Last Updated : 11 Sep, 2024 10:51 AM

 

Published : 11 Sep 2024 10:51 AM
Last Updated : 11 Sep 2024 10:51 AM

உயர் அதிகாரிகள் வாடகை கார் சர்ச்சை: ஆளுநர் தலையிட புதுச்சேரி பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் கோரிக்கை

பாஜக முன்னாள் மாநில தலைவர் சாமிநாதன்

புதுச்சேரி: உயர் அதிகாரிகள் வாடகை கார்களை பயன்படுத்தி ஆண்டுக்கு பல கோடி ரூபாய் மக்கள் வரிப்பணத்தை விரயம் செய்து வரும் விவகாரத்தில் துணைநிலை ஆளுநர் தலையிட்டு தடுக்க வேண்டும் என்று பாஜக முன்னாள் மாநில தலைவர் சாமிநாதன் வலியுறுத்தியுள்ளார்.

புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ் - பாஜக கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது. இந்நிலையில் புதுச்சேரி அரசு செயல்பாடுகளை விமர்சித்து ஆளுநர் நடவடிக்கை எடுக்கக்கோரி பாஜக முன்னாள் மாநிலத்தலைவர் சாமிநாதன் இன்று (புதன்கிழமை) விடுத்துள்ள அறிக்கை:

புதுச்சேரி மாநிலத்தில் உள்ள பலவேறு அரசு அலுவலகங்களில் உயர் அதிகாரிகள் வாடகை கார்களை பயன்படுத்தி ஆண்டுக்கு பல கோடி ரூபாய் மக்கள் வரிப்பணத்தை விரயம் செய்து வருகிறார்கள். புதுச்சேரி ஆளுநர் இந்த விஷயத்தில் உடனடியாக தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும், அரசு அலுவலகங்களில் பழைய கார்களை சரி செய்யாமல், ஓட்டுநர் இல்லை என்று காரணம் கூறி, ஐந்து கிலோமீட்டர் சுற்றளவு உள்ள புதுச்சேரியில் வாடகை கார்களை, தங்களது சொந்த வேலைகளுக்காக பயன்படுத்தி மக்கள் வரிப்பணத்தை தொடர்ந்து விரயம் செய்து கொண்டிருக்கிறார்கள். பல சட்டமன்ற உறுப்பினர்கள் இரண்டுக்கும் மேற்பட்ட அரசு கார்களை பயன்படுத்துவதை ஆளுநர் தடை செய்ய வேண்டும். மத்திய தணிக்கை குழு பல ஆண்டுகளாக தொடர்ந்து புதுச்சேரியில் அரசு நிதி நிலையில் பல்வேறு முறைகேடுகளை சுட்டிக் காட்டி உள்ளது. அதை ஆட்சியாளர்களும், அதிகாரிகளும் சரி செய்யவில்லை.

கடந்த காங்கிரஸ் ஆட்சியில் நடந்த பல்வேறு முறைகேடுகள் ஊழல்களை ஆளுநர் விசாரிக்க வேண்டும். குஜராத் வளர்ச்சியில் மிகுந்த பங்கு கொண்ட நேர்மையான அதிகாரியாக இருந்தவர், தற்போது புதுச்சேரி ஆளுநர், புதுச்சேரியை முன்மாதிரி மாநிலமாக மாற்ற அனைத்து நடவடிக்கையும் எடுக்க வேண்டும்.

துறைவாரியாக அரசு அலுவலகங்களில் பல ஆண்டுகளாக இயக்கப்படாமல் உள்ள அரசு வாகனங்களை ஆய்வு செய்ய வேண்டும். 20 ஆண்டுகளுக்கு மேல் பல துறைகளில் ஏலம் விடாமல் அரசு வாகனங்களை மாற்றும் நிலையில் உள்ளது.

உடனடியாக அதை ஏலம் விட நடவடிக்கை எடுக்க வேண்டும். நிதி இல்லை என்று காரணம் காட்டும் அரசு நிதி சிக்கனத்தை கையாள தவறிவிட்டது. ஒரு புறம் சம்பளம் போடாமல் உள்ள சூழலில் வாடகைக்கு என பல கோடி ரூபாய் அரசு தேவையற்ற வழி செலவு செய்து வருகின்றது.

கடந்த காங்கிரஸ் ஆட்சியில் பல்வேறு முறைகேடுகள் பல்வேறு துறையில் நடந்து, அவை தற்போது விசாரணையில் உள்ளது. அதை துரிதப்படுத்தி சம்பந்தப்பட்ட ஊழல்வாதிகளை மக்கள் முன் அடையாளம் காட்ட வேண்டும். ஒருவர் மட்டுமே செல்லக்கூடிய அதிகாரிகள் பெரிய சொகுசு கார்களை பயன்படுத்தி மாதம் 40 முதல் 50 ஆயிரம் வரை வாடகை செலுத்தி வருகிறார்கள். மத்தியில் பல அமைச்சர்கள் சிக்கன நடவடிக்கையாக இன்னும் சிறிய வாகனங்களை பயன்படுத்தி வருகிறார்கள்.

ஆனால், புதுச்சேரியில் அனைத்து அலுவலகங்களிலும் ஏழு பேர் செல்லக்கூடிய சொகுசு கார்களை பயன்படுத்தி மக்கள் வரிப்பணத்தை விரயம் செய்துவருவதை ஆளுநர் தடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x