Last Updated : 11 Sep, 2024 01:37 PM

 

Published : 11 Sep 2024 01:37 PM
Last Updated : 11 Sep 2024 01:37 PM

கிருஷ்ணகிரி | புதிய திட்டப் பணிகளை கே.பி.முனுசாமி தொடங்கி வைக்க திமுகவினர் எதிர்ப்பு: அதிமுகவினர் சாலை மறியல்

கிருஷ்ணகிரி: சூளகிரி அருகே ராமன்தொட்டி பகுதியில் புதிய திட்டப் பணிகளை தொடங்கி வைக்கச் சென்ற அதிமுக துணை பொதுச் செயலாளரும், வேப்பனப்பள்ளி எம்எல்ஏ-வுமான கே.பி.முனுசாமிக்கு, திமுகவினர் எதிர்ப்பு தெரிவித்ததால், அதிமுக எம்எல்ஏ-க்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி சட்டமன்ற தொகுதி சூளகிரி வட்டம் கும்பளம் ஊராட்சிக்கு உட்பட்ட ராமன்தொட்டி கேட் முதல் தொட்டோகவுனப்பள்ளி, சிகரலப்பள்ளி வழியாக சின்னார்தொட்டி கிராமத்தில் மாநில எல்லை வரை சுமார் 6.630 கி.மீ தூரத்திற்கு ரூ.5 கோடியே 36 லட்சத்து 55 ஆயிரம் மதிப்பில் புதிய சாலை அமைக்கப்படுகிறது. இதேபோல், சின்னார்தொட்டி ஊராட்சி கிராமங்களின் இடையில் குப்பம் ஏரி கால்வாய்க்கு ரூ.2 கோடியே 29 லட்சத்து 26 ஆயிரம் மதிப்பில் சிறு பாலம் அமைக்கப்படுகிறது.

இந்த 2 பணிகளுக்கான பூமி பூஜை இன்று காலை ராமன்தொட்டி கிராமத்தில் நடைபெற இருந்தது. இதற்காக அதிமுக துணைப் பொதுச் செயலாளரும் முன்னாள் அமைச்சரும் வேப்பனப்பள்ளி எம்எல்ஏவுமான கே.பி.முனுசாமி உள்ளிட்ட அதிமுகவினர் அங்கு சென்றனர். ஆனால், இந்த திட்டப் பணிகளை அதிமுக எம்எல்ஏ தொடங்குவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, சூளகிரி வடக்கு ஒன்றியச் செயலாளர் நாகேஷ் தலைமையில் திமுகவினர் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

தொடர்ந்து அதிமுக - திமுகவினர் இடையே தள்ளு முள்ளு ஏற்பட்டு பதற்றமான சூழல் உருவானது. இதனைத்தொடர்ந்து திமுகவினரின் செயலைக் கண்டித்து கே.பி.முனுசாமி தலைமையில் அதிமுகவினர், வேப்பனப்பள்ளி - பேரிகை சாலையில் ராமன்தொட்டி கேட் என்னுமிடத்தில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இது குறித்து கே.பி.முனுசாமி கூறும்போது, “ஒரு சட்டமன்ற தொகுதியில் மக்கள் பிரதிநிதியாக இருக்கக் கூடிய சட்டமன்ற உறுப்பினர், ஒரு திட்டத்தை தொடங்கி வைக்க எதிர்ப்பு தெரிவித்து, திமுக ஒன்றியச் செயலாளர் மூலம் அந்த திட்டத்தை தொடங்கி வைக்க போலீஸார் அனுமதியளிக்கின்றனர். மக்கள் பிரதிநிதிக்கு அனுமதி மறுக்கப்பட்டு, கட்சி பொறுப்பாளர்களுக்கு எப்படி அனுமதியளிக்கப்படுகிறது? இந்த திட்டத்தை நான் தொடங்கி வைக்க அனுமதியளிக்கும் வரை போராட்டம் தொடரும்.” என்று கே.பி.முனுசாமி கூறினார்.

இது குறித்து திமுகவினர் கூறும்போது, “ஊராட்சி மூலம் கோரிக்கை வைக்கப்பட்டு, மத்திய அரசின் நிதியில் அமைக்கப்படும் சாலைப் பணிக்கான பூமி பூஜைக்கு ஊராட்சி தலைவருக்கு கூட தகவல் அளிக்கவில்லை. மாறாக அதிமுகவினர் கொண்டு வந்த திட்டம் போல், மக்களிடையே பொய் பிரச்சாரம் மேற்கொள்ளவே பணிகளை தொடங்க வந்துள்ளனர்.” என்று திமுகவினர் கூறினர்.

மறியல் குறித்து தகவலறிந்து, கிருஷ்ணகிரி ஏடிஎஸ்பி சங்கர் தலைமையிலான 60-க்கும் மேற்பட்ட போலீஸார், போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர். இருப்பினும், அதிமுக எம்எல்ஏ-க்கள் கே.பி.முனுசாமி, அசோக்குமார், தமிழ்செல்வம் ஆகியோர் தலைமையில் சாலை மறியல் போராட்டம் தொடர்ந்து நடைபெற்றது. இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது. 4 மணி நேர போராடத்துக்குப் பின்னர் கேபி முனுசாமி அந்தத் திட்டப்பணியை தொடங்கிவைத்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x