Last Updated : 03 Jun, 2018 09:56 AM

 

Published : 03 Jun 2018 09:56 AM
Last Updated : 03 Jun 2018 09:56 AM

நாட்டிலேயே முதல்முறையாக சென்னையில் 283 திருநங்கைகளுக்கு இலவச வீடுகள் ஒதுக்கீடு: அடுத்த மாதம் வழங்கப்படுவதாக குடிசை மாற்று வாரிய அதிகாரிகள் தகவல்

நாட்டிலேயே முதல்முறையாக சென்னையில் ஒரே நேரத்தில் 283 திருநங்கைகளுக்கு இலவசமாக குடிசை மாற்று வாரிய வீடுகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இவை அடுத்த மாதம் வழங்கப்படும் என்று குடிசை மாற்று வாரிய அதிகாரிகள் கூறினர்.

தமிழகத்தில் சுமார் 35 ஆயிரம் திருநங்கைகள் உள்ளனர். சென்னையில் மட்டும் 3,500 பேர் உள்ளனர். ஒருகாலத்தில் பெற்றோராலும் புறக்கணிக்கப்பட்டு, சமூகத்தில் இருந்து ஒதுக்கப்பட்ட நிலையில் இருந்தனர். அதிகரித்துவரும் விழிப்புணர்வு காரணமாக, தற்போது அந்த நிலை மெல்ல மாறிவருகிறது. இருப்பினும், ஏழ்மை நிலையில் இருக்கும் திருநங்கைகள், ஏழை, எளிய மக்களுக்கு வழங்குவதுபோல தங்களுக்கும் இலவச வீடு வழங்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு விண்ணப்பம் கொடுத்தனர். தகவல்களை சரிபார்த்து தமிழக அரசு அவர்களுக்கு இலவச வீடுகளை வழங்கி வருகிறது.

இந்நிலையில், நாட்டிலேயே முதல்முறையாக சென்னையில் ஒரே நேரத்தில் 283 திருநங்கைகளுக்கு இலவசமாக குடிசை மாற்று வாரிய வீடுகள் ஒதுக்கப்பட்டுள்ளன. அதற்கான தகவல்கள் சரிபார்க்கும் பணி சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கடந்த 3 நாட்களாக நடந்தது.

குடிசை மாற்று வாரிய அதிகாரிகள் 2 பேர், மாவட்ட சமூகநல அலுவலர், திருநங்கைகள் நல வாரியத்தைச் சேர்ந்த 2 பேர், ‘சகோதரன்’ அமைப்பு உள்ளிட்ட தன்னார்வ தொண்டு நிறுவனங்களைச் சேர்ந்த 5 பேர் என 10 பேர் கொண்ட குழுவினர் தகவல்களை சரிபார்த்தனர். இந்த ஆய்வின்போது, வீட்டுக்காக விண்ணப்பித்த திருநங்கைகள் நேரில் வரவழைக்கப்பட்டனர். அவர்களது திருநங்கைகள் நல வாரிய உறுப்பினர் அட்டை, குடும்ப அட்டை, ஆதார் அட்டை ஆகியவை சரிபார்க்கப்பட்டன. ஆதார் அட்டை இல்லாதவர்கள் உடனடியாக விண்ணப்பித்து பெற வேண்டும். வீடு ஒதுக்கீட்டு ஆணை வழங்கும்போது கண்டிப்பாக ஆதார் அட்டை இருக்க வேண்டும் என்று அவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

திருநங்கைகளுக்கு குடும்ப அட்டை, நல வாரியத்தில் அடிப்படை உறுப்பினர் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, ஓட்டுநர் உரிமம், ஆதார் அட்டை வழங்கப்படுகின்றன. ‘கெஜட்டட்’ அலுவலகத்தில் பெயர் மாற்றம் இலவசமாக செய்து தரப்படுகிறது.

அரசு ஊழியர்கள் இறந்துவிட்டால், அவர்களது வாரிசுகள் திருநங்கையாக இருக்கும் பட்சத்தில் அவர்களிடமே ஓய்வூதியத்தை வழங்க வேண்டும் என அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. மகளிருக்கான இருசக்கர வாகனம் வழங்கும் திட்டத்தில் 10 திருநங்கைகள் ஸ்கூட்டர் பெற்றுள்ளனர்.

சென்னை, திருவண்ணாமலை அரசு மருத்துவமனைகளில் 2 திருநங்கைகள் நிரந்தரப் பணியாளர்களாக ஆக்கப்பட்டுள்ளனர். ஒருவர் உதவி ஆய்வாளராகவும், 2 பேர் போலீஸாகவும் நியமனம் பெற்றுள்ளனர். 40 வயதான திருநங்கைகளுக்கு மாதம் ரூ.1,000 ஓய்வூதியம். 100 யூனிட் வரை இலவச மின்சாரம், சுயதொழில் தொடங்க மானியத்துடன் கடன் என ஏராளமான சலுகைகள் வழங்கப்பட்டுள்ளன. இருப்பினும், இலவச வீடுகள் பெறுவதில் சிரமம் இருப்பதாகக் கூறுகின்றனர்.

இதுகுறித்து திருநங்கைகள் நல வாரிய அரசு சாரா உறுப்பினர்கள் பி.சுதா, என்.ஜெயதேவி ஆகியோர் கூறும்போது, “திருநங்கைகள் நல வாரியம் கடந்த 2009-ல் அமைக்கப்பட்டது. இதில் சுமார் 6,000 பேர் அடிப்படை உறுப்பினர்களாக உள்ளனர். அங்கொன்றும் இங்கொன்றுமாக திருநங்கைகளுக்கு வீடு வழங்கிவரும் நிலையில், நாட்டிலேயே முதல்முறையாக சென்னை பெரும்பாக்கத்தில் ஒரே நேரத்தில் 283 பேருக்கு இலவசமாக குடிசை மாற்று வாரிய வீடுகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இன்னும் 12 மாவட்டங்களில் திருநங்கைகளுக்கு வீடுகள் வழங்கப்படவில்லை” என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x