Published : 10 Sep 2024 07:57 PM
Last Updated : 10 Sep 2024 07:57 PM
நாகர்கோவில்: கன்னியாகுமரி அருகே இன்று கடல் சீற்றத்தால் 4-வது படகையும் மீனவர்களுடன் கடல் அலை இழுத்துச் சென்றது. நல்லவேளையாக மீனவர்கள் சிக்கல் ஏதுமின்றி உயிர் தப்பினர். தொடர்ச்சியாக அலைகள் படகுகளை இழுத்துச் செல்லும் சம்பங்களால் மீனவர்கள் அச்சமடைந்துள்ளனர்.
கன்னியாகுமரி அருகே கோவளம் கடற்கரையில் கடந்த வாரம் தலா 6 மீனவர்களுடன் மீன்பிடித்துத் திரும்பிய 2 பைபர் படகுகள் கடல் சீற்றத்தில் சிக்கி கவிழ்ந்தன. இதில் இரு படகிலும் இருந்த 12 மீனவர்கள் கடலில் தத்தளித்தனர். அவர்கள் பிடித்து வந்த மீன்கள், வலை மற்றும் மீன்பிடி உபகரணங்கள் அனைத்தும் கடலில் மூழ்கின. பின்னர் கரையில் நின்ற மீனவர்கள் சென்று கடலில் உயிருக்கு போராடிய மீனவர்களை மீட்டு படகுகளையும் கரை சேர்த்தனர்.
இதைப்போல் நேற்றும் கோவளம் மீனவ கிராமத்தில் இருந்து கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற படகு ஒன்று கடல் சீற்றத்தில் சிக்கி கவிழ்ந்தது. அதிலிருந்த மீனவர்களையும், படகையும் சக மீனவர்கள் மீட்டனர். இந்நிலையில் இன்று மீண்டும் கோவளத்தில் கடல் சீற்றத்தில் மேலும் ஒரு படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. கோவளம் டி.சி. நகரை சேர்ந்த சூசை ஆன்றணி (55) என்பவருக்குச் சொந்தமான வள்ளத்தில் அவரும் இன்னும் 5 மீனவர்களும் இன்று அதிகாலை கோவளம் கடற்கரையில் இருந்து கடலுக்கு மீன்பிடிக்க புறப்பட்டுச் சென்றனர்.
இவர்கள் கடலுக்குள் சற்று தூரம் சென்ற போது கடலுக்குள் எழுந்து வந்த ராட்சத அலை இவர்கள் சென்ற படகை கடலுக்குள் இழுத்துச் சென்றுள்ளது. இதனால் படகில் இருந்து 6 மீனவர்களும் கடலில் விழுந்து தத்தளித்தனர். கடல் அலை மீனவர்களை படகுடன் இழுத்துக் கொண்டு சென்றது. அவர்களது படகு கன்னியாகுமரி சன்செட் பாயின்ட் பகுதியில் கரை ஒதுக்கியது. இதனால் சுமார் 2 மணி நேரம் கடலில் தத்தளித்தபடி மீனவர்கள், ஒரு வழியாக கரை வந்து சேர்ந்தனர். இதில் மீனவர் சூசை ஆன்றணி காயமடைந்தார். அவர் கன்னியாகுமரியில் தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். மற்ற 5 மீனவர்களும் காயம் இன்றி தப்பினர்.
இச்சம்பவத்தில் வலை மற்றும் மீன்பிடி உபகரணங்கள் கடலில் மூழ்கி சேதமடைந்தன. இது குறித்து கன்னியாகுமரி மெரைன் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இன்ஸ்பெக்டர் நவீன் தலைமையில் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். கோவளத்தில் கடலரிப்பு தடுப்புச் சுவரை பாதுகாப்புடன் நீட்டித்தால் மட்டுமே மீனவர்கள் கடல் சீற்றத்தில் இருந்து தப்பிக்க முடியும். எனவே தாமதமின்றி கடலரிப்பு தடுப்புச் சுவர் நீட்டிப்பு பணியை துவங்க வேண்டும் என மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT