Published : 11 Sep 2024 07:03 AM
Last Updated : 11 Sep 2024 07:03 AM

தமிழகம் உள்ளிட்ட தென் மாநிலங்களில் தற்கொலை விகிதம் அதிகமாக உள்ளது: மனநல மருத்துவர் லட்சுமி விஜயகுமார் கருத்து

சென்னை: தேசிய குற்ற ஆவணக் காப்பகம் வெளியிட்டுள்ள தரவுகளின்படி தமிழ்நாடு உள்ளிட்ட தென் மாநிலங்களில் தற்கொலை அதிகமாக நடைபெறுகிறது என்று மனநல மருத்து வரும் சினேகா தற்கொலைத் தடுப்பு மையத்தின் நிறுவனருமான லட்சுமி விஜயகுமார் கூறினார்.

உலக தற்கொலைத் தடுப்பு தினம் செப்.10-ம் தேதி (நேற்று) கடைபிடிக்கப்பட்டது. இதையொட்டி சினேகா அமைப்பு ஒவ்வோர் ஆண்டும் தற்கொலைத் தடுப்புக்கான விழிப்புணர்வை அதிகரிக்கும் வகையிலான விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது.

இந்த ஆண்டு தமிழ்நாட்டில் தற்கொலை தடுப்புப் பணிகளில் ஈடுபட்டிருக்கும் அரசு சாரா நிறுவனங்களையும் அவற்றின் பணிகளையும் அறிமுகப்படுத்தும் நிகழ்ச்சி சென்னை தரமணியில் உள்ள வி.ஹெச்.எஸ். மருத்துவமனை வளாகத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் தற்கொலைத் தடுப்பு நாளின் முக்கியத்துவம். சினேகாவின் பணிகள் ஆகியவை குறித்து லட்சுமி விஜயகுமார் பேசினார். ``2003-ம் ஆண்டிலிருந்து உலக தற்கொலைத் தடுப்பு தினம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

இந்த ஆண்டு தொடங்கி அடுத்த 3 ஆண்டுகளுக்கான கருப்பொருள் `தற்கொலை குறித்த உரையாடலை மாற்றி அமைத்தல்' (Changing the Narrative on Suicide). தற்கொலை தனி நபர்களின் மனநலப் பிரச்சினையாக சுருக்கிப் பார்க்கப்படுகிறது. ஆனால், அது தீவிரமான சமூக, பண்பாட்டுப் பிரச்சினை.

பிறரின் தலையீட்டினால் பெரும்பாலான தற்கொலைகளைத் தடுத்துவிட முடியும். தேசிய குற்ற ஆவணக் காப்பகம் கடந்த ஆண்டு வெளியிட்ட தரவுகளின்படி 2022-ல் இந்தியாவில் 1,70,924 பேர் தற்கொலை செய்துகொண்டுள்ளனர். தமிழ்நாட்டில் 19,834 தற்கொலைகள் நடந்துள்ளன.

தென்மாநிலங்களில்தான் தற்கொலை விகிதம் மிக அதிகமாக உள்ளது. பதின்பருவ தற்கொலைகளைத் தடுக்க தனியாக இணையவழி கலந்துரையாடல் (சாட்டிங்) சேவையை சினேகா நிறுவனம் தொடங்கியுள்ளது. தமது நெருங்கிய உறவுகளைத் தற்கொலைக்குப் பறிகொடுத்தோரைத் தேற்றுவதற்கும் அவர்களுக்கு ஏற்பட்ட அதிர்ச்சி, குற்ற உணர்வு ஆகியவற்றிலிருந்து மீள்வதற்கும் ’தற்கொலைக்குப் பின்பு ஆதரவு’ (Support After Suicide) என்னும் சேவையைத் தொடங்கியுள்ளோம்.

10,12-ம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வுகளில் தோல்வி அடைந்த மாணவர்கள் உடனடியாக அடுத்த தேர்வு எழுதி தேர்ச்சி பெறச்செய்யும் திட்டம் தமிழ்நாட்டில்தான் முதல் முறையாக அறிமுகப்படுத்தப்பட்டது. இந்தத் திட்டத்தின் மூலம் பொதுத் தேர்வு எழுதும் மாணவர்கள் தற்கொலை செய்துகொள்வது கிட்டத்தட்ட பாதியாகக் குறைந்துள்ளன. இதைப் பிற மாநில அரசுகளும் செயல்படுத்தத் தொடங்கியுள்ளன. தற்கொலையைத் தடுப்பது நம் ஒவ்வொருவரின் பொறுப்பு என்பதை அனைவரும் உணர வேண்டும்'' இவ்வாறு அவர் கூறினார்.

சினேகா அமைப்பின் தலைவரும் தொழிலதிபருமான நல்லி குப்புசாமி, வி.ஹெச்.எஸ். மருத்துவமனையின் கவுரவ செயலர் சுரேஷ், நிகழ்ச்சியில் பங்கேற்ற 30 என்.ஜி.ஓக்களின் பிரதிநிதிகள் நிகழ்ச்சியில் உரையாற்றினர். (தற்கொலை எண்ணத்திலிருந்து மீள்வதற்கு தமிழ்நாடு அரசு மனநல மருத்துவ உதவி எண் 104, சினேகா தற்கொலை தடுப்பு உதவி எண் 044-24640050 ஆகியவற்றைத் தொடர்பு கொள்ளவும்)

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x