Published : 12 Sep 2024 06:53 AM
Last Updated : 12 Sep 2024 06:53 AM
சென்னை: இந்தியாவில் பல மாநிலங்களில் காசநோய் பாதிப்பு சவாலாக உள்ள நிலையில், தமிழகத்தில் காசநோய் பாதிப்பில் இருந்து 85 சதவீதத்தினர் குணமடைகின்றனர் என்று தமிழக சுகாதாரத் துறை செயலாளர் சுப்ரியா சாஹு தெரிவித்தார்.
இந்தியாவில் 2025-ம் ஆண்டுக்குள் காசநோயை முழுமையாக ஒழிக்க மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறன. தமிழகத்தில் ஆண்டுதோறும் சுமார் 1 லட்சம் பேர் காசநோயால் பாதிக்கப்படுவதாகவும், அதில் 5 ஆயிரம் பேர் வரை உயிரிழப்பதாகவும் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. காசநோயால் பாதிக்கப்படுவோரில் 49.01 சதவீதம் அரசு மருத்துவ மனைகளிலும், 49.75 சதவீதம் தனியார் மருத்துவமனைகளிலும், 1.24 சதவீதம் பேர் இந்திய முறை மருத்துவத்திலும் சிகிச்சை பெறுகின்றனர். காசநோய் பாதிப்பை கட்டுப்படுத்தவும், இறப்பை தடுக்கவும், மக்களை தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ் சர்க்கரை நோயாளிகளுக்கு காசநோய் பரிசோதனை மேற்கொள்ள தமிழக பொது சுகாதாரத் துறை திட்டமிட்டுள்ளது.
இதுதொடர்பாக தமிழக பொது சுகாதாரத் துறை இயக்குநர் செல்வவிநாயகம் கூறும்போது, “சர்க்கரை நோயாளிகளுக்கு எளிதில் காசநோய் பாதிப்பு ஏற்படும் வாய்ப்புள்ளது. அதனால், மக்களைதேடி மருத்துவம் திட்டத்தில் சிகிச்சைபெறும் 80 லட்சம் சர்க்கரை நோயாளிகளுக்கு பரிசோதனை செய்து, அறிகுறி இருந்தால் உடனடியாக சிகிச்சை அளிக்கப்படும். தொடக்க நிலையிலேயே சிகிச்சை பெற்றால், காசநோயில் இருந்து குணமடைய முடியும்” என்றார். சென்னையில் நேற்று ரீச் அமைப்பு சார்பில் நடைபெற்ற காசநோய் குறித்த பயிலரங்கில் பங்கேற்ற சுகாதாரத் துறை செயலாளர் சுப்ரியா சாஹு பேசியதாவது: இந்தியாவில் பல மாநிலங்களில் சவலாக இருக்கும் காசநோய் பாதிப்பில், தமிழகத்தில் சிகிச்சை பெற்று குணமடைவோர் 85 சதவீதமாக உள்ளது. அவற்றை 97 சதவீதமாக உயர்த்த வேண்டும்.
அதேநேரம், ஒரு லட்சம் பேரில் 124 பேர் வரை காசநோயால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். காசநோய் திட்டத்தில் சிகிச்சை, நோய் அறிதலில் அரசு கவனம் செலுத்திவருகிறது. ஆனால், சமூக ஈடுபாட்டின் மூலமாகவே காசநோயை முழுவதுமாக கட்டுப்படுத்த முடியும். காசநோய் திட்டத்தை வெற்றியடைய செய்ய அதிநவீன உட்கட்டமைப்பு, பயிற்சி பெற்ற மனிதவளம் மற்றும் சமூக ஈடுபாடு ஆகியவற்றை மேம்படுத்துவது அவசியம் ஆகும். இவ்வாறு பேசினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT