திருந்த 644 (750 மிலி) போலி மதுபாட்டில்களைக் கைப்பற்றினர்.

விசாரணையில், முருகவேல் பெங்களூருவிலிருந்து போலி மதுபாட்டில்களை பிளாஸ்டிக் டிரம்மில் அடைத்து வைத்து Pon Pure Logistics மூலமாக திருச்சி கொண்டுவந்து விற்பனை செய்தது விசாரணையில் தெரியவந்தது. இதனை தொடர்ந்து கடந்த 5-ம் தேதி மத்திய நுண்ணறிவு பிரிவு, மதுரை மண்டல குழுவினர், விருதுநகர் மாவட்டம் பெரியவள்ளிகுளத்தில் வைத்து வீரராஜ் என்பவரை கைது செய்தனர். மேலும் அவர் வீட்டை சோதனை செய்ததில் அங்கு பதுக்கிவைக்கப்பட்டிருந்த 264 (750 மிலி) போலி மதுபாட்டில்கள் கைப்பற்றப்பட்டது.

இதேபோல், திருநெல்வேலி மாநகர காவல் அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் பேரில் திருநெல்வேலி மாவட்டம் கம்பராமாயணம் தெருவில் உள்ள ஒரு வீட்டை சோதனை செய்ததில் அங்கு பதுக்கி வைக்கப்பட்டிருந்த 1,026 (750 மிலி) போலி மதுபாட்டில்கள் கைப்பற்றப்பட்டது. விசாரணையில், கோவாவில் குடியேறிய தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரத்தை சேர்ந்த மாரிராஜன் என்பவர் கர்நாடக மாநிலத்திலிருந்து அந்த போலி மதுபாட்டில்களை கொண்டு வந்தவர் என்பது தெரியவந்தது.

இது தொடர்பாக கிடைந்த தகவலின்படி இபிசிஐடி (EBCID) குழுவினர் பெங்களூருவைச் சேர்ந்த கேசவ மூர்த்தி (50) என்பவரையும் கைது செய்தனர். அத்துடன், போலி மதுபாட்டில்களை பதுக்கிவைத்திருந்த குடோனும் கண்டறியப்பட்டது. பெங்களூருவிலிருந்து போலி மது ஆனது பாட்டில்களில் அடைக்கப்பட்டு, 'For Defence Service Only' என்ற போலி முத்திரை குத்தப்பட்டு அவற்றை பிளாஸ்டிக் பேரலில் மறைத்து வைத்து தமிழகத்துக்கு கடத்தியுள்ளனர். இந்த போலி மதுபானங்களை கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக மாரிராஜன் என்பவர் தமிழ்நாட்டில் பல்வேறு பகுதிகளுக்கு விநியோகம் செய்து வந்தது தெரிய வருகிறது.

மேலும், பெங்களுருவிலிருந்து கடத்தப்படும் போலி மதுபாட்டில்கள் ABT Parcel service மற்றும 'Pon Pure Logistics மூலமாகதான் தமிழ்நாட்டிற்கு கொண்டுவரப்பட்டுள்ளது. மேற்கண்ட தகவலின் அடைப்படையில் குற்றவாளிகளை கைது செய்ய கிருஷ்ணகிரி, திண்டுக்கல், சங்கரன்கோவில், மார்தாண்டம் மற்றும் தூத்துக்குடி ஆகிய இடங்களில் சோதனை நடத்தப்பட்டது. இச்சோதனைகளில் கீழ்கண்ட குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு, போலி மதுபாட்டில்கள் கைப்பற்றப்பட்டன.

கிருஷ்ணகிரி: முனியப்பன், முருகன் மற்றும் சக்தி ஆகியோர் கைது செய்யப்பட்டு அவர்களிடமிருந்து 47 போலி மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யபட்டன.

திண்டுக்கல்: ஷேக் அப்துல்லா என்பவர் கைது செய்யப்பட்டு அவரிடமிருந்து 136 போலி மதுபாட்டில்கள் பறிமுதல் செய்ய்பட்டன.

சங்கரன்கோவில் : அய்யனார் மற்றும் வேல்ராஜ் ஆகியோர் கைது செய்யப்பட்டு அவர்களிடமிருந்து 300 போலி மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

மார்த்தாண்டம்: செல்வராஜ் என்பவர் கைது செய்யபட்டு அவரிடமிருந்து 11 போலி மதுபாட்டில்கள் பறிமுதல் செய்ய்பட்டன.

இதில் முக்கிய குற்றவாளியான மாரிராஜன் என்பவரை மத்திய நுண்ணறிவு பிரிவு, திருச்சி மண்டல தனிப்படை குழுவினர் கோவா மாநிலத்தில் கைது செய்து திருச்சி மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவில் ஒப்படைத்தனர். விசாரணைக்குப் பிறகு மாரி ராஜன் நேற்று முந்தினம் 10ம் தேதி சிறையில் அடைக்கப்பட்டார். இவர் இந்திய ராணுவத்தில் பணிபுரிந்து 2000ல் பணி ஓய்வு பெற்றவர் என்பதும், இவர் மீது தூத்துக்குடி மது விலக்கு அமலாக்கப் பிரிவில் சரித்திர பதிவேடு 2014 முதல் உள்ளது என்பதும் விசாரணையில் தெரிகிறது. மேலும், இத்தொடர் நடவடிக்கையில் 14 குற்றவாளிகள் இபிசிஐடி (EBCID) குழுவினரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்” என்று டிஜிபி சங்கர் ஜிவால் கூறியுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x