Published : 12 Sep 2024 06:17 AM
Last Updated : 12 Sep 2024 06:17 AM

அசோக் நகர் பள்ளி விவகாரம்: நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் மீது கடும் நடவடிக்கை எடுக்க பள்ளிக்கல்வி பாதுகாப்பு இயக்கம் வலியுறுத்தல்

சென்னை: அசோக்நகர் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் சர்ச்சைக்குரிய நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பள்ளி பாதுகாப்பு இயக்கம் வலியுறுத்தியுள்ளது.

இதுதொடர்பாக தமிழ்நாடு, புதுச்சேரி பள்ளிக்கல்வி பாதுகாப்பு யக்கத்தின் தலைவர் வே.வசந்திதேவி, செயலாளர் ஜெ.கிருஷ்ணமூர்த்தி வெளியிட்ட அறிக்கை: சென்னை அசோக்நகர் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி விவகாரத்தில் உடனடியாக நடவடிக்கை எடுத்த தமிழக அரசுக்கும், பள்ளிக்கல்வித் துறைக்கும் பாராட்டுகள். பள்ளி மாணவர்களிடம் யார், எதைப் பேசுவது என்பதை ஆய்வு செய்யாமல் பேச வைத்ததும், பேச்சாளர் அறிவியலுக்கு மாறாகப்பேசும்போது அதற்கு மற்றொரு ஆசிரியர் எதிர்ப்பு தெரிவித்தபோது அந்த பேச்சை தடுத்து நிறுத்தாமல்மீண்டும் பேச்சைத் தொடர வைத்ததும் கடும் கண்டனத்துக்குரியது.

அதேநேரத்தில் அறிவியலுக்கு மாறான பேச்சுக்கு உடனே எதிர்ப்பு தெரிவித்த ஆசிரியர் சங்கரைபாராட்டுகிறோம். அறிவியலுக்கும் இந்திய அரசியல் சட்டத்துக்கும்புறம்பாக, மாற்றுத் திறனாளிகளை யும், பெண்களையும் கொச்சைப்படுத்திப் பேசிய சர்ச்சைக்குரிய பேச்சாளருக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும். மேலும்,அந்த நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பள்ளிக்கு பேச வருவோர் அல்லது செயல்பட வருவோர், அன்பு,அறிவியல் மனப்பான்மை, சமூகநீதி, சமூக சமத்துவம், ஜனநாயகம் ஆகிய விழுமியங்களுக்கும் இந்திய அரசியல் சாசனத்துக்கும் உட்பட்டவராக இருப்பதையும் உறுதிபடுத்த வேண்டும்.

இனிவரும் காலங்களில் அதைபள்ளி மேலாண்மைக் குழுவின் முழு ஒப்புதல் பெற்று வட்டார அளவிலோ, மாவட்ட அளவிலோ உறுதிபடுத்திய பின்பே நிகழ்ச்சியை நடத்த வேண்டும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x