Published : 12 Sep 2024 05:40 AM
Last Updated : 12 Sep 2024 05:40 AM
சென்னை: பாமக நிறுவனர் ராமதாஸ் நேற்று வெளியிட்ட அறிக்கை: சொத்துகள் தொடர்பாக நீதிமன்றங்களில் வழக்குகள் நிலுவையில் இருந்தாலும், அந்த வழக்குகளில் நீதிமன்றங்கள் எந்த உத்தரவும் பிறப்பிக்காத நிலையில், அந்த சொத்துகளை பத்திரப்பதிவு செய்யலாம் என்று சார்பதிவாளர் அலுவலகங்களுக்கு பத்திரப் பதிவுத்துறை ஆணையிட்டிருக்கிறது. பத்திரப் பதிவுத்துறையின் இந்த நடவடிக்கை மிகவும் ஆபத்தானது.
சென்னை உட்பட தமிழகம் முழுவதும் சொத்துகளின் மதிப்பு வேகமாக உயர்ந்து வருகிறது. அதைப்போலவே பிறருடைய சொத்துகள் அபகரிக்கப்படுவதும் அதிகரிக்கிறது. இத்தகைய தருணத்தில் பத்திரப் பதிவுகள் மிகவும் கவனமாகவும், எச்சரிக்கையுடனும் செய்யப்பட வேண்டும்.
வருவாயை மட்டுமே முதன்மை நோக்கமாகக் கொண்டு பத்திரப்பதிவுத் துறை செயல்படக் கூடாது. உரிமையாளர்களுக்கு தெரியாமலேயே பல சொத்துகள் போலி ஆவணங்கள் மூலம் அபகரிக்கப்படுகின்றன. அவ்வாறு அபகரித்த சொத்துகளை ஒருவர் இன்னொருவருக்கு விற்க முயலும்போது, அதை எதிர்த்து சொத்தின் உண்மையான உரிமையாளர் வழக்கு தொடரும் நிலையில், அந்த வழக்கில் தீர்ப்பு வரும் வரை சொத்தை பதிவு செய்யாமல் இருப்பது தான் சரியான தீர்வு ஆகும்.
அந்த சொத்து தொடர்பான வழக்கில் நீதிமன்றங்கள் தீர்ப்பளிக்கவில்லை என்பதற்காக சொத்து பத்திரப்பதிவு செய்யப்பட்டால், மோசடி செய்தவர் பெரும் லாபத்துடன் தப்பி விடுவார். சொத்தின் உரிமையாளரும், அதை வாங்கியவரும், வாங்குவதற்கு கடன் கொடுத்த வங்கிகளும் தான் பாதிக்கப்படுவார்கள். இதை பத்திரப்பதிவுத்துறை உணர வேண்டும்.
வழக்குகளில் சிக்கிய வில்லங்க சொத்துகளை பதிவு செய்ய பத்திரப் பதிவுத்துறை அனுமதித்தால், அது சொத்துகளை அபகரிக்கும் செயலை ஊக்குவிப்பதாகவே அமையும். அத்தகைய அநீதிக்கு தமிழக அரசும், பத்திரப் பதிவுத்துறையும் துணைபோகக் கூடாது.
எனவே, சொத்து வழக்குகளில் நீதிமன்றங்கள் எந்த உத்தரவும் பிறப்பிக்காத நிலையில், அந்த சொத்துகளை பத்திரப் பதிவு செய்யலாம் என்ற உத்தரவை தமிழக அரசின் பத்திரப் பதிவுத்துறை திரும்பப் பெற வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT