Published : 10 Sep 2024 08:45 PM
Last Updated : 10 Sep 2024 08:45 PM
சென்னை: “பிஹாரில் அம்மாநில முதல்வர் நிதிஷ் குமார் அங்கே மதுவிலக்கை அறிமுகப்படுத்தியுள்ளார். அதன்பிறகு அந்த மாநிலத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் மதுவிலக்குக்குப் பிறகு பெண்கள் மீதான வன்முறை பெருமளவு குறைந்திருப்பது தெரிய வந்துள்ளது. பின்தங்கிய மாநிலமான பிஹாரில் அதைச் செய்யும்போது தமிழகத்தில் செய்ய முடியாதா? நிச்சயம் முடியும்,” என்று விசிக தலைவர் திருமாவளவன் கேள்வி எழுப்பியுள்ளார்.
அக்டோபர் 2-ஆம் தேதி நடக்கவிருக்கும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மகளிரணி சார்பில் ‘மகளிர் விடுதலை இயக்கத்தின்’ மாநாடு நடைபெறவுள்ளது. இம்மாநாடு மது - போதைப் பொருட்கள் ஒழிப்பை மையமாகக்கொண்டு நடத்தப்பட உள்ளது. மது - போதைப் பொருட்கள் ஒழிப்பை தேசியக் கொள்கை ஆக்கவேண்டியது ஏன் என்பது குறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதன் விவரம்:
“2016 சட்டப்பேரவைத் தேர்தல் வரை தமிழகத்தில் மதுவிலக்கு - போதைப் பொருள் ஒழிப்பு என்பது அரசியல் கட்சிகளின் வாக்குறுதிகளின் பட்டியலில் இடம்பெற்றுவந்தது. ‘ஆட்சிக்கு வந்தால் உடனே மதுக் கடைகளை மூடுவோம்’ என திமுகவும், விசிக இடம்பெற்ற மக்கள் நலக் கூட்டணியும் வாக்குறுதி அளித்தன. அதிமுகவும் படிப்படியாகக் குறைப்போம் என்று கூறியது. ஆனால் சட்டப் பேரவைத் தேர்தலில் அதிமுக வெற்றிப் பெற்ற பிறகு தனது வாக்குறுதியை அது நிறைவேற்றவில்லை.
மதுக் கடைகள் மூடப்படுவதைத் தமிழக மக்கள் விரும்பவில்லை என சிலர் கூறிவரும் கருத்து உண்மைக்கு மாறானது, உள்நோக்கம் கொண்டது. மரக்காணம் எக்கியர்குப்பத்தில் விஷ சாராயம் அருந்தி உயிரிழந்தவர்களின் வீட்டுப் பெண்கள், “எங்களுக்கு அரசாங்கம் இப்போது நிவாரணம் கொடுத்து என்ன பயன்? இந்த கிராமத்தில் மட்டும் சுமார் 300 பெண்கள் தாலியை இழந்து விதவைகளாக இருக்கிறோம். எங்களை இப்படி ஆக்கியது இந்த சாராயம் தான். அரசாங்கம் முதலில் இந்த சாராயத்தை ஒழிக்கட்டும்” என்று கதறினார்கள் என்ற செய்தி ஊடகங்களில் வெளியாகியிருந்தது. அந்த கிராமத்தில் மட்டுமல்ல, கள்ளக்குறிச்சியிலும் அதே கோரிக்கையைத்தான் பெண்கள் முன்வைத்தார்கள். தமிழகத்திலுள்ள பெண்களின் ஒட்டு மொத்தக் கோரிக்கையும் அதுதான். மதுவால் அதிகம் பாதிக்கப்படுகிறவர்கள் பெண்கள்தான்.
பிஹாரில் அம்மாநில முதல்வர் நிதிஷ்குமார் அங்கே மதுவிலக்கை அறிமுகப்படுத்தியுள்ளார். அதன்பிறகு அந்த மாநிலத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் மதுவிலக்குக்குப் பிறகு பெண்கள் மீதான வன்முறை பெருமளவு குறைந்திருக்கிறது எனத் தெரிய வந்துள்ளது. பின்தங்கிய மாநிலமான பிஹாரில் அதைச் செய்யும்போது தமிழகத்தில் செய்ய முடியாதா? நிச்சயம் முடியும். மது விற்பனை மூலம் கிடைக்கும் நிதி இல்லாவிட்டால் மாநில அரசு மக்கள் நலத் திட்டங்களை செயல்படுத்த முடியாது என ஒரு வாதம் முன்வைக்கப்படுகிறது. மாநிலத்தில் உழைக்கக்கூடிய மக்களைக் குடி நோயாளிகளாக்கிவிட்டு மனித வளத்தைப் பாழாக்கிவிட்டு மக்கள் நலத் திட்டங்களை செயல்படுத்தி என்ன பயன்?
மாநிலத்துக்கு வருமானம் வேண்டுமென்றால் மத்திய அரசு ஜிஎஸ்டி என்ற பெயரில் பறித்துச் செல்லும் வரி வருவாயில் உரிய பங்கைப் பெற வேண்டும். மத்திய அரசு மறுத்தால் மக்களைத் திரட்டிப் போராட வேண்டும். அதற்கு மாறாக மக்களைக் குடி நோயாளி ஆக்குவது தீர்வல்ல. இப்போது மாநில அரசின் வருவாய் அதிகரிப்பதற்குப் புதிய வழி பிறந்துள்ளது. ஒரு மாநிலத்தில் இருக்கும் கனிம வளங்களின்மீது வரி விதிக்கும் அதிகாரம் மாநில அரசுகளுக்கே உள்ளது என உச்ச நீதிமன்றம் இப்போது தீர்ப்பளித்துள்ளது. அந்தப் புதிய வருமான வாய்ப்பைப் பயன்படுத்திக்கொண்டு மதுக்கடைகளை மூட தமிழக அரசு முன்வரவேண்டும்
அரசமைப்புச் சட்டத்தின் உறுப்பு 47-ல் கூறியுள்ளவாறு, மது விலக்கைத் தேசியக் கொள்கையாக அறிவிப்புச் செய்ய வேண்டும். மதுவிலக்கை நடைமுறைப்படுத்த முன்வரும் மாநில அரசுகளுக்கு வருவாய் இழப்பை ஈடு செய்ய சிறப்பு நிதி வழங்க வேண்டும். போதைப் பொருள் நடமாட்டத்தையும், பயன்பாட்டையும் கட்டுப்படுத்த மத்திய அரசு உறுதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மதுக் கடைகளை முற்றிலுமாக மூடுவதற்கான கால அட்டவணையை அறிவித்திட வேண்டும். போதைப் பொருட்கள் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்த உறுதியான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். மது - போதைப் பொருட்கள் ஒழிப்புப் பரப்புரையில் மகளிர் சுய உதவிக் குழுக்களை ஈடுபடுத்த வேண்டும். குடி - போதை நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கவும் மறுவாழ்வளிக்கவும் தமிழக அரசு ஏற்பாடு செய்ய வேண்டும்,” என்று அவர் கூறியுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Loading comments...