Published : 21 Jun 2018 04:24 PM
Last Updated : 21 Jun 2018 04:24 PM
சென்னையில் திருடுபோன ஐபோன் பற்றிய புகாரின் மீது போலீஸார் வழக்கமான மெத்தன நடைமுறையில் ஈடுட்டதால், வேறு வழியின்றி தானே துப்பறிந்து குற்றவாளியைப் பிடித்து செல்போனை மீட்டு போலீஸிலும் குற்றவாளியை ஒப்படைத்துள்ளார் இளைஞர் ஒருவர்.
சென்னையில் பொதுமக்களை அன்றாடம் பாதிக்கும் விஷயம் வழிப்பறி. முன்பெல்லாம் நகை பறித்துச்சென்றவர்கள் பின்னர் எளிதாக காசு பார்ப்பதற்காக செல்போனைப் பறிக்கத் தொடங்கினர். நாளடைவில் சென்னையில் செல்போன் பறிப்பு மிகச் சாதாரண நிகழ்வாக மாறிப்போனது.
செல்போன் பறிப்பு, செல்போன் திருட்டு இரண்டையுமே போலீஸார் கணக்கில் வைத்துக்கொள்வதில்லை, காரணம் வாங்கியவர்கள் அதை 15 ஆயிரம் 20 ஆயிரம் ரூபாய் கொடுத்து வாங்கியிருந்தாலும் அதன் மதிப்பு சில ஆயிரம் மட்டுமே என்று நினைக்கின்றனர். ஆயிரம் புகாருக்கு மத்தியில் இது ஒரு புகாரா? என்ற எண்ணம் போலீஸார் மத்தியில் உள்ளது.
இரும்புத்திரை படக்கதை நிஜமானது
அப்படி ஒரு எண்ணத்தில் போலீஸார் அணுகிய ஒரு வழக்கில் பாதிக்கப்பட்ட இளைஞரே தானாக துப்பறிந்து தனது செல்போனை கண்டுபிடித்த சம்பவம் பரபரப்பாக பேசப்படுகிறது. இரும்புத்திரை படத்தில் கதாநாயகன் விஷால் தனது சேமிப்பான ரூ.10 லட்சத்தை அநியாயமாகப் பறிகொடுத்து விடுவார்.
அவரது வங்கிக் கணக்கிலிருந்து கையாடப்பட்ட பணத்தை போலீஸிடமும் சொல்ல முடியாமல் தானே துப்பறிந்து கண்டுபிடிப்பார். இதே போன்றதொரு சம்பவம் போலீஸ் புகாரில் அலட்சியம் காட்டியபோதும் தனது சேமிப்பில் வாங்கிய செல்போனைத் தானே தேடி துப்பறிந்து கண்டுபிடித்துள்ளார் இளைஞர் ஒருவர்.
விருப்பப்பட்டு வாங்கிய ஐபோன்
சென்னை பெரம்பூர் பகுதியைச் சேர்ந்தவர் சிமியோன் (23). மருந்து விற்பனை பிரதிநிதியாகப் பணியாற்றி வருகிறார். சிமியோன் தனது சேமிப்பின் மூலம் தனக்கு விருப்பமான ஐபோனை வாங்கியுள்ளார். விலை உயர்ந்த செல்போன் அவரது வருமானத்துக்கு அதிகமான ஒன்று என்றாலும் ஆசைப்பட்டதால் வாங்கி உபயோகித்து வந்தார்.
திருடுபோன செல்போன்
கடந்த 13-ம் தேதி தனது சிம் கார்டு சம்பந்தமாக சென்னை புரசைவாக்கத்திலுள்ள சிம் கார்டு ஷோரூமுக்குச் சென்றுள்ளார். அப்போது டேபிள் மீது வைத்திருந்த அவரது ஐபோன் திருடு போனது. தனது விருப்பமான செல்போன் திருடு போனதால் பதற்றமடைந்த அவர் சிம்கார்டு விற்பனை செய்யும் ஷோரூம் மேலாளரிடம் கேட்டபோது, 'அவர் தினமும் நூற்றுக்கணக்கானவர்கள் வருகின்றனர், நான் என்ன செய்வது?' என்று தெரிவித்தார்.
இதையடுத்து தனது செல்போன் காணாமல் போனது குறித்து கீழ்ப்பாக்கம் காவல் நிலையத்தில் தனது நண்பர் ஜாஃபருடன் சென்று புகார் அளித்தார் சிமியோன். ஆனால் போலீஸார் புகாரை வாங்கவில்லை. மூன்று நாள் போராட்டத்திற்குப் பின் ஆய்வாளர் வெறும் சிஎஸ்ஆர் மட்டும் கொடுத்துவிட்டு அனுப்பி விட்டார்.
