Published : 10 Sep 2024 06:19 PM
Last Updated : 10 Sep 2024 06:19 PM

பொங்கல் பண்டிகைக்கான ரயில் டிக்கெட் முன்பதிவு செப்.12 முதல் தொடக்கம்

சென்னை: பொங்கல் பண்டிகை முன்னிட்டு, சொந்த ஊர்களுக்கு செல்வோர் வசதிக்காக, விரைவு ரயில்களில் டிக்கெட் முன்பதிவு வரும் வியாழக்கிழமை (செப்.12) முதல் தொடங்குகிறது.

ஒவ்வொரு ஆண்டும் தீபாவளி, பொங்கல் உள்ளிட்ட பண்டிகை காலங்களில் மக்கள் சொந்த ஊர்களுக்கு சென்று பண்டிகையை கொண்டாடுவது வழக்கம். இதில், பெரும்பாலானவர்கள் ரயிலில் டிக்கெட் முன்பதிவு செய்து பயணிப்பார்கள். ரயில்வேயில் 120 நாட்களுக்கு முன்பே டிக்கெட் முன்பதிவு செய்து கொள்ளும் வசதி இருக்கிறது. எனவே, சென்னை உள்ளிட்ட பெருநகரங்களில் இருந்து சொந்த ஊர்களுக்குச் செல்ல திட்டமிட்டுள்ளவர்கள், இந்திய ரயில்வே உணவு மற்றும் சுற்றுலா கழகம் எனப்படும் ஐ.ஆர்.சி.டி.சி. இணையதளம் வாயிலாகவும், டிக்கெட் முன்பதிவு மையங்களிலும் டிக்கெட் முன்பதிவு செய்து கொள்வார்கள்.

இந்த நிலையில் அடுத்த ஆண்டு ஜன.13ம் தேதி திங்கள் கிழமை போகி பண்டிகையும், ஜனவரி 14ம் தேதி (செவ்வாய்க்கிழமை) பொங்கல் பண்டிகை, 15ம் தேதி (புதன்கிழமை) மாட்டுப் பொங்கலும் வருகின்றன. மேலும் 16ம் தேதி (வியாழக்கிழமை) காணும் பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு, சொந்த ஊர்களுக்குச் செல்வோர் வியாழக்கிழமை (செப்.12) முதல் ரயிலில் டிக்கெட் முன்பதிவு செய்து கொள்ளலாம்.

அதாவது, ஜன.10ம் தேதி (வெள்ளிக்கிழமை) பயணம் செய்ய விரும்புவோர் வரும் வியாழக்கிழமையும் (செப்.12-ம் தேதி), ஜன.11ம் தேதிக்கு பயணம் செய்ய செப்.13ம் தேதியிலும், ஜன.12ம் தேதிக்கு செப்.14ம் தேதியும், ஜன.13ம் தேதி போகி பண்டிகை அன்று பயணம் செய்ய செப்.15ம் தேதியும் டிக்கெட் முன்பதிவு செய்து பயணம் செய்யலாம்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x