Published : 11 Sep 2024 04:19 AM
Last Updated : 11 Sep 2024 04:19 AM

பழைய ஓய்வூதியம் உள்ளிட்ட 31 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் ஆசிரியர்கள் வேலைநிறுத்தம்

போராட்டத்தில் ஆசிரியர்கள்

சென்னை: ஊதிய முரண்பாடுகளை சரிசெய்வது உட்பட 31 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் இடைநிலை ஆசிரியர்கள் அடையாள வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துதல், ஊதிய முரண்பாடுகளை சரிசெய்தல் உட்பட 31 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு தொடக்க கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு (டிட்டோஜாக்) சார்பில் தொடர் போராட்டங்கள் அறிவிக்கப்பட்டன.

இதைத் தொடர்ந்து, டிட்டோஜாக் நிர்வாகிகளுடன், தமிழக அரசு கடந்த 6-ம் தேதி பேச்சுவார்த்தை நடத்தியது. அதில் சில கோரிக்கைகளை நிறைவேற்றுவது தொடர்பாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஆனால், அரசாணை 243-ஐ ரத்து செய்தல் போன்ற எதிர்பார்த்த கோரிக்கைகள் ஏற்கப்படாததால் திட்டமிட்டபடி போராட்டம் நடைபெறும் என்று டிட்டோஜாக் அறிவித்தது.

இதையடுத்து, இந்த கூட்டமைப்பில் இணைந்துள்ள 12 சங்கங்களை சேர்ந்த ஆசிரியர்கள் தமிழகம் முழுவதும் நேற்று ஒருநாள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர். அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலகங்கள் முன்பு ஆர்ப்பாட்டமும் நடத்தினர்.

சென்னை எழும்பூரில் உள்ள முதன்மை கல்வி அலுவலகம் முன்பு நடைபெற்ற போராட்டத்தில் தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணியின் துணை பொதுச் செயலாளர் சாந்தகுமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டு கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.

புதுக்கோட்டை, திருவாரூர், தஞ்சாவூர், கிருஷ்ணகிரி உள்ளிட்டமாவட்டங்களில் ஆசிரியர்களின் போராட்டத்தால் கற்றல், கற்பித்தல் பணிகள் பாதிக்கப்பட்டதாக தெரிகிறது. ஆசிரியர்கள் பணிக்கு வராததால் சில பள்ளிகள் மூடப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

இதுகுறித்து டிட்டோஜாக் நிர்வாகிகள் கூறும்போது, ‘‘தமிழகம்முழுவதும் 70 சதவீத ஆசிரியர்கள் வேலையை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பள்ளிகளில் இயல்புநிலை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. தமிழக அரசு எங்கள்கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் அடுத்தகட்ட போராட்டத்தை முன்னெடுப்போம்’’ என்றனர்.

இதற்கிடையே, ஆசிரியர்கள் போராட்டம் காரணமாக தொடக்க கல்வித் துறை சார்பில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன. ஆசிரியர்கள் வராத பள்ளிகளுக்கு அருகே உள்ள பள்ளிகளில் இருந்துஆசிரியர்கள் வரவழைக்கப்பட்டு கற்பித்தல் பணிகள் தொடரப்பட்டன. சில பள்ளிகளில் ‘இல்லம் தேடி கல்வி’ இயக்கத்தின் தன்னார்வலர்களை பயன்படுத்தியும் சிக்கல்கள் வராதபடி அதிகாரிகள் பார்த்துக்கொண்டனர்.

இதுபற்றி தொடக்க கல்வித் துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘‘தமிழகத்தில் மொத்தம் ஒரு லட்சத்து 22,343 இடைநிலை ஆசிரியர்கள் உள்ளனர். அவர்களில் 84,864 (69.4%) ஆசிரியர்கள் நேற்று பணிக்கு வந்தனர். 37,479 பேர் (30.6%) மட்டுமே வேலைக்கு வரவில்லை. எனினும், மாற்று ஏற்பாடுகள் மூலம் கற்றல்-கற்பித்தல்பணிகளில் பாதிப்பு ஏற்படவில்லை. அதேபோல, வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்கள் மீது ஊதிய பிடித்தம் உட்பட துறைரீதியாக நடவடிக்கைகள் எடுக்கப்பட உள்ளன’’ என்றனர்.

காலாண்டு தேர்வு விடுமுறையான செப்டம்பர் 29, 30, அக்டோபர் 1-ம் தேதிகளில் சென்னை தலைமைச் செயலகத்தை முற்றுகையிடும் போராட்டத்தை டிட்டோஜாக்நடத்த உள்ளது. அதற்கு முன்னதாக டிட்டோஜாக் நிர்வாகிகளுடன் பள்ளிக்கல்வித் துறை சார்பில் பேச்சுவார்த்தை நடத்தப்பட உள்ளது. அதில் உடன்பாடு ஏற்படாவிட்டால், திட்டமிட்டபடி போராட்டம் நடைபெறும் எனவும் டிட்டோஜாக் தெரிவித்துள்ளது.

பள்ளிக்கூடத்துக்கு பூட்டு: வராண்டாவில் மாணவர்கள் - தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு அடுத்த பூவத்தூரில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி உள்ளது. வழக்கம்போல நேற்று பள்ளிக்கு வந்த மாணவ, மாணவிகள், வகுப்பறையில் அமர்ந்திருந்தனர். 2 தற்காலிக ஆசிரியர்களும் வந்திருந்தனர். வேலைநிறுத்த போராட்டம் நடந்த நிலையில், தலைமை ஆசிரியர் உள்ளிட்ட 4 நிரந்தர ஆசிரியர்களும் பள்ளிக்கு வரவில்லை.

சிறிது நேரத்தில், அங்கு வந்த தூய்மை பணியாளர், தலைமை ஆசிரியர் கூறியதாக சொல்லி, அனைத்து மாணவர்களையும் வகுப்பறையில் இருந்து வெளியேற்றிவிட்டு, பள்ளியை பூட்டிவிட்டு சென்றார். இதனால், 2 மணி நேரத்துக்கும் மேலாக பள்ளி வராண்டாவிலேயே மாணவர்கள் உட்கார்ந்திருந்தனர்.

தகவல் அறிந்து வந்த பெற்றோர் ஆசிரியர் கழகத்தினர், இதுகுறித்து கல்வித் துறை அதிகாரிகளிடம் தெரிவித்தனர். கல்வித் துறையினர் வந்து, பள்ளியை திறக்கச் செய்தனர்.

இதுபற்றி தலைமை ஆசிரியர் கண்ணகியிடம் கேட்டபோது, ‘‘உடல்நிலை சரியில்லாததால் மருத்துவ விடுப்பில் உள்ளேன். வகுப்பறையை பூட்டுமாறு நான் கூறவில்லை. பள்ளியில் நடந்த சம்பவம் குறித்து எனக்கு எதுவும் தெரியாது’’ என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x