தனது விலை உயர்ந்த செல்போன் காணாமல் போனதும், போலீஸில் புகார் அளித்தும் அவர்கள் ஒரு சிஎஸ்ஆர் மட்டும் கொடுத்து அனுப்பி விட்டதையும் கண்டு சிமியோனால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. தானே செல்போனைத் தேடி கண்டுபிடிக்கலாம் என்று முடிவெடுத்துள்ளார். எப்படி தேடுவது எங்கு ஆரம்பிப்பது என்று தெரியவில்லை.
தானே களத்தில் இறங்குவதுதான் சரியாக இருக்கும் என்று நினைத்து தனது நண்பரான பொறியாளர் ஜாஃபருடன் களம் இறங்கியுள்ளார் சிமியோன். முதலில் சிம் கார்டு நிறுவன மேலாளரை சந்தித்து தான் சிம் கார்டு வாங்க வந்த தேதி, நேரத்தைச் சொல்லி அந்த நேரத்தில் பதிவான சிசிடிவி பதிவுகளைக் காட்டும்படி கேட்டுள்ளார்.
மேலாளர், 'இதெல்லாம் போலீஸ் செய்கிற வேலை நீங்கள் என்ன செய்ய போகிறீர்கள்?' என்று சலித்துக்கொண்டே கேட்க, ’சார் 30 ஆயிரம் ரூபாய் போன். வலி எனக்குத்தான் தெரியும்’ என்று கெஞ்சி சிசிடிவி பதிவுகளை வாங்கிப் பார்த்துள்ளார். அப்போது தன்னருகில் இரண்டு வட மாநில இளைஞர்கள் நிற்பதும், அவர்கள் வெளியே செல்லும்போது பதற்றத்துடன் தன்னை திரும்பிப் பார்த்துச் செல்வதும் தெரியவந்தது.
அந்தக் காட்சிகளைப் பெற்றுக்கொண்ட சிமியோன், அவர்கள் எதற்காக வந்தனர் என்று கேட்டபோது வேறு நிறுவனத்திலிருந்து சிம்கார்டை மாற்றியது தெரிய வந்தது. அவர்களது சிம் கார்டு நம்பரை வாங்கிக்கொண்ட சிமியோன் இரண்டையும் போலீஸாரிடம் கொண்டு வந்து கொடுத்து இவர்தான் தனது செல்போனை எடுத்துச்சென்றவர் என்று கூறி அவரது செல்போன் நம்பரை போலீஸாரிடம் கொடுத்துள்ளார்.
பின்னர் தானே களம் இறங்கித் தேடுவது என்று முடிவு செய்து நண்பருடன் சேர்ந்து தேடத் தொடங்கி உள்ளார். இது குறித்து சிமியோனிடம் பேசியபோது அவர் கூறியதாவது:
போலீஸில் புகார் அளித்த பின்னர் நீங்கள் ஏன் தேட முயன்றீர்கள்?
போலீஸ் முறைப்படி புகாரைப் பெற்றார்கள். ஆனால் போலீஸுக்கு வழக்கமான நடைமுறை காரணமாக லேட்டாகும் என்பதால் நானே தேடலாம் என்று முடிவு செய்தேன். அதுவுமில்லாமல் அந்த செல்போனை நான் தவணை முறையில் வாங்கினேன், இன்னும் மூன்று தவணை பாக்கி உள்ளது. அதனால் நாமே முயன்று கண்டுபிடிக்கலாம் என்று முடிவு செய்தேன்.
எப்படி அந்த நபரைக் கண்டுபிடித்தீர்கள்?
முதலில் என் செல்போனை திருடிய நபர் அணைத்து வைத்திருந்ததால் எதுவும் செய்ய முடியவில்லை. பின்னர் அந்த நபர் வாங்கிய சிம் கார்டுக்கு போன் செய்தாலும் அதுவும் ஸ்விட்ச் ஆஃப் செய்யப்பட்டு இருந்தது.
இதனால் எதுவும் செய்ய முடியாமல் இருந்தோம். அந்த நம்பரை வைத்து ஃபேஸ்புக், வாட்ஸ் அப் எதிலாவது இருக்கிறாரா? என்று சோதித்தபோது ஃபேஸ்புக்கில் இருப்பது தெரியவந்தது. அதில் அவர் பெயர் பங்கஜ்குமார் பிஹார் என்று பதிவு செய்யப்பட்டிருந்தது. ஆனால் அதில் அவர் அதிகம் செயல்படுவதாகத் தெரியவில்லை. அவருக்கு யாராவது நண்பர்கள் கமெண்ட் செய்துள்ளார்களா என்று அவர்கள் லிஸ்ட்டை எடுத்தோம்.
பின்னர் எப்படி நெருங்கினீர்கள்?
