Published : 11 Sep 2024 09:34 AM
Last Updated : 11 Sep 2024 09:34 AM

புதிய கல்வி கொள்கையை ஏற்றுக் கொண்டால் தமிழக அரசுக்கு உரிய நிதி வழங்கப்படும்: மத்திய இணையமைச்சர் எல்.முருகன்

மத்திய இணையமைச்சர் எல்.முருகன்.

குன்னூர்: தமிழக அரசு புதிய கல்விக் கொள்கையை ஏற்றுக்கொண்டால், உரியநிதி வழங்கப்படும் என்று மத்திய இணையமைச்சர் எல்.முருகன் கூறினார்.

நீலகிரி மாவட்டம் குன்னூரில் பாஜக உறுப்பினர் சேர்க்கையை நேற்று தொடங்கிவைத்த மத்திய இணையமைச்சர் எல்.முருகன், பின்னர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

நாடு முழுவதும் பாஜக உறுப்பினர் சேர்க்கை தீவிரமாக நடைபெற்று வருகிறது. கடந்த 2-ம் தேதிபிரதமர் மோடி உறுப்பினர் சேர்க்கையைத் தொடங்கி வைத்தார். உலகிலேயே அதிகமான உறுப்பினர்களைக் கொண்ட கட்சி பாரதிய ஜனதா கட்சியாகும்.

தற்போது பாஜகவில் 10 கோடிஉறுப்பினர்கள் உள்ளனர். மொத்தம் 11 கோடி உறுப்பினர்களை சேர்க்க வேண்டும் என்ற இலக்குடன் பாஜக பயணிக்கிறது. அதேபோல, தமிழகத்தில் ஒரு கோடி உறுப்பினர்களைச் சேர்க்க வேண்டும் என்ற இலக்கை நிர்ணயித்து, அதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகிறோம்.

தமிழக முதல்வர் ஏற்கெனவே ஸ்பெயின், துபாய் உள்ளிட்ட நாடுகளுக்குச் சென்றபோது கிடைத்த முதலீடு என்ன என்பதே கேள்விக்குறியாக உள்ளது. அவர்புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டதாக கூறும் நிறுவனங்கள், ஏற்கெனவே இந்தியாவில் உள்ளன. இது ஒரு கண்துடைப்புக்கான பயணமாக உள்ளது. அவரது பயணத்தால் தமிழகத்துக்கு எந்த முதலீடும் கிடைக்கப்போவதில்லை.

தமிழகத்தில் ஆன்மிகம் பேசினால், அவர்களைக் கைது செய்ய வேண்டும் என்ற நோக்குடன் திமுகஅரசு செயல்படுகிறது. தமிழகம் மிகப் பெரிய ஆன்மிக பூமியாகும். ஆழ்வார்களும், நாயன்மார்களும் ஆண்ட பூமி. இங்கு போலி திராவிடத்துக்கு இடமில்லை.

பாஜக எங்கும் இந்தியைத் திணிப்பதில்லை. புதிய கல்விக் கொள்கை மூலம், ஆரம்பக் கல்வியை தாய் மொழியான தமிழில் கொண்டு வர வேண்டும் என்று வலியுறுத்துகிறோம். தற்போதைய காலகட்டத்தில், புதியதொழில்நுட்பத்துக்கு ஏற்ப, மேம்படுத்தப்பட்ட புதிய கல்விக் கொள்கையை ஏற்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறோம். தமிழக அரசு புதிய கல்விக் கொள்கையை ஏற்றுக்கொண்டால், உரிய நிதி வழங்கப்படும். இவ்வாறு எல்.முருகன் கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x