Published : 11 Sep 2024 06:40 PM
Last Updated : 11 Sep 2024 06:40 PM
சென்னை: பெட்ரோல், டீசலை ஜிஎஸ்டி வரி வரம்புக்குள் கொண்டு வரக் கோரி தொடரப்பட்ட வழக்கில், மத்திய அரசு பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர் சி.கனகராஜ் தாக்கல் செய்திருந்த மனுவில், 'நாட்டில் உள்ள அனைத்துப் பொருட்கள் மற்றும் அனைத்து சேவைகளையும் ஜிஎஸ்டி வரி வரம்புக்குள் கொண்டு வந்த மத்திய அரசு, பெட்ரோலிய பொருட்களை இதுவரை ஜிஎஸ்டி வரி வரம்புக்குள் கொண்டு வரவில்லை. பெட்ரோல், டீசலை ஜிஎஸ்டி வரம்புக்குள் கொண்டு வந்தால், அவற்றின் விலை கணிசமாக குறைந்து பொதுமக்கள் பயனடைவர்.
மத்திய ஜிஎஸ்டி சட்டத்தில், ஜிஎஸ்டி கவுன்சில் பரிந்துரைப்படியே பெட்ரோல், டீசலை ஜிஎஸ்டி வரம்புக்குள் கொண்டு வந்து மத்திய அரசு அறிவிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், பெட்ரோல், டீசல் விற்பனைக்கு மாநில அரசுகள் தனிப்பட்ட முறையில் வரிகள் விதி்த்து, குறிப்பிடத்தக்க வருவாயை மாநில அரசுகளும் பெறுவதால் பெட்ரோலிய பொருட்களை ஜிஎஸ்டி வரம்புக்குள் கொண்டு வருவதில் மத்திய, மாநில அரசுகளுக்கு இடையே ஒருமித்த கருத்து எட்டப்படாததால் இன்னும் ஜிஎஸ்டி வரம்புக்குள் கொண்டு வந்து மத்திய அரசு அறிவிக்கவி்ல்லை.
எனவே, பெட்ரோல், டீசலை ஜிஎஸ்டி வரம்புக்குள் கொண்டு வந்து நாடு முழுவதும் ஒரே விலைக்கு விற்க நடவடிக்கை எடுக்கக் கோரி கடந்தாண்டு மத்திய நிதியமைச்சகம், பெட்ரோலிய துறைக்கு மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே, பெட்ரோலியப் பொருட்களை ஜிஎஸ்டி வரி வரம்புக்குள் கொண்டு வந்து ஒரே விலை நிர்ணயம் செய்ய மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும்' எனக் கோரியிருந்தார்.
இந்த வழக்கு பொறுப்பு தலைமை நீதிபதி டி. கிருஷ்ணகுமார் மற்றும் நீதிபதி பி.பி. பாலாஜி ஆகியோர் அடங்கிய அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரரான வழக்கறிஞர் கனகராஜ், ''பெட்ரோலியப் பொருட்கள் பொதுமக்களின் அன்றாடத் தேவையாகி வி்ட்டது. வளைகுடா நாடுகளில் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதை நிறுத்திவிட்டு தற்போது ரஷ்யாவிடம் இருந்து குறைந்த விலைக்கு கச்சா எண்ணெய் வாங்கப்படுகிறது. அதனால் ஏற்படும் விலை குறைப்பு பலன்கள் மக்களுக்கு வழங்கப்படவில்லை.
பெட்ரோல், டீசலை ஜிஎஸ்டி வரம்புக்குள் கொண்டு வந்தால் 100 ரூபாய்க்கு விற்கப்படும் ஒரு லி்ட்டர் பெட்ரோலின் விலை ரூ.60 முதல் ரூ.70 ஆக குறையும். இதேபோல டீசல், சமையல் எரிவாயு உள்ளிட்ட அனைத்துப் பொருட்களின் விலையும் குறையும்'' என்றார்.
அதற்கு நீதிபதிகள், ''தமிழகத்தில் ரேஷன் பொருட்கள், வீட்டுமனைகள் உள்ளிட்ட அனைத்தும் மானிய விலையில் அளிக்கப்படுகிறது. ஆனால், டாஸ்மாக்கில் மட்டும் இலவசமாக எதுவும் வழங்கப்படுவதில்லை'' என நகைச்சுவையாக தெரிவி்த்தனர். மேலும், ''பெட்ரோலிய பொருட்களை ஜிஎஸ்டி வரம்புக்குள் கொண்டுவருவது என்பது அரசின் கொள்கை முடிவு என்பதால், இதுதொடர்பாக அரசுக்கு எப்படி உத்தரவு பிறப்பிக்க முடியும்?'' எனவும் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
மத்திய அரசுத் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், ''கடந்த 2020-ம் ஆண்டு இதே கோரிக்கையுடன் தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரித்த கேரளா உயர் நீதிமன்றம், அந்தக் கோரிக்கையை பரிசீலிக்க மத்திய அரசுக்கு உத்தரவிட்டுள்ளது. அந்த உத்தரவின் அடிப்படையில் மத்திய அரசு என்ன முடிவு செய்துள்ளது என்பது குறித்து விளக்கமளிக்க அவகாசம் வழங்க வேண்டும்'' என்றார். அதையேற்ற நீதிபதிகள், இது தொடர்பாக 4 வார காலத்துக்குள் பதிலளிக்க மத்திய அரசுக்கு உத்தரவிட்டு விசாரணையை தள்ளி வைத்துள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT