Published : 12 Sep 2024 05:30 AM
Last Updated : 12 Sep 2024 05:30 AM

சமத்துவம், சமூக நல்லிணக்கம் மிளிர்ந்த சமூக பயணத்துக்கு இமானுவேல் சேகரனின் தொண்டு உரமாகட்டும்: முதல்வர், மத்திய இணையமைச்சர் புகழஞ்சலி

சென்னை: சுதந்திர போராட்ட தியாகி இமானுவேல் சேகரனின் நினைவு நாளையொட்டி, அவருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின், மத்திய இணையமைச்சர் எல்.முருகன், உள்ளிட்டோர் புகழஞ்சலி செலுத்தியுள்ளனர்.

இது தொடர்பாக தலைவர்கள் வெளியிட்ட அறிக்கை:

முதல்வர் மு.க.ஸ்டாலின்: தீண்டாமையை ஒழிக்கவும், சமூக விடுதலைக்காகவும் போராடியவர் தியாகி இமானுவேல் சேகரன். நாட்டுக்காகவும் ஒடுக்கப்பட்டோரின் முன்னேற்றத்துக்காகவும் உழைத்தஅவரது வாழ்வைப் போற்றுவோம்.சமத்துவமும், சமூக நல்லிணக்க மும் மிளிர்ந்த சமூகத்தை நோக்கிய நமது பயணத்துக்கு அவரது தொண்டு உரமாகட்டும்.

மத்திய இணையமைச்சர் எல்.முருகன்: ஒடுக்கப்பட்ட மக்களின்குரலாக ஒலித்தவர். சுதந்திரத்துக்காகவும், சமுதாயப் பணிகளுக்காகவும் தன்னை அர்ப்பணித்து வாழ்ந்தவர். தேசத்தின் விடுதலைக்காக வும், விளிம்புநிலை சமுதாய மக்களின் உரிமைக்காகவும் பெரிதும் பாடுபட்ட தியாகி இமானுவேல் சேகரனின் நினைவைப் போற்று வோம்.

அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி: சமூகப் பணிக்காக ராணுவப் பணியைத் துறந்து சுதந்திரப் போராட்டத்தில் கலந்துகொண்டு சிறை சென்றவரும், சாதிய தீண்டாமையை ஒழிக்க பாடுபட்டவருமான தியாகி இமானுவேல் சேகரனின் நினைவு நாளில், பட்டியலின மக்களின் முன்னேற்றத்துக்காக போராடிய அவர்தம் தியாகத்தைப் போற்றி வணங்குகிறேன்.

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை: ஒடுக்கப்பட்ட மக்கள், அரசியல் அதிகாரம் பெறவும், சமத்துவ சமூகம் உருவாகவும் போராடிய இமானுவேல் சேகரனின்நினைவைப் போற்றி வணங்குகிறோம். அனைவரும் சமம் என்ற உயரிய லட்சியத்தைக் கொண்டு, ஏற்றத் தாழ்வு இல்லாத சமூகத்தை உருவாக்குவதை, அவரது நினைவு தின உறுதிமொழியாக ஏற்றுச் செயல்படுவோம்.

பாமக நிறுவனர் ராமதாஸ்: தீண்டாமை எதிர்ப்பு என பல்வேறு சிறப்பு மிக்க இமானுவேல் சேகரனின் நினைவிடத்தை சீரமைத்து அங்கு முதன்முறையாக மரியாதை செலுத்தியது இந்த ராமதாஸ் தான். அதன் பிறகுதான் அங்கு மற்ற தலைவர்கள் அஞ்சலி செலுத்தத் தொடங்கினார்கள். அவர் கண்ட கனவுப்படியே தேவேந்திரகுல வேளாளர்களின் முழுமையான விடுதலைக்காக போராட அனைவரும் உறுதியேற்போம்.

நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்: இமானுவேல் சேகரனின் நினைவைப் போற்றும் வேளையில், சாதிய ஏற்றத்தாழ்வற்ற சமத்துவச் சமூகம் படைப்போம் என உறுதியேற்போம். இவ்வாறு அவர்கள் தெரிவித் துள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x