அந்த நண்பர்கள் எண்ணை எடுத்து அவர்களுக்கு போன் செய்து பங்கஜ் குமார் பற்றி மேலுக்கு விசாரித்தோம். அவர் வேலை கேட்டிருந்ததாகக் கூறி அவரை தற்போது எப்படி தொடர்புகொள்வது என்று கேட்டபோது ஒரு போன் நம்பரைக் கொடுத்தனர்.
பங்கஜ் குமாருக்குப் போன் செய்து வேலை வாய்ப்பு நிறுவனத்தில் இருந்து பேசுவது போல் பேசி எங்கு வேலை செய்கிறாய் என்று கேட்டோம். ஆனால் மாதவரம், பர்னிச்சர் கடை என்று சொன்ன பங்கஜ்குமார் திடீரென உஷாராகி செல்போனை சுவிட்ச் ஆஃப் செய்துவிட்டார்.
இது பற்றி போலீஸில் கூறினீர்களா?
போலீஸில் அனைத்து விவரங்களையும் அளித்து, சிசிடிவி பதிவுகளையும் அளித்து விபரமாகச் சொன்னேன். ஆனால் எனக்கு என் செல்போன் உடனே கிடைக்க வேண்டும், போலீஸாரின் நடைமுறை எப்படி எனக்கு தெரியாது, ஆகவே கையில் கிடைத்த துப்புகளை வைத்து அந்த நபரைப் பிடித்துவிட வேண்டும் தப்ப விட்டுவிடக்கூடாது என்ற வேகத்தில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன் நண்பருடன் நள்ளிரவில் நானே கிளம்பி விட்டேன்.
செல்போன் திருடிய நபர் சிக்கினாரா?
இரவு முழுதும் மாதாவரம் பகுதியில் சுற்றினோம், அப்போது பர்னிச்சர் கடையில் வட மாநில இளைஞர்கள் அதிகம் வேலை செய்யும் கடை பற்றிய தகவல் கிடைத்தது. நள்ளிரவு ஆனதால் அதிகாலையில் அங்கு சென்றோம். ஏராளமான வட மாநில இளைஞர்கள் அங்கு இருந்தனர். அனைத்து முகங்களும் ஒரே மாதிரியாகத் தெரிந்தன.
ஆனாலும் சிசிடிவி பதிவில் இருந்த பங்கஜ் குமார் முகம் எனக்கு நன்றாக நினைவிருந்தது. சரியாக 6.30 மணிக்கு வேறொரு நபருடன் போயஸ் கார்டனில் வேலைக்குச் செல்ல வாகனத்தில் ஏற வந்த பங்கஜ் குமாரைப் பார்த்தவுடன் பிடித்துவிட்டேன்.
பங்கஜ் குமார் ஒப்புக்கொண்டாரா?
முதலில் ஒப்புக்கொள்ளவில்லை. பின்னர் நான் சிஎஸ்ஆர் காப்பியைக் காட்டினேன், அவரது முதலாளி அதைப்பார்த்து மிரட்டி கேட்டவுடன் ஒப்புக்கொண்டார். போனையும் கொண்டு வந்து கொடுத்தார். உடனடியாக காவல் நிலையத்தில் புகார் அளித்ததன் பேரில் போலீஸார் திருட்டு குற்றத்தில் பங்கஜ் குமாரை கைது செய்தனர்.
உங்கள் அறிவு சாதூர்யம் வியக்க வைக்கிறது, ஆனால் அந்த நபர் கொடூரக் குற்றவாளியாக இருந்திருந்தால் உங்கள் நிலை என்னவாகியிருக்கும்?
இதைத்தான் அனைவரும் சொன்னார்கள், ஆனாலும் எனக்கு என் செல்போன் வேண்டும், கடன் தவணை கூட முடியாத நிலையில் காணாமல் போனது என்னால் தாங்க முடியவில்லை. அது ஒருவகை குருட்டு தைரியம் தான், ஆனால் இதன் மூலம் சாதித்துவிட்ட திருப்தி இருக்கிறது. என்று ஆர்வத்துடன் சிமியோன் தெரிவித்தார்.
போலீஸாரின் வழக்கமான நடைமுறை தாமதத்தால் திருட்டு கொடுத்த செல்போனை சாமர்த்தியமாக துப்பறிவாளர் மன நிலையில் தேடி சாதூர்யமாக பேசிக் கண்டுபிடித்த இளைஞரை பாராட்டினோம்.
இந்த சம்பவம் மூலம் போலீஸாருக்கு ஒரு சவால் மறைமுகமாக விடுக்கப்பட்டுள்ளது. சாதாரண குடிமகனால் தனது காணாமல் போன செல்போனை ஒரு வாரத்தில் நெருங்க முடிகிறது. மிகப்பெரும் தகவல் தொழில் நுட்பம் ஆள்படை உள்ள போலீஸார் இன்னும் வேகமெடுக்க வேண்டும் என்பதே அந்த சவால்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT