Published : 11 Sep 2024 09:13 PM
Last Updated : 11 Sep 2024 09:13 PM
கோவை: “வெளிநாடுகளில் இந்தியா குறித்து அவதூறு பரப்பும் ராகுல் காந்தியை இந்திய மக்கள் மன்னிக்க மாட்டார்கள்,” என வானதி சீனிவாசன் கூறியுள்ளார்.
மக்கள் சேவை மையம் சார்பில், ‘விருட்சம்’ திட்டத்தின் கீழ் அரசு பள்ளிகளில் குறுங்காடுகள் வளர்க்கும் திட்டத்தை கோவை சாய்பாபா காலனியில் உள்ள மேல்நிலைப்பள்ளியில் பாஜக தேசிய மகளிர் அணி தலைவரும் கோவை தெற்கு தொகுதி எம்எல்ஏ-வுமான வானதி சீனிவாசன் இன்று (செப்.11) தொடங்கி வைத்தார். பின்னர், செய்தியாளர்களைச் சந்தித்த அவர் கூறியதாவது: “மது ஒழிப்புக்காக பாஜக பல ஆர்ப்பாட்டங்களை நடத்தியிருக்கிறது. திருமாவளவனுக்கு கூட்டணியில் என்ன பிரச்சினை என்று தெரியவில்லை. வேங்கைவயல் உள்ளிட்ட விவகாரங்களில் கூட்டணியில் இருந்தபோது வாய் திறக்காதவர் இப்போது மது ஒழிப்பு குறித்து பேசியிருக்கிறார்.
மது ஒழிப்பு மாநாட்டுக்கு அனைத்து கட்சிகளுக்கும் அழைப்பு விடுத்துள்ள திருமாவளவன், தான் ஒரு புதிய அரசியல் சக்தி என்பதை நிரூப்பிப்பதற்காக இதுபோன்ற நிகழ்ச்சியை நடத்துகிறார் என்பதாகத்தான் நாங்கள் இதைப் பார்க்கிறோம். முதல்வரின் வெளிநாட்டு பயணத்தால் தமிழகத்துக்கு நல்லது என்றால் அதை வரவேற்கத்தான் வேண்டும்.பிரதமர் மோடி, மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆகியோர் ஒட்டுமொத்த கோவையின் வளர்ச்சிக்கு உதவிகரமாக இருந்து வருகின்றனர். ஜிஎஸ்டி வரி விதிப்பில் எதை மாநில அரசு செய்கிறது, எதை மத்திய அரசு செய்கிறது என்பது தெரியாமலே சிலர் விமர்சனம் செய்கின்றனர்.
மாநில அரசு கார் பந்தயம் நடத்துவதில் தவறு இல்லை. அதுபோன்ற போட்டிகளுக்கு பெயர் பெற்ற கோவையில் நடத்தினால் நான் வரவேற்பேன். தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு சரியில்லை. அமேதியில் ராகுல் காந்தியை தோல்வியடையச் செய்தது ஆர்எஸ்எஸ் அமைப்பால் ஊக்கம் பெற்ற ஸ்மிருதி இரானி என்பதை நினைவுபடுத்த விரும்புகிறேன். வெளிநாடுகளில் இந்தியா குறித்து அவதூறு பரப்பும் ராகுல் காந்தியை இந்திய மக்கள் மன்னிக்க மாட்டார்கள், என்று அவர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Loading comments...