Published : 11 Sep 2024 09:27 PM
Last Updated : 11 Sep 2024 09:27 PM
சிவகங்கை: சிவகங்கையில் நடைபெற்ற அமைச்சர் உதயநிதி ஆய்வுக் கூட்டத்தில் தவறான பதிலளித்த திருப்பத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலரை பணியிடை நீக்கம் செய்தும், தாமதமாக பணிக்குச் சென்ற மூவரை இடமாற்றம் செய்தும் மாவட்ட ஆட்சியர் ஆஷாஅஜித் உத்தரவிட்டார்.
சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வளர்ச்சித் திட்டங்கள் குறித்து அதிகாரிகளுடன் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஆய்வுக் கூட்டம் நடத்தினார். அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன், மாவட்ட ஆட்சியர் ஆஷாஅஜித் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் மக்களுடன் முதல்வர் திட்டத்தில் பெறப்பட்ட மனுக்கள் மீது அதிகாரிகள் எடுத்த நடவடிக்கை குறித்து ஆய்வு செய்தார்.
அப்போது திருப்பத்தூர் பகுதியைச் சேர்ந்த ஒருவர் தனது வீட்டின் அருகே புதர் மண்டியிருப்பதால் பாம்பு அடைவதாகவும், அதை அகற்ற வேண்டுமெனவும் மனு கொடுத்திருந்தார்.
இதுகுறித்து திருப்பத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலர் சோமதாஸிடம் உதயநிதி கேட்டபோது, புதரை அகற்றிவிட்டதாக பதிலளித்தார். இதை உறுதி செய்வதற்காக, உதயநிதி சம்பந்தப்பட்ட மனுதாரரை செல்போனின் தொடர்பு கொண்டு கேட்டார். அப்போது அவர் புதர் அகற்றப்படவில்லை என்று கூறினார்.
இதனால் அதிர்ச்சிடைந்த அமைச்சர் வட்டார வளர்ச்சி அலுவலரை எச்சரித்தார். மேலும் புதரை உடனடியாக அகற்றவும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். இந்நிலையில் அமைச்சரின் ஆய்வு கூட்டத்தில் தவறான பதிலளித்த வட்டார வளர்ச்சி அலுவலர் சோமதாஸை பணியிடை நீக்கம் செய்து மாவ்டட ஆட்சியர் ஆஷாஅஜித் உத்தரவிட்டார். மேலும் உதயநிதியுடன் வந்திருந்த உயரதிகாரிகள் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் ஆய்வு செய்தனர்.
அப்போது கல்லல் இந்திராநகர் அங்கன்வாடி மைய பணியாளர் விஜயாள், சமையலர் மாலதி, கே.வைரவன்பட்டி மைய சமையலர் ரேணுகாதேவி ஆகியோர் தாமதமாக பணிக்கு வந்தனர்.அதிகாரிகள் பரிந்துரையின்பேரில், விஜயாள் காந்திநகர் காலனிக்கும், மாலதி ஆலங்குடிக்கும், ரேணுகாதேவி உடைநாதபுரத்துக்கும் இடமாற்றம் செய்து ஆட்சியர் உத்தரவிட்டார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT