Published : 12 Sep 2024 12:22 PM
Last Updated : 12 Sep 2024 12:22 PM

பொங்கல் டிக்கெட் முன்பதிவு: முக்கிய ரயில்களில் 5 நிமிடங்களில் முடிந்தது 

சென்னை: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, சென்னை உள்ளிட்ட பெரு நகரங்களில் இருந்து சொந்த ஊர்களுக்குச் செல்வதற்கு வசதியாக, ரயில் டிக்கெட் முன்பதிவு இன்று (செப்.12) காலை தொடங்கிய நிலையில், தென் மாவட்டங்ளுக்கு புறப்படும் முக்கிய ரயில்களில் 5 நிமிடங்களிலேயே டிக்கெட் முன்பதிவு முடிந்தது.

அடுத்த ஆண்டு ஜன.14-ம் தேதி (செவ்வாய்க்கிழமை) பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. ஜன.15-ம் தேதி (புதன்கிழமை) மாட்டுப் பொங்கல், ஜன.16-ம் தேதி ( வியாழக்கிழமை) காணும் பொங்கல் ஆகிய பண்டிகைகளும் வரவுள்ளன. மேலும், ஜன.13-ம் தேதி (திங்கள்கிழமை) போகி பண்டிகையும் கொண்டாடப்படவுள்ளது. இதை முன்னிட்டு, சென்னை உள்ளிட்ட பெருநகரங்களில் இருந்து சொந்த ஊர்களுக்கு ரயில்களில் செல்ல வசதியாக, ரயில்வேயில் 120 நாட்களுக்கு முன்பே டிக்கெட் முன்பதிவு செய்து கொள்ளும் வசதி இருக்கிறது.

இந்நிலையில், ஜன.10-ம் தேதி (வெள்ளிக்கிழமை) பயணம் செய்வதற்கான டிக்கெட் முன்பதிவு இன்று (செப்.12) காலை 8 மணிக்கு தொடங்கியது. ஐ.ஆர்.சி.டி.சி இணையதளம் வழியாகவும், ரயில் டிக்கெட் முன்பதிவு மையங்கள் மூலமாகவும் டிக்கெட் முன்பதிவு நடைபெற்றது. சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்கு புறப்படும் முக்கிய விரைவு ரயில்களில் சில நிமிடங்களில் டிக்கெட் முன்பதிவு முடிந்து, காத்திருப்போர் பட்டியல் காட்டியது.

சென்னையில் இருந்து மதுரை, திருநெல்வேலி, செங்கோட்டை, கன்னியாகுமரி, தூத்துக்குடி ஆகிய ஊர்களுக்குச் செல்லும் பாண்டியன், நெல்லை, பொதிகை, கே.கே. முத்துநகர் ஆகிய விரைவு ரயில்களின் இரண்டாம் வகுப்பு தூங்கும் வசதி பெட்டிகளில் 5 நிமிடங்களிலேயே டிக்கெட் முன்பதிவு முடிந்து காத்திருப்போர் பட்டியல் காட்டியது. இந்த 5 ரயில்களில் இன்று (செப்.12) காலை 10 மணி நிலவரப்படி, காத்திருப்போர் பட்டியல் பதிவும் முடிந்து, 'ரெக்ரெட்' (Regret) என்று வந்தது.

இதுபோல, சென்னையில் இருந்து தமிழகத்தின் மேற்கு மாவட்டங்களுக்கு புறப்படும் சேரன், நீலகிரி ஆகிய விரைவு ரயில்களிலும் டிக்கெட் முன்பதிவு முடிந்து, முறையே 258, 173 என்று காத்திருப்போர் எண்ணிக்கை வந்தது. முக்கிய ரயில்கள் அனைத்திலும் இரண்டாம் வகுப்பு தூங்கும் வசதி பெட்டிகள், 3 அடுக்கு ஏசி பெட்டிகளில் டிக்கெட் முன்பதிவு அடுத்தடுத்து முடிந்து காத்திருப்போர் பட்டியல் வந்தது. இதையடுத்து மற்ற வகுப்புகளில் டிக்கெட் முன்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்றது.

சென்னை எழும்பூர், சென்ட்ரல் உள்பட முக்கிய ரயில் நிலையங்களில் உள்ள முன்பதிவு மையங்களில் டிக்கெட் எடுக்க பொதுமக்கள் நீண்டநேரம் வரிசையில் காத்திருந்தனர். ஆனால், முன்பதிவு தொடங்கிய சில நிமிடங்களிலேயே முடிந்ததால், முன்பதிவு டிக்கெட் கிடைக்காமல் பெரும்பாலானவர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x